பாடல்
அவசியமுன் வேண்டிப் …… பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக் …… கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக் …… கனிவாகிச்
சரணமதும் பூண்டற் …… கருள்வாயே
சவதமொடுந் தாண்டித் …… தகரூர்வாய்
சடுசமயங் காண்டற் …… கரியானே
சிவகுமரன் பீண்டிற் …… பெயரானே
திருமுருகன் பூண்டிப் …… பெருமாளே
திருப்புகழ் – அருணகிரிநாதர்
பதவுரை
சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்று உரைத்து, ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்தியவனே! காணாபத்தியம், கௌமாரம், சௌரம், சைவம், வைணவம், சாக்தம் என வழங்கப்பெறும் ஆறு வகை சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே! சிவனின் புத்திரனாகிய சிவகுமாரனே! உன்னிடத்தில் அன்பு கொண்டு உன்னை நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே! திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (வினைகளை களைவதன் பொருட்டு) உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து, பலமுறையும் பிரார்த்தித்து, எனது சுய அறிவினால் உன்னை உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும், ஜெபம் மேற்கொண்டு, உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக.
விளக்க உரை
- * நாரதர் ஒரு முறை யாகம் செய்த போது தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகுவை அனுப்பி அவர் மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.