பாடல்
நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
வாய்க்கு வந்த படிபல பேசவே
மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
திகழக் கட்டினை என்னை நின் செய்கையே
திருவருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்
பதவுரை
இழிந்த தன்மை உடைய நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு, அதற்குப் பெரிய பொன் முடியைப் அணிவித்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தவாறு பலவாறு பேசுமாறு, உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவனாகி அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி, நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தில் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒத்து என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது.
விளக்க உரை
- ‘மதியிலேன்’ – உன் அருளைக் கண்டும் உன்னை அறியாத தன்மையால் நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பிதல்.
- தவள மாடம் – வெண்ணிறமான மாளிகை