பாடல்
ஆனை உரித்தபகை அடி
யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
யான், புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.
விளக்க உரை
- வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
- ஒள்ளி – செம்பொன், சுக்கிரன், வெள்ளி