
பாடல்
ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே
அகஸ்தியர் ஞானம்
கருத்து – யோக நெறியில் துரியம் தாண்டி துரியாதீதத்தில் நிலை பெற மூலாதார மூர்த்தியாக கணபதியைக் காணுதலே முதன்மையானது என்பதையும் அதுவே ஞானத்தினை தரும் என்பதையும் விளக்கும் பாடல் பாடல்.
பதவுரை
அண்ணாக்கு எனப்படுவதும், கூடத்தக்கதான இடமும் ஆன உச்சிவெளி ஆகிய துரியம் தாண்டி துரியாதீதத்தில் நின்று(அஃதாவது பர ஆகாசத்தில்), உமையவளுக்கும், கணபதிக்கும் முற்பட்ட காலமான காலத்தில் ஒளி பொருந்தி நிற்கக் கூடியதான அம்பரம் எனப்படும் சிற்றம்பலத்தில் அகாரமும், உகாரமும் சேர்ந்ததானதும் எல்லாவற்றிற்கும் மேலானதுமான பரம் எனும் நிலை சாதாரண நிலையில் இருக்கும் ஒருவருக்கு எட்டாது; வேதவடிவமாக இருக்கக்கூடியதான உன்னுடைய உயிர்தான் சிவ வடிவம் என்று உணர்ந்தும், பாற்கடலில் பள்ளி கொண்டவன் வடிவம் மேக வடிவமாக உணர்ந்தும், போற்றத் தக்கதான கணபதியினை அகக்கண்ணில் கண்டுவிட்டால் இந்த உடலில் உயிருடன் கலந்து மேலே குறிப்பிட்ட ஞானம் கிட்டும்.
விளக்க உரை
- அகத்தியர் புலத்தியருக்கு உரைத்தது.
- உமையும், கணபதியும் சக்தியின் வடிவங்கள், ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் கணபதியும், மணிபூரகத்தில் திருமாலும், ஆஞ்ஞையில் சதாசிவமும் வீற்றிருப்பது அறியத் தக்கது.
- ஒண்ணுதல் – இயலுதல், தக்கதாதல், கூடுதல், ஒளியுடைய நெற்றி
சித்தர் பாடல் என்பதாலும் மனித பிறப்பு சிறுமை உடையது என்பதாலும் பிழை ஏற்பட்டு இருக்கலாம். பிழை எனில் பிறப்பு சார்ந்தது, நிறை எனில் குருவருள்.