
பாடல்
வரிசைப்பிடாரிக்குப் பொங்கல்வையாமலே மழைபெய்யவில்லையென்பார்
வந்தகொடுநோயறிந்த வுழ்த மீயாம விம்மனிதனுமிறந்ததென்பார்
சரிவரச் செய்தொழின் முயற்சியில்லாமலேதான் குடியிளைத்ததென்பார்
தன்றிறமையாலே முன்சொன்னபடி தப்பாது சபதமு முடித்தனென்பார்
ஒருவனவனெதிராளி போனபின்பதி கனகயோகம் வந் துற்றதென்பார்
உபாத்தியாயர் திறமில்லையாகையாலே மகற்குயர்கல்வி யில்லையென்பார்
சரியிவையெலாமீசர் செய்கையென்றறியாமற் றரணியின் மயங்குவார்கள்
தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே
உண்ணாமுலையம்மன் சதகம் – மகாவித்வான் சின்னகவுண்டர்
கருத்து – எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் அனைத்தும் தன்னால் நடக்கின்றன என்று மயங்கி இருக்கும் மனிதர்கள் குறித்து பேசும் பாடல்.
பதவுரை
விரும்பிய எல்லாவற்றையும் அருளும் கற்பகமரமொத்த அருணகிரி ஈசனும் உறைந்து உலகுக்கு தாயான உண்ணாமுலை அம்மையே! ஊர்காவல் தெய்வங்களாக விளங்கும் பிடாரி போன்ற தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யாமல் மழை பெய்யவில்லை என்று கூறுவார்; ஊழ் பற்றி தொடர்ந்து வரும் கொடு நோய் பற்றி அறிந்தும் அதுபற்றி உரையாமல் மனிதன் இறந்துவிட்ட செய்தியினை உரைப்பார்; தனக்கு உண்டான தொழிலினை சரியான முயற்சியுடன் செய்யாமல் தன்னுடைய குடி வீழ்ந்தது என்று உரைப்பார்; செயல்கள் அனைத்தும் இறைவிருப்பத்தும் நடத்தப்படுகின்றன என்பதை உணராமல் தான் முன்னர் உரைத்தப்படி தப்பாமல் நடந்து சபதம் முடித்துவிட்டதாக உரைப்பார்; எதிரில் ஒருவன் வந்து பேசிச்சென்றப்பின் நிலைத்த புகழ், செல்வம், செல்வாக்கு அமையப் பெற்றதான மிகப்பெரிதான கனக யோகம் வந்து சென்றது என்று உரைப்பர்; கற்றுத்தரும் ஆசிரியர் திறமை இன்மையால் தன்னுடைய மக்களுக்கு உயர்கல்வி வாய்க்கவில்லை என்று உரைப்பார்; உரைக்கப்பட்ட இவை எல்லாம் ஈசன் செயல் என்று அறியாமல் இந்த புவியினில் மயங்கி இருப்பார்கள்.
விளக்க உரை
- மேவு – மேன்மை
- மேலே குறிப்பிட்ட எல்லாம் உலக வழக்கம் எனும் தலைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.