பாடல்
எண்ண அடங்கா தெனதுசென்மம்
ஏட்டில் எழுதி முடியாது
இடிப்பார் நீண்ட மரம்போலும்
எமனார் பதியில் அடைந்துடைந்து
பெண்ணின் மயக்கம் வினைமயக்கம்
பிறவி மயக்கம் தொலையாது
பித்தர் சாலப் புலையருடன்
பேய்கொண் டடிமை அலைவேனோ
வண்ணக் கலையே கதிமுதலே
வனசப் பதியே அதிமதுர
வனமே கனமே யோகியர்கள்
மனமேய் குடியே வாரிதியே
மண்ணிற் ககன முடிநடுவுள்
வாதா டியபே ரொளிவிளக்கே
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் என்படும் அபயாம்பிகை தாயானவளே, ஒளிரும் வண்ணங்கள் உடைய முழு நிலவைப் போன்றவளே, அனாதி காலம் தொட்டு தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பவளே, இனிமை நிறைந்த முக்கனிகளில் பலா போன்றவளே, அழகிய மணம் பொருந்திய சோலை போன்றவளே, போற்றுதலுக்கு உரியவளே, கடல் போன்று பரந்து யோகியர்கள் உள்ளத்தில் குடியிருப்பவளே, ஈசனிடம் வாதாடி வாதாடிய பேரொளி விளக்கே, வினைகள் பற்றி எடுத்த எனது பிறவிகள் எண்ணில் அடங்காது; அவைகளை ஏட்டிலும் எழுத முடியாத அளவு மிக நீண்டதானது.; நீண்ட மரம் போல வெட்டப்பட்டு எமனுடைய உலகமாகிய எமலோகத்தை அடைந்து பெண்ணிடத்தில் மயக்கம், வினை பற்றி நின்றதனால் அது பற்றி விளைந்ததாகிய வினைமயக்கம், இப்பிறவி பற்றியதால் ஏற்பட்ட பிறவி மயக்கம் ஆகியவைகள் தொலையாது, பித்தர்களுடனும், சண்டாளன் எனப்படும் புலையருடனும் பேய் பிடித்தவர்களை அலைவது போல் அலைவேனோ?
விளக்க உரை
- வாரிதி – கடல்