
பாடல்
எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ – வவ்விப்
பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்
சிவபோகசாரம்
கருத்து – உலக உயிர்களில் ஈசன் நிறைந்து இருப்பதால், ஈசன் நம்மைக் காப்பான் என்ற உறுதியான எண்ணம் கொள்ள செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல்.
பதவுரை
உடல் பற்றியும் அதில் வரும் துன்பங்கள் பற்றியும் துயர் கொண்டு வாடும் நெஞ்சமே! எல்லா உயிர்களிடத்திலும் அவைகளின் வினைகளை நீக்கி அவைகளை காக்க ஈசன் இருக்கிறான் அல்லவா; அவ்வாறான உயிர் கூட்டத்தில் நாமும் ஒருவன் அல்லவா; ஈசன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதால் பிற உயிர்களை வெறுத்தல் முதலியன செய்தல் ஆகாது; எனவே வருகின்ற இன்ப துன்பங்கள் தானே வரும் என்று கொண்டு அவ்வாறு வாடுதலை விலக்க வேண்டும்.
விளக்க உரை
- வவ்வுதல் – கவர்தல், பற்றிக்கொள்ளுதல், வாருதல்
- புழுங்குதல் – ஆவியெழவேகுதல், சிறுக வேகுதல், வெப்பத்தாற் புழுக்கமாதல், கோபத்தால் வெம்புதல், வேர்த்தல், பொறாமைப்படுதல், வாடுதல்
- வருகுவதும், புழுங்குவதும் – வருவதும், போவதும் ஈசன் செயலால் நிகழ்த்தப்படுதலை கூறுபவை
- வருகுவதும் தானே வரும், எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ என்ற வாக்கியங்களை இணைத்து வினைபற்றி வரும் துயர்கள் வரும் என்பதும் அவைகள் வராமல் காக்க ஈசன் இருக்கிறான் என்பதும் பொருள் பெறப்படும்