பாடல்
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே
சிவவாக்கியர்
பதவுரை
அருளைத் தரும் நாதர் மற்றும் அம்மையின் உண்மையான திருவடிகளைக் கொண்டு இயம்புவது என்னவெனில் வினையது கொண்டு உருவம் கொண்ட உடலில் இருக்கும் நாடியில் தசவாயுக்களில் ஒன்றானதும், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் ஆகிய வாயுக்களுடன் இணைந்து அவற்றை இயக்கி தானும் இயங்குவதான தனஞ்செயனை எண்ணத்தினால் குவித்து துரியத்தின் இடமான கபாலத்தில் ஏற்றும் முறையை தெரிந்து கொண்டால், முதுமை உடையவர்களும் இளமைத் தோற்றம் உடையவராக ஆகிவிடுவார்கள்; அவர்களது மேனி சிவப்பு நிறம் கொண்டிடும்.
விளக்க உரை
- கபாலம் ஏற்றுதல் – குரு மூலமாக அறிக.
சித்தர் பாடல் என்பதாலும், பக்தி நிலையில் இருந்து எழுதியதாலும், அவர்களின் உள் அனுபவங்களை மானுடப் பிறவி சார்ந்து விளக்கம் அளிப்பதால் பதவுரையில் சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.