சித்த(ர்)த் துளிப்பு – 12-Dec-2020


பாடல்

சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
   தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
   நற்கதி சேர்ந்திடும் கோனாரே

அருளிய சித்தர் : இடைக்காடர்

பதவுரை

வாள் போன்று ஒளிவிடக்கூடியதான் சூரியன் பட்ட உடன் பனித்துளியின் தோற்றம் கெடும் அதுபோல பார்வதி தேவியினை இடப்பாகத்தில் கொண்டவனை நெஞ்சினில் வைத்து போற்றும் போது கொடிய வினைகள் தூள்பட அழிந்து நற்கதி சேர்ந்திடும்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 03-Dec-2020


பாடல்

ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே
     உண்மை வசப்படுமே
நின்ற நிலைதனிலே பசுவே
     நேர்மை யறிவாயே

அருளிய சித்தர் : இடைக்காடர்

பதவுரை

பசு எனப்படும் மனமே, எக்காலத்திலும் நிலையானதும், அழியாதும் ஆன ஒன்றைப் பிடித்தவர்களுக்கே பதி பற்றிய உண்மை வசப்படும். (சுவாசமே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதால் சுவாசம் கைவரப் பெற்றவர்களுக்கே உண்மை கைவல்யமாகும் என்றும் பொருள் உரைப்பர்)*. ஞானமானது கைவரப் பெற்ற நிலைதனில் இதன் உண்மைப் பொருளினை அறிவாயாக.

* ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 01-Dec-2020


பாடல்

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான்பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளுங் கல்லாம் பணியும் கரிபரியும்,
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி சேர்மின்களே

அருளிய சித்தர் : இடைக்காட்டுச் சித்தர்

பதவுரை

செல்வத்தினை தருவதும் செல்வம் என்று அழைக்கபடுவதுமான மாடும், வசிக்கத் தகுந்த இடமான மனைகளும், தனக்கு உறவான தம்மக்களும், தன்னைச் சார்ந்த சுற்றமும், வானளவாக இருக்கக்கூடியதான் பொருளும், வீடும், மணிகளும், வெண் பொன் என்பதான வெள்ளியும், செம்மையான பொன் என்பதான் தங்கமும், வெண்கலமும், உணவு தரத்தக்கதான் வயல்வெளிகளும், அதனை சூழ்ந்த நிலப்பரப்பும் கொண்டிருத்தலால் ஐராவதம் போன்ற யானையால் வணங்கப்படும் இந்திரப் பதவி ஒத்ததான நிலையும், தேடும் பலவகையானப் பொருள்களும் நில்லாமல் செல்வதால் அவைகளை விலக்கி சிவகதியினை அடையுங்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 24 (2020)


பாடல்

சாவாது இருந்திடப் பால்கற – சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற – வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற

இடைக்காடர்

கருத்து – இறவாமல் இருத்தலில் பொருட்டு அமுததாரிணை எனும் பால் கறத்தல் வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

இறப்பு கொள்ளுதல் எனும் மரணம் நிகழாமல் இருத்தலில் பொருட்டு சிரத்தில் இருந்து வெட்டவெளி என்றும் ஆகாயம் என்றும் நடனசபை என்றும் அழைக்கப்படும் அழைக்கப்படும் இடமாகிய அண்ணாக்கில் இருந்து பால் கறத்தல் எனும் அமுததாரிணையைப் பெற வேண்டும்.

விளக்க உரை

  • அமுததாரணை – உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு
  • பால்கறத்தல் – அமுததாரணை. உயிர்கள் பசு என்பதாலும் ஞானம் அவர்களிடத்தில் மறைந்திருக்கும் என்பதாலும், பசுக்கள் தன் இயல்பாய் பால் கறத்தல் செய்ய இயல்பு அற்றவை என்பதாலும் பதி அருள்கொண்டு முயற்சியினால் அது சித்திக்கும் என்பதாலும் இவ்வாறு உரைக்கப்படுகிறது.  

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – கார்த்திகை – 20 (2018)

பாடல்

மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை மையத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே!

இடைக்காடர்

பதவுரை

பிறவிகள் தோறும் தொடர்வதும், தீமை செய்யத் தூண்டுவதும்,  இறையை காணச் செய்யாமல் செய்வதும், நரகத்தில் கொண்டு சேர்ப்பதும், மும்மலம் னப்படுவதுமான ஆணவம், கன்மம், மாயை இவைகளை நீக்கி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று பொறிகளாகிய முப்பொறிக்கு எட்டாததும் காரணப்பாழ், காரியப்பாழ், அறிவுப்பாழ் என்றும் மாயப்பாழ், சீவப்பாழ், அருள் வெளிப்பாழ் என்றும் கூறப்படும் முப்பாழும் கடந்து, உருவம் அற்ற இடத்தில் இருக்கும் முப்பாழும் கடந்ததை புறச் செயல்கள் செய்யும் காலத்திலும்  அக சிந்தையில் வைப்பீர் கோனாரே!

விளக்க உரை

  • செம்மறி யோட்டிய வேலை – புறச் செயல் செய்கையில் அக வழிபாட்டு முறை பற்றியது இப்பாடல்
  • கோனாரே – குலத்தினை குறிப்பிடாமல் பசுக் கூட்டத்தை மேய்ப்பவன் எனும் பொருள் பற்றியது.
  • ஒப்பு நோக்க :

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே

எனும் திருமந்திரப் பாடலுடனும்

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற
மும்மலம் அகற்றுவான் அடிசேர, உந்திப்பற

எனும் திருவுந்தியார் பாடலுடனும் ஒப்பு நோக்கி மும்மலம் என்பதை சிந்திக்க.

சித்தர் பாடல் என்பதாலும், மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதாலும் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 22 (2018)

 

பாடல்

தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே
சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்
எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு
இல்லையென்று எண்ணுவீர் கோனாரே

இடைக்காடர்

பதவுரை

உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறவி எடுத்ததால் அப்பிறவியுடன் இணைந்து வரும் மாயையாகிய மயக்கத்தில் (செயலிழக்கச் செயும் சோம்பலில்) மனத்தை இழக்காது மனமொருமைப் படுத்தி வந்த பொருள் அறியும் முயற்சியாகிய தவத்தில் ஈடுபடா விட்டால், இப்பிறவியின் முடிவில் (எல்லையில்) கடவுளாகிய மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்து அதனுடன் இணையும் திறன் நமக்கு கிடைக்காது என்ற உண்மையை உணர வேண்டும்.

விளக்க உரை

  • தொந்தம் – இரட்டை, புணர்ச்சி, தொடர்பு, பகை, மரபுவழிநோய், ஆயுதவகை, பழமை, நெருங்கிய பழக்கம்

 

மதனா அண்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Loading

சமூக ஊடகங்கள்

error: Content is protected !!