பாடல்
கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்
கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான்
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்
கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
எக்காலத்திலும் அறிவினால் தன்னை உணர்ந்து உரைப்பவர்களாகவும், அறியாதவர்களாள் உரைக்கப்படும் பொருள் அற்ற வார்த்தைகளை ஏற்காமலும் இருக்கும் ‘நாடவர்’ எனவும் ‘நாட்டார்’ எனவும் அழைக்கப்படுபவர்களாலும் உரைக்கப்படும் சொற்களைக் கேட்டு அறியாதவனும், தனக்கு எந்த வகையிலும் எந்த ஒரு கேடும் இல்லாதவனும், தனக்கென எந்த வகையிலும் உறவு இல்லாதவனும், கேட்டல் என்னும் தொழில் இல்லாமல் இயல்பாகவே எல்லாவற்றையும் கேட்பவனும் ஆகிய இறைவன், என்னுடைய சிறுமையை நோக்காது நாய்க்கு ஆசனம் அளித்து இருக்கையில் அமரச்செய்தது போல தன் அருகில் இருக்கச் செய்து, காட்டுவற்கு அரிதான தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எந்த காலத்திலும் கேட்காத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பிக்கச் செய்து, மீண்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட்கொண்டான். இது எம்பெருமான் செய்த ஒரு வித்தை ஆகும்.
விளக்க உரை
- தவிசு – இருக்கை; ஆசனம்
- ‘ஆரும் கேட்டு அறியாதான்` – உலகல் உள்ளவர்களால் கேட்டறியப் படாமை
- கேளாதே எல்லாம் கேட்டான் – பிறர் அறிவிக்க பின் அறிவது அல்லாமல், தானே எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவன்.
- ‘நாயினுக்குத் தவிசிட்டு’ – உயர்ந்தவர்களுக்கு செய்யத் தக்கதை இழந்தோர்க்கு செய்ததை அறிவித்தல் பொருட்டு
- காண இயலாப் பொருளைக் காணச் செய்தல், கேட்க இயலாப் பொருளை கேட்கச் செய்தல், வினைகளில் இந்து காத்து மீண்டும் பிறவாமல் செய்தல் ஆகியவை உயர்ந்தோர்க்கே செய்யக் கூடியவை; இவற்றையும் எனக்குச் செய்தான் என்பது கருத்து.