பாடல்
பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே
தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவனான ஆட்சீஸ்வரர், தமது முறுக்கேறிய பொன் திரண்டதைப் போன்ற சடையையும், பெருங்கடலில் அலைகளில் தோன்றியதும், தீ வண்ணத்தை ஒத்ததுமான பவள கொடியையும் கொண்டு, குன்றுகள் போன்ற தரும் இரண்டு தோள்களில் வெண்மையான முப்புரி நூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினையும், மென்மைத் தன்மையும் வாய்ந்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓர் உருவில் இரண்டு உருவாய்த் தோன்றும் அடிகளாவார்.
விளக்க உரை
- கொழும் பொடி – வளப்பமான விபூதி