பாடல்
கடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக் கடலின்உள்ளம்
விடலரி யேனை விடுதிகண் டாய்விட லில்லடியார்
உடல்இல மேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேஅமு தேஎன் மதுவெள்ளமே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
உன் திருவடியை விடும் தன்மை இல்லாத அடியார்களது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற திரு உத்தரகோசமங்கைக்குத் தலைவனே! மலரில் இருக்கும் பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மது வெள்ளமே! பூந்தேனே! மாணிக்கமே! அமுதமே! என் மதுப்பெருக்கே! உன் திருவடியை விடுதல் இல்லாத அடியாரது உடலாகிய வீட்டில் நிலைபெறுகின்ற, திரு உத்தரகோச மங்கைக்குத் தலைவனே! கடல் நீரில் நாய் நக்கிப் பருகினது போல உனது கருணைக் கடலினுள்ளே, உள்ளத்தை அழுந்திச் செல்ல விடாத என்னை விட்டு விடுவாயோ?
விளக்க உரை
- ‘இறைவனது கருணை ஏகவுருவாய் எங்கும் பரந்து கிடப்பினும் உயிரினது தன்மைக்கேற்பவே அதைப் பெற முடியும்‘ என்பது பற்றியப் பாடல்
- ‘விடலரியேனை’ – முழுதும் மூழ்கும் படி விட்டுப் பருகாது, சிறிதே சுவைத்து ஒழிவேனை என்னும் உவமைக்கேற்ப உரைத்தல்
- மடலின் மட்டு – பூவிதழில் துளிக்கின்ற தேன் (மிகச் சிறிய அளவு)
- மதுவெள்ளம்- தேன் வெள்ளம்(பெருகிய மிக அதிக அளவு)
- இறைவனுக்கு அடியாரது உடல் ஆலயமாதலின், ‘அடியார் உடல் இலமே மன்னும்’ என்ற அடிகள் கொண்டு அறியலாம்; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்ற திருமூலர் வாக்கையும் ஒப்பு நோக்கிக் காண்க.