அமுதமொழி – பிலவ – பங்குனி – 23 (2022)


பாடல்

நிலைகெட விண்ணதிர நிலம்
   எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி
   யேவரு வேனெதிரே
அலைகட லால்அரையன் அலர்
   கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாதவண்ணம் நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்துஉத்தமனாகிய ஈசன் அருளுவதன் பொருட்டு தானே கைலாச மலையில் இருந்து இறங்கிவந்து அருள் புரிந்த திறத்தை வியந்து உரைக்கும் பாடல்.

பதவுரை

திருக்கயிலைமலையில் வீற்றிருந்து அருளும் முதல்வனான உத்தமன், விண்ணுலகம் தனது இயல்பு நிலையில் இருந்து கெட்டு அதிரும்படியாகவும்,  நிலவுலகம் முழுதும் அதிரும்படியாகவும் மலையில் திரியும் யானை மீது ஏறி வந்து, தனது மலையாகிய கைலாச மலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே வந்து, அலைகின்ற கடலுக்கு அரசனாகிய வருணனை பூக்களைக் கொண்டு எல்லொருக்கும் முன்னரே வந்து வணங்குமாறு செய்து, உடல் அழியாது உயர்ந்து நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அளித்தருளினான்; அவனது திருவருள் என்னே!

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஆடி – 12 (2020)


பாடல்

இரவத்திடு காட்டெரி யாடிற்றென்னே
இறந்தார்தலை யிற்பலி கோடலென்னே
பரவித்தொழு வார்பெறு பண்டமென்னே
பரமாபர மேட்டி பணித்தருளாய்
உரவத்தொடு சங்கமொ டிப்பிமுத்தங்
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிகொண்
டரவக்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருஅஞ்சைக்களத்து நாயகனை கேள்விகள் கேட்டு அருளப்பண்ண வேண்டும் எனும் பாடல்.

பதவுரை

உருவத்தில் சிறியதாக இருக்கும் இப்பி, ஆயிரம் இப்பிகளுக்கு தலைவனாக இருக்கும்  சிப்பி, முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதும், வலம்புரிச்சங்கை மேலே கொண்டு வலிமையாகவும், பெரியதாகவும் முழங்கம் செய்வதும், ஆர்ப்பரிக்கும் கடலினை கொண்டு அழகிய கரையினை உடையதுமான ‘மகோதை’ என்னும் நகரித்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, தன்னிடம் அடையும் உடல்களை எல்லாம் சமமாக எரிப்பதால் வலிமை உடையது ஆகிய புறங்காட்டில் எரியில் ஒலிக்குமாறு நின்று ஆடியது என்? இறந்தவரது தலை மண்டை ஓட்டினை பாத்திரமாக்கி  பிச்சை ஏற்பது என்? உன்னை வாழ்த்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? மேம்பட்டவர்க்கு எல்லாம் மேலானவனே, விருப்பம் கொண்டதை சொல்லி அருளுவாய்.

விளக்க உரை

  • திருஅஞ்சைக்களம் –  சுந்தரர் முக்தித் தலம் (இன்று ஆடி சுவாதி, சுந்தரர் முக்தி அடைந்த தினம்)
  • இரவம் – ஒலி
  • பரவுதல் – வாழ்த்துதல்

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅஞ்சைக்களம்


தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருஅஞ்சைக்களம்

  • ஈசன் சுயம்பு மூர்த்தி
  • தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ள அஞ்சைக்களத்தபர்
  • அம்மன் தனி சன்னதி இல்லாமல் கருவரைக்குள் ஈசனுன் இணைந்து சதாசிவ வடிவம்
  • கேரள அமைப்பில் அமைந்த திருக்கோயில். (வெடி வெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கம் உட்பட)
  • பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம்
  • கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானை இங்கிருந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்றத் தலம். (இறங்கிய இடம் வீதியில் நடுவில் உள்ள பெரிய மேடையை ஆகிய ‘யானைவந்த மேடை’)
  • கழறிற்றறிவார் என்றழைக்கப்படும் சேரமான் பெருமாள் நாயனார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலம் ( குருபூசை நாள் : ஆடி – சுவாதி)
  • சுந்தரர் கயிலை சென்ற ஆடி சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் / விழா ( அன்று மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை)
  • சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 1 : தாம் நாள் தோறும் செய்யும் பூசையின் முடிவில் நடராஜப் பெருமானின் சிலம்பு ஓசையைக் கேட்கும் பேறு பெற்றவர். ஒரு நாள் சிலம்போசை பூசை முடிவில் கேட்கப் பெறவில்லை. நாயனார் மிக வருந்தி உயிர்விடத் துணிந்த போது சிலம்போசை கேட்டார். “ஐயனே! முன்பு நான் கேளாமற் போனதற்கு காரணம் என்னவோ” என நாயனார் இறைவனிடம் முறையிட்ட போது “அன்பனே வருந்த வேண்டாம்! கனகசபையில் நம் முன்னே சுந்தரன் வழிபட்டு செந்தமிழால் எம்மைப் பாடினான். அது கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டதால் உன் பூசையில் சிலம்பிசைக்க தாமதித்தோம்” என பதில் உரைத்தார். சிதம்பரத்தில் போற்றி பாடியது பொன் வண்ண திருவந்தாதி ; திருவாரூரில் பாடியது மும்மணிக் கோவை 
  • சேரமான் பெருமான் சிறு குறிப்பு – 2 : திருக்கயிலையில் இறைவனை அடைந்த சுந்தரர் இறைவனிடம் தன் தோழர் சேரமான் பெருமாளையும் திருக்கயிலாயத்தில் அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க எம்பிரான் தோழர் ஆகிய இறைவனும் அனுமதி அளித்தார்; சேரமான் பெருமான் இறைவன் முன் வந்து வணங்கி ஆசு கவியாக ஓர் உலா (திருக்கயிலாய உலா) ஒன்று இறைவன் மீதுப் பாடினார். தமிழ்க் காப்பியங்களில் முதன் முதலாக பாடப்பட்ட உலா
  • அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ள துவஜஸ்தம்பம்
  • வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வதுபோலவும், எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவதுபோலவும் அமைக்கப்பட்டுள்ள் யானை சிற்பங்கள் (இடம் : கிழக்கு ராஜகோபுர நுழைவாயில் பக்க சுவர்)
  • ‘திருவஞ்சைக் களத்து சபாபதி’ என்று எழுதப்பட்டுள்ள பஞ்சலோக நடராசர்
  • செப்புத் திருமேனிகளாக சுந்தரர், சேரமான் உருவங்கள்

 

தலம்

திருஅஞ்சைக்களம்

பிற பெயர்கள்

திருவஞ்சிக்குளம்

இறைவன்

அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்

இறைவி

உமையம்மை

தல விருட்சம்

சரக் கொன்றை

தீர்த்தம்

சிவகங்கை

விழாக்கள்

மாசி மகா சிவராத்திரி

மாவட்டம்

 

திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை ௦5:௦௦ AM முதல் 11:0௦ AM வரை
மாலை ௦5:௦௦ PM முதல் ௦8:0௦ PM வரை

ஸ்ரீ மஹாதேவ சுவாமி திருக்கோயில்

ஸ்ரீ வாஞ்சிகுளம் – அஞ்சல், (வழி) கொடுங்களூர் – 680 664. கேரளா – திருச்சூர் மாவட்டம்

0487-2331124

வழிபட்டவர்கள்

சேரமான், சுந்தரர், பரசுராமர்

பாடியவர்கள்

சுந்தரர் 1 பதிகம்

நிர்வாகம்

 

இருப்பிடம்

கேரளா சென்னை – கொச்சி இருப்புப்பாதையில் ‘இரிஞாலக்குடா’ நிலையத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவு; திரிச்சூரிலிருந்து 32 கி. மீ. தொலைவு

இதர குறிப்புகள்

மலை (சேர) நாட்டுத் தலம்

 

பாடியவர்           சுந்தரர்
திருமுறை           7               
பதிக எண்           04              
திருமுறை எண் 1

பாடல்

தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே
அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள்
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே

பொருள்

கடின தன்மையால் மலைக்கு நிகராகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றியும் ஈர்த்து வந்தும் எறிந்தும் முழங்கி மோதுகின்றதும் ஆன கடலின் அழகிய கரையில்  “மகோதை” என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, “திருவஞ்சைக்களம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ உன்னுடைய தலைக்கு அணிகலமாகத் தலை மாலையை அணிந்தது என்? திருச்சடையின்மேல் ‘கங்கை’ என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அந்த உடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?

விளக்க உரை

  • சிவன், தலைமாலையை மார்பில் மட்டுமின்றி உருத்திராக்கம் போல் தலையிலும் அணிந்துள்ளான் என்பது பற்றியது; தலைகள் – இறந்த பிரமன் முதலியோருடையவை
  • கதம் – சினம்
  • ‘மகோதை’ என்பது நகரம்; ‘அஞ்சைக்களம்’ என்பது திருக்கோயில்

 

 

பாடியவர்           சுந்தரர்
திருமுறை           7               
பதிக எண்           04              
திருமுறை எண் 8

 

பாடல்

வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்
விளங்குங்குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத்
தலைபத்தொடு தோள்பல இற்றுவிழக்
கறுத்தாய்கடல் நஞ்சமு துண்டுகண்டங்
கடுகப்பிர மன்தலை யைந்திலும்ஒன்
றறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே

பதவுரை

ஒளி உடைய குழையை அணிந்த காதினை உடையவனும், வேதத்திலால் மட்டுமே அறியக்கூடியவனும், கடலின் அழகிய கரையில் இருக்கும் ‘மகோதை’ என்னும் நகரின்கண் உள்ளதும், அழகு நிறைந்த சோலைகளையுடையதும் ஆன ‘திருவஞ்சைக்களம்’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே! நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழும்படி நெரித்தாய்; பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு கண்டம் கறுப்பு கொண்ட நிறத்தவன் ஆயினாய்; பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை அறுத்தாய்; அடியேன் மணவாழ்க்கையை மனத்தாலும் வெறுத்து உடம்பாலும் துறந்து விட்டேன்.

விளக்க உரை

  • வேதியன் – அந்தணன், பிரமன், கடவுள், வேதவேத்தியன்; வேதத்தினாலே அறியக்கூடியவன், கடவுள், சீனக்காரம்
  • இனி எனக்கு அருள் செய்யத் தகும் என்பது குறிப்பெச்சம்
  • இலங்கைக்கு இறையை நெரித்தல் – அழித்தல் , பிரமன் தலையை அறுத்தல் – வினைத் தொடக்கை அறுத்தல், நஞ்சுண்டமை – அருள் செய்தல் என்று எடுத்துக்காட்டியவாறு.
  • செவியைச் சிறப்பித்தது – தம் முறையீட்டைக் கேட்டருளல் வேண்டும் எனும் பொருள் பற்றியது

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்