இசைக்கருவிகள் அறிமுகம் : ஆகுளி (வேறு பெயர் – சிறுகணாகுளி)
ஓவியம் : shaivam.org
பாடல்
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும் கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்
பதவுரை
வெல்லும் படையும், அஞ்சாமையாகிய வீரம் கொண்ட சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் இருந்து எழும் கொல், எறி, குத்து என்றும் ஆரவாரத்துடன் கூடிய ஒலிகள் மட்டுமல்லாமல், சிலம்பின் பருக்கைக் கற்கள் கொண்டதாகிய சில்லரியின் ஓசையும், உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக உயரத்தினின்று பள்ளத்தாக்கில் மலையில் வீழும் அருவிகளாதலின் அவற்றின் வேகமும், கற்கள் மோதுதல் ஏற்படுவதால் தோன்றும் ஒலியும், வளைந்து வளைந்து செல்லுதலால் ஏற்படும் ஒலிகள் முதலியனவும் அங்கே எங்கும் உள்ளன.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, ஒளிரும் வண்ணங்கள் உடைய முழு நிலவைப் போன்றவளே, அனாதி காலம் தொட்டு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பவளே, இனிமை நிறைந்த முக்கனிகளில் பலா போன்றவளே, அழகிய மணம் பொருந்திய சோலை போன்றவளே, போற்றுதலுக்கு உரியவளே, கடல் போன்று பரந்து யோகியர்கள் உள்ளத்தில் குடியிருப்பவளே, ஈசனிடம் வாதாடி வாதாடிய பேரொளி விளக்கே, வினைகள் பற்றி எடுத்த எனது பிறவிகள் எண்ணில் அடங்காது; அவைகளை ஏட்டிலும் எழுத முடியாத அளவு மிக நீண்டதானது.; நீண்ட மரம் போல வெட்டப்பட்டு எமனுடைய உலகமாகிய எமலோகத்தை அடைந்து பெண்ணிடத்தில் மயக்கம், வினை பற்றி நின்றதனால் அது பற்றி விளைந்ததாகிய வினைமயக்கம், இப்பிறவி பற்றியதால் ஏற்பட்ட பிறவி மயக்கம் ஆகியவைகள் தொலையாது, பித்தர்களுடனும், சண்டாளன் எனப்படும் புலையருடனும் பேய் பிடித்தவர்களை அலைவது போல் அலைவேனோ?
தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால் எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு இல்லையென்று எண்ணுவீர் கோனாரே
இடைக்காடர்
பதவுரை
உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் (செயலிழக்கச் செயும் சோம்பலில்) மனத்தை இழக்காது மனமொருமைப் படுத்தி வந்த பொருள் அறியும் முயற்சியாகிய தவத்தில் ஈடுபடா விட்டால், இப்பிறவியின் முடிவில் (எல்லையில்) கடவுளாகிய மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து அதனுடன் இணையும் திறன் நமக்கு கிடைக்காது என்ற உண்மையை உணர வேண்டும்.
விளக்கஉரை
தொந்தம் – இரட்டை, புணர்ச்சி, தொடர்பு, பகை, மரபுவழிநோய், ஆயுதவகை, பழமை, நெருங்கிய பழக்கம்
ஔபரமிகம், நிருபத்ரவம், ஸோபகரணம் என புண்ணியம் மூன்று வகைப்படும்.
ஔபரமிகம்
பாப காரியங்களை செய்யாதிருப்பதாகிய ஔபரமிகம், மனோ வாக்கு காயங்களால் ஏற்படும் பாவங்களை விடுதல் மற்றொரு புண்ணியம் ஆகும். இந்த பாவங்களையும் மனதால் நினைத்து அவற்றை விலக்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுவான். (மூன்று வகையான பாவங்களையும் விடுதல் தபோவிரதம் எனப்படும்.) எல்லா பாவங்களையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ விடவேண்டும். பாவங்களை விடுவது அசாத்தியம் எனினும் மனிதன் பாவங்களை விட்ட உடனே உயர்ந்ததாகிய ரிஷி ஆகிறான். புத்தி குறைவான மனிதர்கள் இந்த வழி அறியாமல் நரகத்தில் வதைபடுகின்றனர்.
நிருபத்ரவம்
சான்றோர்களிடம் இருந்து சாஸ்திரங்களை கேட்டல், ஐம்புலன்களை அடக்குதல், உள்ளத்தில் எப்பொழுதும் திருப்தியாக இருத்தல் ஆகியவற்றால் பாவங்களை விலக்க முடியும். இது நிருபத்ரவம் எனப்படும்.
ஸோபகரணம் (அல்லது) நிருபஸாதனம்
உலகம் முழுவதும் நன்றாக இருக்கும்படி நினைத்தல், சத்தியம், மனத்தூய்மை, உபவாசங்களில் மகிழ்வு கொள்ளுதல், காமக் குரோதங்களை விடுதல், மனதையும், இந்திரியங்களையும் அடங்குதல் மற்றும் உள்ள நற்கருமங்கள் அனைத்தும் நிருபஸாதனம் எனும் புண்ணிய வகையைச் சார்ந்தவை.
சத்யமானது சுவர்கத்திற்கு படி போலவும், துன்பக்கடலில் கப்பல் போலவும் இருக்கிறது. கண்டதையும் கேட்டதையும் உள்ளபடி உரைக்கும் சத்தியத்திற்கு மேலான தானமும் இல்லை; தவமும் இல்லை.
உயர்வு தாழ்வுகளை அறிந்ததால் சத்தியத்தை பேசுவதால் தீர்க்க ஆயுள் உண்டாகும். அவன் சந்ததியின் தொடர்ச்சியை காண்பவனும், உலகின் வரம்பை நிலை நிறுத்துபவனும் ஆகிறான்.
உமை
மனிதன் விரதத்தை எப்படி செய்தால் புண்ணியம் அடைவான்?
இடைக்கருவிகள் அறிமுகம் : முழவம் (குடமுழா, குடபஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் எனும் ஐம்முக முழவம் – தோலிசைக்கருவி)
புகைப்படம் : விக்கிப்பீடியா
பாடல்
துடிக ளோடு முழவம் விம்மவே பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்றாடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
பலவகையான உடுக்கைகள் ஒலிப்பு சப்தங்களோடு முழவங்களும் நிறைந்து ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை கூத்து மேடையாகக் கொண்டு, பொருத்தமான தாள கதிகளோடு பாடல்கள் பாடியும் ஆடியும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.
உண்டு ஆடையின்றி ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்குமாறு திரிபவர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை உடலில் போர்த்து உழலுபவர்களும் கண்டு அறியாத இடமும், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவைகள் ஒன்றாக பொருந்துமாறு நடனம் புரிபவராகவும், அடியவர்களின் துன்பங்களைப் அனாதி காலம் முதல் தீர்த்து அருளிவரும் பரமனார் எழுந்தருளியதும் ஆனது பல்லவனீச்சரமாகும்.
விளக்கஉரை
உடுக்கை – முதலடியில் வரும் உடுக்கை என்பது ஆடை, மூன்றாமடியில் வரும் உடுக்கை என்பது வாத்தியம்.
ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
யான், புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.
விளக்கஉரை
வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
இழிந்த தன்மை உடைய நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு, அதற்குப் பெரிய பொன் முடியைப் அணிவித்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தவாறு பலவாறு பேசுமாறு, உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவனாகி அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி, நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தில் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒத்து என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது.
விளக்கஉரை
‘மதியிலேன்’ – உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பிதல்.
உன் திருவடியை விடும் தன்மை இல்லாத அடியார்களது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற திரு உத்தரகோசமங்கைக்குத் தலைவனே! மலரில் இருக்கும் பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற, திரு உத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?
விளக்கஉரை
‘இறைவனது கருணை ஏகவுருவாய் எங்கும் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பவே அதைப் பெற முடியும்‘ என்பது பற்றியப் பாடல்
‘விடலரியேனை’ – முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை என்னும் உவமைக்கேற்ப உரைத்தல்
மடலின் மட்டு – பூவிதழில் துளிக்கின்ற தேன் (மிகச் சிறிய அளவு)
மதுவெள்ளம்- தேன் வெள்ளம்(பெருகிய மிக அதிக அளவு)
இறைவனுக்கு அடியாரது உடல் ஆலயமாதலின், ‘அடியார் உடல் இலமே மன்னும்’ என்ற அடிகள் கொண்டு அறியலாம்; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலர் வாக்கையும் ஒப்பு நோக்கிக் காண்க.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, அன்னை போன்றவளே, அருட்கடல் போன்றவளே, மலமற்று இருப்பதால் குற்றமற்றவளாக இருப்பவளே, அழகிய தெய்வ வடிவமாக ஆனவளே, உன்னை வணங்கும் அடியவர்களுக்கு அமுத ஞானத்தினை அருளும் அரசே, மாயையின் வடிவானவளே, இந்த செகத்தினை விட கனமான தன்மை கொண்டவளே, மலையரசன் மகளே, பிள்ளையைப் பெற்ற தாய்க்கு, பேய்த் தன்மை உடையவன் ஆயினும், பேசாத ஊமைத் தன்மை உடையவன் ஆயினும், காட்சி காண இயலா குருடன் ஆயினும், ஒலி கேட்க இயலா தன்மை இல்லாத செவிட்டுத் தன்மை உடையவன் ஆயினும், ஊனத்தை உரைப்பதாகிய கால் முடம் போன்ற தன்மை கொண்டவன் என்றாலும் குறையைப் பற்றி நின்று அக்குழந்தையை பிரிய மனம் வருமோ(வராது); (அதுபோல்) நாய்த் தன்மை உடைய யாம் செய்யும் வினைகளை பஞ்சுப் பொதியில் வைத்த தீப்பொறி போல் முழுவதும் அழித்து எம்மை ஞானவடிவாகிய சிவத்துள் சேர்த்து அருள்வாயாக.
விளக்கஉரை
அன்னையைப் போற்றி தன் வினைகளை அழிக்க வேண்டுதல்
‘பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்’ எனும் அபிராமி அந்தாதி பாடல் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
ஐந்தறிவு மட்டுமே பெற்றதாயினும் மாடு தன் கவனத்தை தன்னை செலுத்துபவன் மீதே கொண்டு அதே போக்கில் கவனச் சிதறல் இல்லாது பயணிக்கும்.; ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் மனிதர்கள் அவ்வாறு அறிய இயலாதவர்கள்; முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவே இப்பிறவி சார்ந்த கர்மங்கள் என்பதை மறந்து நரகம் என்றும், சொர்கம் என்றும் வீண் பேச்சுப் பேசி வாழ்வைக் கழித்திடுவார்கள். கண்களைக் கவறும் நாட்டியம் போலான நடை உடை பாவனைகளைக் கொண்ட பெண்களைத் தங்கள் சகோதரிகள் (தந்தை இனம்) என எண்ணவே தோணாது வாழ்வார். வெளியில் அழகாகவும் பொருள் விடமாகவும் பேசும் நங்கையர்களின் மேலேயே கவனம் செலுத்தி, சிற்றின்பங்களின் பால் கொண்ட விருப்பம் துறந்து உடலின் மேல்தளமான சகஸ்ராரத்தில் அணையா விளக்காய் கனன்று கொண்டிருக்கும் கனலில் சேர்வதற்குத் தயங்குகிறார்கள்.
விளக்கஉரை
மனிதகுலத்தின் மேலான தாக்கத்தை வெளிப்படுத்தும் அகத்தியப் பெருமானின் பாடல்.
தந்தை இனம் மட்டுமே சகோதரத்துவதை ஏற்படுத்தும்; உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகவே எண்ணுதல் தம்மை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய இறை வழிகளில் ஒன்று. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ எனும் வரிகளுடன் ‘அரிய தந்தை’ எனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
தன்னில் இருந்து மனித குலம் மீது எவ்வகையிலும் கடும் சொல் விழக் கூடாது என்பதற்காக ‘ஆடுகின்ற தேவதைகள்’ எனும் பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
அடியார் மனத்தில் நினைத்த கருமம் அனைத்துமங்கே முடியாத தேது முடித்தருள் வாய் முருகாரலங்கல் கடியார் மலர்க் கொன்றை மாலிகை சூடிய கண்ணுதலே தடியேந்திய கையனே காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
அழகிய தளிர் நிறைந்து சூட்டப்பட்ட கொன்றை மலர் மாலையை அடையார்களால் சூட்டப்பட்டு அதை அணிந்தவனே, காப்பதன் பொருட்டு தடியினை கைகளில் ஏந்தியவனே, சீகாழிப் பதியில் உறையும் ஆபதுத்தாரணனே, ‘உன்னிடத்தில் பற்றுக் கொண்ட அடியவர்கள் மனதில் தோன்றிய சிந்தனைகள் உன்னைப் பற்றியப் பின் முடியாது ஏது?’ என்று அவற்றை முடித்து அருள்வாய்.
ஆதினம் அவர்கள் பக்தி நிலையில் எழுதியதால், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.
போர் செய்வதற்கு ஏதுவான உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் நிரம்பியதும், அசுரர்களின் பிணங்கள் குப்பை போன்று தோற்றம் உடையதாகி, எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளிலும் உள்ள ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் ஆகிய யானைகள் அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்கவும், தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்கவும், சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோன்ற, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊரானதும், பொன்னால் ஆனதுமான பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, செல்வங்களை அடைந்து, பொன் மலர்களைச் சிந்தும் படியாக வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே! மெய்ப் பொருளை அறிந்த ஞானி வடிவாகிய குறமகள் வள்ளியும், ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட வாகனமான மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை எனும் திருதலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! வேண்டுவோர்க்கு வேண்டியதைத் அருளும் கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பம் தரத்தக்கதான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், அன்னம், வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், மா, பலா மற்றும் வாழை என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, எழில்மிகு திருவடியை முற்பிறப்பில் வணங்கியதால், உனக்கு வாகனமாக இப்பிறவியில் அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சந்த நாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னை உள்ளக் கசிவோடு மனம் கசிந்து தியானித்து, நன்றாக யான், உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ பதத்தையும் பெற்று, மெய் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அதனால் உண்டாகும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ?
விளக்கஉரை
உற்பனம் – விரைவில் அறிகை, உத்தமம், தோன்றியது, உற்பத்தி செய்தது, பிறப்பு, ஞானம், கல்வி, நிமித்தம்.
உமை அசுபகர்மம், சுபகர்மம் எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள். உயிர்களை கீழ் நிலைக்கு தள்ளும் அசுபகர்மம் பற்றியும், மேலான நிலைக்கு அழைத்துச் செல்லும் சுபகர்மம் பற்றியும் சொல்ல வேண்டும்.
சிவன் மனம், வாக்கு, காயங்களால் பாப கர்மம் உண்டாகிறது.
கொலை செய்ய எண்ணுதல், பொறாமை, பிறர் பொருளில் ஆசை கொள்ளுதல், மனிதர்களின் ஜீவனமாக சம்பளத்தை கெடுப்பது, தர்ம காரியத்தில் சிரத்தை இல்லாதிருத்தல், பாப காரியம் செய்கையில் சந்தோஷம் கொள்ளுதல் இவை மானச பாவங்கள் எனப்படும்
பொய் பேசுதல், கடுமையான சொற்களைச் சொல்லுதல், யாருக்கும் அடங்காமல் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல் இவைகள் வாக்கினால் உண்டாகும் பாவங்கள் எனப்படும்
பிறர்மனை புகுதல், பிற உயிர்களை கஷ்டப்படுத்தி அவைகளை கட்டுப்பத்துதல், களவு, களவுப் பொருளை அழிப்பது, உண்ணத் தகாதவற்றை உண்ணுதல், வேட்டை ஆடுதலில் பற்றுதல், கர்வம், அலட்சியம், பிடிவாதத்தால் பிறரை நோகச் செய்தல், செய்யத் தகாதவற்றை செய்தல், குடிப்பது, அசுத்தமாக இருத்தல், தீயவர்களுடன் சேர்க்கை, கெட்ட ஒழுத்தம் உடையவராக இருத்தல், பாப காரியங்களுக்கு துணை போதல் ஆகியவை சாரீர பாவங்கள் எனப்படும்
இதில் சாரீர பாவம் மிக அதிக பாவமாகும்
கர்மவசத்திற்கு உட்பட்டு அறியாமலோ அல்லது காரணம் பற்றியோ எவ்வாறு செய்யினும் பாவம் செய்தவனை அடைந்தே தீரும்.
உமை பாவ காரியத்தை எவ்வகையில் செய்வதால் அது பற்றுவதில்லை?
குற்றம் செய்யாத ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள தன்னை நோக்கி முதலில் ஆயுதத்தை ஓங்கிய பகைவனை திருப்பி அடித்துக் கொண்டால் பாவம் பற்றாது. ஊர் காப்பாற்றுபடுவதன் பொருட்டும், துயரப்படுபவர்களை காப்பதன் பொருட்டும் எதிர்களை துன்புறுத்துவனை பாவங்கள் பற்றாது.பஞ்சத்தில் இருக்கும் போது உயிர் வாழ்வதற்காக எவரும் அறியாமல் உணவு கொண்டவனை பாவங்கள் பற்றாது.(கிரகஸ்தர்களுக்கானது இது).
இடம், காலம் ஆகியவற்றை புத்தியினால் ஆராய்ந்து, பிரயோசனத்தை பற்றை ஆராய்ந்து பேசத் தக்காதவற்றை பேசினாலும், செய்யத் தகாதவற்றை செய்தாலும் சிறிது பாவம் பற்றும்.
உமை பானத்தின் குற்றங்களையும், குடிப்பதற்கும் குடிக்காமல் இருப்பதற்கும் ஆன காரணத்தை கேட்க விருப்புகிறேன்.
விரும்பத்தக்க பெண் யானையைப் போலவும், இளமையும் அழகியதுமான அன்னம் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியை தம்முடைய துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதகணங்கள் நின்று இசை பாட அதற்கேற்ப ஆடுபவரும், நீண்டதும், பரந்து விரிந்ததும் ஆன சடை மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம்முடைய இடமாக விளங்கும் திருத்தலம் எதுவெனில் ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையில் யாழ் ஓசையை ஒத்து விளங்குமாறு இருப்பதும், அதன் அருகில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும், அழகிய சோலைகளில் குயில்கள் பாடவும் கொண்டு விளங்கக் கூடியதான திருத்தருமபுரம் என்னும் நகராகும்.
விளக்கஉரை
பண் : யாழ்முறி
மடப்பிடி – பெண் யானை
புன்னை – நெய்தல் சார்புடையதல் பற்றி
திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தவர். திருஞானசம்பந்தர் இத் திருத்தலம் வந்த போது யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்ட, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ எனும் வரிகளில் வாசிக்க இயலாமல் போனது.
எக்காலத்திலும் அறிவினால் தன்னை உணர்ந்து உரைப்பவர்களாகவும், அறியாதவர்களாள் உரைக்கப்படும் பொருள் அற்ற வார்த்தைகளை ஏற்காமலும் இருக்கும் ‘நாடவர்’ எனவும் ‘நாட்டார்’ எனவும் அழைக்கப்படுபவர்களாலும் உரைக்கப்படும் சொற்களைக் கேட்டு அறியாதவனும், தனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு கேடும் இல்லாதவனும், தனக்கென எந்த வகையிலும் உறவு இல்லாதவனும், கேட்டல் என்னும் தொழில் இல்லாமல் இயல்பாகவே எல்லாவற்றையும் கேட்பவனும் ஆகிய இறைவன், என்னுடைய சிறுமையை நோக்காது நாய்க்கு ஆசனம் அளித்து இருக்கையில் அமரச்செய்தது போல தன் அருகில் இருக்கச் செய்து, காட்டுவற்கு அரிதான தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எந்த காலத்திலும் கேட்காத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பிக்கச் செய்து, மீண்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட்கொண்டான். இது எம்பெருமான் செய்த ஒரு வித்தை ஆகும்.
விளக்கஉரை
தவிசு – இருக்கை; ஆசனம்
‘ஆரும் கேட்டு அறியாதான்` – உலகல் உள்ளவர்களால் கேட்டறியப் படாமை
கேளாதே எல்லாம் கேட்டான் – பிறர் அறிவிக்க பின் அறிவது அல்லாமல், தானே எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவன்.
‘நாயினுக்குத் தவிசிட்டு’ – உயர்ந்தவர்களுக்கு செய்யத் தக்கதை இழந்தோர்க்கு செய்ததை அறிவித்தல் பொருட்டு
காண இயலாப் பொருளைக் காணச் செய்தல், கேட்க இயலாப் பொருளை கேட்கச் செய்தல், வினைகளில் இந்து காத்து மீண்டும் பிறவாமல் செய்தல் ஆகியவை உயர்ந்தோர்க்கே செய்யக் கூடியவை; இவற்றையும் எனக்குச் செய்தான் என்பது கருத்து.
சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்று உரைத்து, ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்தியவனே! காணாபத்தியம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம், சாக்தம் என வழங்கப்பெறும் ஆறு வகை சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே! சிவனின் புத்திரனாகிய சிவகுமாரனே! உன்னிடத்தில் அன்பு கொண்டு உன்னை நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே! திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (வினைகளை களைவதன் பொருட்டு) உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து, பலமுறையும் பிரார்த்தித்து, எனது சுய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும், ஜெபம் மேற்கொண்டு, உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.
விளக்கஉரை
* நாரதர் ஒரு முறை யாகம் செய்த போது தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகுவை அனுப்பி அவர் மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயாகிய நீ, தந்தை, தாயார், உறவினர்கள் எனும் சுற்றத்தார் மற்றும் சகல வாழ்வும் உனது அருளால் ஏற்பட்டது; பிராப்தம் ஆகிய என்னுடைய தனித்த நிகழ்கால வினைகளும் உன்னுடைய அருளால் உண்டாக்கப்பட்டது; சடலம் உன்னுடையது; உயிர் உன்னுடையது; நான், உனது சிந்தையில் ஏற்படும் எண்ணங்களை மாறுபாடு இல்லாமல் செய்யும் உனது அடிமை என்று இந்த உலகினில் அனைவர்க்கும் தெரியும்; விரும்பிய அனைத்தும் கொடுக்கவல்லதான தெய்வமணி எனப்படும் சிந்தா மணியே! வினைக்கு உட்பட்டு எனக்கு வரும் செயல்கள் அனைத்தும் உன்னுடைய சிந்தையின் செயல்கள்; உனக்கு சொந்தமான அடிமை இவ்வுலகில் கிடந்து அலையும் போது நீ சும்மா இருந்தால் அது உன்னை விடுமா? (விடாது); உடலின் உச்சி ஆகியாகிய தலையில் பெரிய இடமானதும், பிரகாசிக்கின்றதும் ஆன மணி விளக்கே! என்னை மைந்தனாக பாவித்து எனை வந்து ஆண்டு அருளவேண்டும்.
அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.
அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும், பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.