
பாடல்
சொன்னந் தருங்குருவே சோணா சலத்தானே
இன்னம் பிறந்தாலு மிப்படிநின் – சன்னிதியை
நாடக் கிடைத்திடுமோ நன்னெஞ்சே நாமவரைக்
கூடக் கிடைத்திடுமோ கூறு
திருவருணைத் தனிவெண்பா – குகைநமசிவாய சுவாமிகள்
கருத்து – விலை மதிக்க இயலா புறப்பொருள்கள் கிடைத்தாலும் உன்னுடைய அருள் கிடைக்கப் பெறுமோ என்று நினைந்து உருகும் பாடல்.
பதவுரை
சொன்னம் எனப்படும் தங்கத்தினை தரக்கூடிய குருவே, சோணாசலம் என்ற திருவண்ணாமலையில் வாழும் ஈசனே! இன்னமும் பிறப்பு என்று ஒன்று இருக்குமாயின் இவ்வாறே உன்னுடைய சன்னதியை நாடி இருக்குமாறு கிடைத்திடுமோ? நன்நெஞ்சே உன்னுடைய திருநாமத்தினை கூறும் படியான வாழ்வு மட்டுமாவது கிடைக்கப் பெறுமோ?