இசைக்கருவிகள் அறிமுகம் : ஆகுளி (வேறு பெயர் – சிறுகணாகுளி)
ஓவியம் : shaivam.org
பாடல்
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்
பதவுரை
வெல்லும் படையும், அஞ்சாமையாகிய வீரம் கொண்ட சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் இருந்து எழும் கொல், எறி, குத்து என்றும் ஆரவாரத்துடன் கூடிய ஒலிகள் மட்டுமல்லாமல், சிலம்பின் பருக்கைக் கற்கள் கொண்டதாகிய சில்லரியின் ஓசையும், உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக உயரத்தினின்று பள்ளத்தாக்கில் மலையில் வீழும் அருவிகளாதலின் அவற்றின் வேகமும், கற்கள் மோதுதல் ஏற்படுவதால் தோன்றும் ஒலியும், வளைந்து வளைந்து செல்லுதலால் ஏற்படும் ஒலிகள் முதலியனவும் அங்கே எங்கும் உள்ளன.
விளக்க உரை
- துடி – கொம்பு – ஆகுளி – இவை குறிஞ்சித் திணைக்குரிய பறை வாத்தியங்கள்
- வேடரது மன மொழி மெய் என்ற மூன்று காரணங்களின் கொடுமைத் தொழில் குறித்தபடி.
- சில்லரி – சிலம்பின் பருக்கைக் கற்கள்
- சில் அரி துடி – சில உருக்குப்பரல் உள்ளே இடப்பட்ட வெண்டயம் சுற்றப்பட்ட துடி; துடியினுள் இடப்பட்ட பரல்
- கொம்பு – வாய்வைத்து ஊதி முழக்கும் வாத்தியம்
- ஆகுளி – சிறுபறை (தாளவிசைக்கருவி முழவுக்கு இணை கருவியாகவும், துணை கருவியாகவும் அமையும்)