பாடல்
மாடுதானாலும் ஒருபோக்குண்டு; மனிதருக்கோ
அவ்வளவும் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்;
நல்வினையோ தீவினையோ எண்ணமாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு; அரிய தந்தை
யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித் தளமான
தீயில்விழத் தயங்கினாரே
அகத்தியர்
பதவுரை
ஐந்தறிவு மட்டுமே பெற்றதாயினும் மாடு தன் கவனத்தை தன்னை செலுத்துபவன் மீதே கொண்டு அதே போக்கில் கவனச் சிதறல் இல்லாது பயணிக்கும்.; ஆனால் ஆறறிவு பெற்றிருந்தும் மனிதர்கள் அவ்வாறு அறிய இயலாதவர்கள்; முற்பிறவியில் செய்த நல்ல மற்றும் தீய செயல்களின் விளைவே இப்பிறவி சார்ந்த கர்மங்கள் என்பதை மறந்து நரகம் என்றும், சொர்கம் என்றும் வீண் பேச்சுப் பேசி வாழ்வைக் கழித்திடுவார்கள். கண்களைக் கவறும் நாட்டியம் போலான நடை உடை பாவனைகளைக் கொண்ட பெண்களைத் தங்கள் சகோதரிகள் (தந்தை இனம்) என எண்ணவே தோணாது வாழ்வார். வெளியில் அழகாகவும் பொருள் விடமாகவும் பேசும் நங்கையர்களின் மேலேயே கவனம் செலுத்தி, சிற்றின்பங்களின் பால் கொண்ட விருப்பம் துறந்து உடலின் மேல்தளமான சகஸ்ராரத்தில் அணையா விளக்காய் கனன்று கொண்டிருக்கும் கனலில் சேர்வதற்குத் தயங்குகிறார்கள்.
விளக்க உரை
- மனிதகுலத்தின் மேலான தாக்கத்தை வெளிப்படுத்தும் அகத்தியப் பெருமானின் பாடல்.
- தந்தை இனம் மட்டுமே சகோதரத்துவதை ஏற்படுத்தும்; உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகவே எண்ணுதல் தம்மை மேம்பட்ட நிலைக்கு அழைத்துச் செல்லும் முக்கிய இறை வழிகளில் ஒன்று. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ எனும் வரிகளுடன் ‘அரிய தந்தை’ எனும் வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
- தன்னில் இருந்து மனித குலம் மீது எவ்வகையிலும் கடும் சொல் விழக் கூடாது என்பதற்காக ‘ஆடுகின்ற தேவதைகள்’ எனும் பதத்தை பயன்படுத்தி இருக்கிறார்.
மதனா அண்ணா அவர்களுக்கு நன்றி.
சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.