அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 12 (2018)

பாடல்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
     நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
     அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
     இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
     எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

விரும்பத்தக்க பெண் யானையைப் போலவும், இளமையும் அழகியதுமான அன்னம் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியை தம்முடைய துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதகணங்கள் நின்று இசை பாட அதற்கேற்ப ஆடுபவரும்,  நீண்டதும், பரந்து விரிந்ததும் ஆன  சடை மீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர் தம்முடைய இடமாக விளங்கும் திருத்தலம் எதுவெனில் ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையில் யாழ் ஓசையை ஒத்து விளங்குமாறு இருப்பதும்,  அதன் அருகில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும், அழகிய சோலைகளில் குயில்கள் பாடவும் கொண்டு விளங்கக் கூடியதான  திருத்தருமபுரம் என்னும் நகராகும்.

விளக்க உரை

  • பண் : யாழ்முறி
  • மடப்பிடி – பெண் யானை
  • புன்னை –  நெய்தல் சார்புடையதல் பற்றி
  • திருஞானசம்பந்தரின் பதிகங்களின்மேல் அளவிலாத பக்தியுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாகவே அந்தப் பதிகங்களைத் தம்முடைய யாழ் வாத்தியத்தின் மூலம் இசைத்துவந்தவர். திருஞானசம்பந்தர் இத் திருத்தலம் வந்த போது யாழ் வாத்தியத்தால் வாசிக்க முடியாத அளவுக்கு ஒரு பதிகத்தைப் பாட வேண்ட, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. பதிகத்தில் வரும் `எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே..’ எனும் வரிகளில் வாசிக்க இயலாமல் போனது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *