பாடல்
கற்பக ஞானக் கடவுண்மு னண்டத்
திற்புத சேனைக் கதிபதி யின்பக்
கட்கழை பாகப் பமமுது வெண்சர்க் …… கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனிபய றம்பொற்
றொப்பையி னேறிட் டருளிய தந்திக்
கட்டிளை யாய்பொற் பதமதி றைஞ்சிப் …… பரியாய
பொற்சிகி யாய்கொத் துருண்மணி தண்டைப்
பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் …… தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
றுப்பொருள் ஞானப் பெருவெளி யும்பெற்
றுப்புக லாகத் தமுதையு முண்டிட் …… டிடுவேனோ
தெற்பமு ளாகத் திரள்பரி யும்பற்
குப்பைக ளாகத் தசுரர்பி ணந்திக்
கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் …… செவையாகித்
திக்கய மாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு வென்கச்
செப்பறை தாளத் தகுதொகு வென்கச் …… சிலபேரி
உற்பன மாகத் தடிபடு சம்பத்
தற்புத மாகத் தமரர்பு ரம்பெற்
றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தத் …… தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமக ளும்பற்
சித்திரை நீடப் பரிமயில் முன்பெற்
றுத்தர கோசத் தலமுறை கந்தப் …… பெருமாளே.
திருப்புகழ் – அருணகிரிநாதர்
பதவுரை
போர் செய்வதற்கு ஏதுவான உடலை உடைய கூட்டமான குதிரைகளும், யானைகளும் நிரம்பியதும், அசுரர்களின் பிணங்கள் குப்பை போன்று தோற்றம் உடையதாகி, எட்டுத் திசைகளையும் மூடி இரத்தத்தால் திசைகள் எல்லாம் சிவக்க, எட்டுத் திக்குகளிலும் உள்ள ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் ஆகிய யானைகள் அசைந்து ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று முழங்கவும், தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்கவும், சில முரசு வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோன்ற, அற்புதமான விண்ணுலகத்து தேவர்களின் ஊரானதும், பொன்னால் ஆனதுமான பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, செல்வங்களை அடைந்து, பொன் மலர்களைச் சிந்தும் படியாக வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே! மெய்ப் பொருளை அறிந்த ஞானி வடிவாகிய குறமகள் வள்ளியும், ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்பட்ட அழகிய தேவயானையும், மேம்பட்ட வாகனமான மயிலும் விளங்கப் பெற்று, உத்தர கோச மங்கை எனும் திருதலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! வேண்டுவோர்க்கு வேண்டியதைத் அருளும் கற்பக மரம் போன்ற ஞான மூர்த்தியாகிய கடவுளே, முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த தேவயானைக்குத் தலைவனே, இன்பம் தரத்தக்கதான தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லம், அன்னம், வெள்ளைச் சர்க்கரை, பால், தேன், நிரம்பிய இளநீர், மா, பலா மற்றும் வாழை என்னும் மூன்று வகையான பழங்கள், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக் கொண்டு அருளும் யானையாகிய கணபதியின் வலிமை நிறைந்த தம்பியே, எழில்மிகு திருவடியை முற்பிறப்பில் வணங்கியதால், உனக்கு வாகனமாக இப்பிறவியில் அமைந்த அழகிய மயிலை உடையவனே, திரளாக உள்ளதும், உருளும் தன்மை உடையதுமான ரத்தினம் பதித்த தண்டையையும், அழகிய சந்த நாதத்தோடு ஒலிக்கின்ற சிலம்புகளையும் அணிந்தவனே, என்றெல்லாம் அழகாக உன்னை உள்ளக் கசிவோடு மனம் கசிந்து தியானித்து, நன்றாக யான், உனது அழகிய திருப்புகழைப் பாடி சிவ பதத்தையும் பெற்று, மெய் ஞானப் பெரு வெளியாகிய சிதாகாச உயர் நிலையைப் பெற்று, அதனால் உண்டாகும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ?
விளக்க உரை
- உற்பனம் – விரைவில் அறிகை, உத்தமம், தோன்றியது, உற்பத்தி செய்தது, பிறப்பு, ஞானம், கல்வி, நிமித்தம்.
- உத்தரகோசமங்கை திருத்தலத் திருப்புகழ்