பாடல்
வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்
டூன்வந் துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந் தமுதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
விண்ணுலகில் தோன்றிய தேவர்களும், திருமால், பிரமன், இந்திரன் முதலானவர்களும், காட்டில் சென்று ஊண் உறக்கமின்றி, தம்மை மறந்து கடும் தவம் செய்தும் காண்பதற்கு அரியவனாகிய சிவபெருமான் தானே வலிய வந்து நாய் போன்றவனாகிய அடியேனைத் தாய்போலக் கருணை செய்து, உயிரினை உருகச் செய்து, என் ரோமங்கள் விதிர்விதிர்க்குமாறு செய்து, இனிமையான அமுதம் போல், தெளிவான ஒளிவடிவமான அவன் பெருமை பொருந்திய திருவடியைப் புகழ்ந்து அம்மானைப் பாட்டாக பாடுவோமாக.
விளக்க உரை
- ‘தேவர்களும் நிலவுலகத்திற்கு வந்து தவம் புரிகின்றனர்` எனும் பொருளில். இந்திரன் சீகாழிப்பதியில் தங்கித் தவம் புரிந்தது – கந்த புராணம் உரைத்தது
- ‘கானின்று வற்றியும்’ – ஊண் உறக்கமின்றித் தவம் புரிதல்
- ‘புற்றெழுந்தும்’ – தம்மை மறந்து தவம் புரிதல்
- உயிர்ப்பு – (அன்பினால்) உயிர்த்தல்; மூச்செறிதல்