வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 30

ஓவியம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

சுவர்ண தானம்

  • மிகச்சிறந்ததும் ஸ்வர்க்கத்தையும் நன்மையையும் தருவது.
  • பாவம் செய்த கொடியவனையும் சுவர்ண தானம் துலக்கி விடும்.
  • சுவர்ணமும் அக்நி என்பதாலும் எல்லா தேவர்களுக்குமாக இருப்பதாலும் சுவர்ணத்தைக் கொடுப்பதனால் எல்லாத்தேவர்களும் திருப்தி அடைந்தவராகி விரும்பினவற்றையெல்லாம் அடைவர். அவர்கள் சூரியன் அக்நி இவர்களின் சிறந்த லோகங்களை அடைவர்.
  • ஆதலால், பூமியில் மனிதர்கள் தங்களால் இயன்றவரையில் சுவர்ண தானம் செய்யவேண்டும். இதற்கு மேற்பட்டது உலகத்தில் ஒன்றுமில்லை.

கோதானம்

  • பிரம்மதேவர் உலகங்களைப் படைக்கக் கருதினபோதே எல்லாப் பிராணிகளின் ஜீவனத்திற்காகவும் கோக்களை முதலில் படைத்தால் அதனால் அவை தாய்களென்று சொல்லப்படுகின்றன.
  • வெருளாததும் நல்ல.அடக்கமுள்ளதும் நல்ல கன்றுள்ளதும் நிரம்பப் பாலுள்ளதுமான பசுவைத் தானம் செய்பவன் அதன்தேகத்தில் எத்தனை ரோமங்களிருக்கின்றனவோ அத்தனை வருஷங்கள் சுவர்க்க சுகங்களை அனுபவிப்பான், பொன்னால் அலங்கரிக்கப்பட்டகொம்பு.நுனிகளையுடைய கபிலைப் பசுவை வஸ்திரத்தோடும் கறக்க வெண்கலப் பாத்திரத்தோடும் தானம் செய்பவன் தன் புத்திர பெளத்திரர்களையும் தன் குலத்தின்முன் ஏழு தலைமுறைகளையும் பரலோகத்தில் மகிழ்ச்சி அடைவான்.
  • வீட்டில் பிறந்தவை, கிரயத்திற்கு வாங்கப்பட்டவை, பந்தயமாகக் கிடைத்தவை, பராக்கிரமத்தினால் வாங்கப்பட்ட வைகள், பஞ்ச காலங்களில் இடரப்பட்டுக் காப்பாற்றுவதற்காக வந்து சேர்ந்தவையுமான பசுக்களையும் மற்றும் இவ்வகை மார்க்கங்களால் கிடைத்த பசுக்களையும்  தானம் செய்யலாம்
  • இப்படி ஒரு வருஷம் செய்வது விரும்பினவற்றை எல்லாம் கொடுக்கும் . ஒவ்வொருநாளும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பசுக்களுக்கு மங்களத்தைச் சொல்லவேண்டும். அவற்றிற்குத்தீங்கை எண் ணலாகாதென்று தர்மம்தெரிந்தவர்கள் நினைக்கின்றனர், பசுக்களே சிறந்த சுத்தம், உலகங்கள் பசுக்களிடம் இருக்கின்றன. பசுக்கள் உலகத்திற்குத் தாய்கள். அவற்றை எவ்வகையாலும் அவமதிக்காமல் இருக்கவேண்டும். அதனாலேதான் கோ தானம் சிறந்ததென்று சொல்லப்படுகிறது. கோக்களிடத்தில் பக்தியும் அவற்றைப் பூஜிப்பதும் மனிதனுக்குத் தீர்க்காயுளைக்கொடுக்கும்.
  • கோமயத்தை ஒருகாலும் அருவருக்கலாகாது. கோக்களின் மாமிசத்தை உண்ணலாகாது. கோக்களிடத்தில் எப்போதும் பக்தியோடு இருக்கவேண்டும்.
  • ஆகாரம் செய்வதற்கு முன்னமே தூயவனாக இருந்து பிறர் பசுவுக்கு ஒருபிடி புல் கொடுக்கவேண்டும்.
  • தயை அற்றவனுக்கும் நன்றி கெட்டவனுக்கும் பொருளாசை உள்ளவனுக்கும் பொய் சொல்லுகிறவனுக்கும் யாகத்தையும் சிராததையும் விட்டவனுக்கும் எவ்வகையிலும் கோ தானம் செய்யலாது.

தர்மங்கள் தொடரும்..

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 24 (2018)

இசைக்கருவிகள் அறிமுகம் : ஆகுளி (வேறு பெயர் – சிறுகணாகுளி)

ஓவியம் : shaivam.org

பாடல்

வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம் – சேக்கிழார்

பதவுரை

வெல்லும் படையும், அஞ்சாமையாகிய வீரம் கொண்ட சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் இருந்து எழும் கொல், எறி, குத்து என்றும் ஆரவாரத்துடன் கூடிய ஒலிகள் மட்டுமல்லாமல், சிலம்பின் பருக்கைக் கற்கள் கொண்டதாகிய சில்லரியின் ஓசையும், உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும் சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக உயரத்தினின்று பள்ளத்தாக்கில் மலையில் வீழும் அருவிகளாதலின் அவற்றின் வேகமும், கற்கள் மோதுதல் ஏற்படுவதால் தோன்றும் ஒலியும், வளைந்து வளைந்து செல்லுதலால் ஏற்படும் ஒலிகள் முதலியனவும் அங்கே எங்கும் உள்ளன.

விளக்க உரை

  • துடி – கொம்பு – ஆகுளி – இவை குறிஞ்சித் திணைக்குரிய பறை வாத்தியங்கள்
  • வேடரது மன மொழி மெய் என்ற மூன்று காரணங்களின் கொடுமைத் தொழில் குறித்தபடி.
  • சில்லரி – சிலம்பின் பருக்கைக் கற்கள்
  • சில் அரி துடி – சில உருக்குப்பரல் உள்ளே இடப்பட்ட வெண்டயம் சுற்றப்பட்ட துடி; துடியினுள் இடப்பட்ட பரல்
  • கொம்பு – வாய்வைத்து ஊதி முழக்கும் வாத்தியம்
  • ஆகுளி – சிறுபறை (தாளவிசைக்கருவி முழவுக்கு இணை கருவியாகவும், துணை கருவியாகவும் அமையும்)

சமூக ஊடகங்கள்

ராமன் – என்றும் தொடரும் நிகழ்வுகள்

இது ராமனை பற்றிய ஒரு சில நிகழ்வுகளும் நினைவுகளும் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு.
இந்த நிகழ்வினை எப்போது நினைத்தாலும் என்னையும் அறியாமல் இதயம் கலங்குகிறது.
சத்யமான தெய்வம், நீல வர்ணத்திகே சொந்தமானவன் ராமன் தன் நிலை மறக்கிறான். அம்பினை எடுத்து கடல் அரசனை சந்திக்க தயாராகிறான்.  (நான் அறிந்த வரையில் இதுவே ராமன் காட்டிய கோபம்)
கடல் அரசன் எதிரில் வந்து மன்னிப்பு கோருகிறான்.

அம்பினை எடுத்த ராமன் அதை தரையில் விடுகிறான்.

கடல் அரசனுடன் பேச்சு வார்த்தை முடிகிறது.

ராமன் திரும்புகிறான். அம்பு ஒரு மண்டுகத்தில் மேல் அம்பு செருகப்பட்டிருக்கிறது.
ராமன் கதறுகிறான் மனம் பதறுகிறது.
ஏன் கத்தவில்லை, உரைக்க வில்லை‘  ராமன்.
பிறப்பிலும் இறப்பிலும் உரைத்தல் உன் நாமம், ஆனால் நீயே என் மேல் அம்பு வைக்கும் போது நான் யாரிடம் போய் சொல்வேன்‘. தவறு செய்தாலும் அது குறித்து வருந்துதல் ராமனுக்கு மட்டுமே உரித்தானது.
உருகுகிறான் ராமன். ‘உன் ஜென்மம் தீர்ந்தது. நீ மகரிஷியாக வருவாய், எம்மை பற்றி நிற்பாய்‘.

இவரே மண்டுக மகரிஷியாக பிறந்து சுந்தர் ராஜ பெருமானிடம் சேர்ந்தவர்(மதுரைகள்ளழகர் கோயில்)

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 5




முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்

பாடல்

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73

பொருள்

ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

கருத்து

·         மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o    போதல், வருதல்
o    இரவு, பகல்
o    புறம், உள்

·         வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
·         வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
·         இது மனதினை லயப் படுத்துகிறது.  – ஜப கோடி  த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
·         எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது

2.

பாடல்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96

பொருள்

முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.

கருத்து

மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.

சமூக ஊடகங்கள்

இச்சா மரணம் – பீஷ்மர்

எண்ணற்ற கதா பாத்திரங்களை உள்ளடக்கியது மகாபாரதம். அதில் சிறந்த தலையாய படைப்புகளில் ஒன்று பீஷ்மர்.
பீஷ்மர் சந்தனு மகாராஜாவிற்கும், கங்கைக்கும் புதல்வனாக பிறந்தவர். இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். பெற்ற சாபம் தீர தேவ விரதனாக அவதாரம் செய்தவர்.
ஒரு நாள் தனது தந்தை மிக்க மனவருத்தத்துடன் இருப்பதைக் காண்கிறார். சந்தனு காரணத்தை கூற விரும்பவில்லை. எனவே சந்தனுவின் தேரோட்டியை அழைத்து உண்மையை அறிகிறார்.
தந்தை சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் மீது காதல் கொண்டது தெரியவருகிறது.
எனவே அவர்களின் தலைவனை சந்தித்து தனது தந்தைக்கு சத்யவதியை மணம் முடித்துத்தர கேட்கிறார்.
 
சத்யவதியின் தந்தை மறுத்து விடுகிறார். காரணம் வினவுகிறார்.
பட்டத்து அரசியே தலைமை பீடப் பொறுப்புக்கு உரியவராகவும், அவர்களில் வாரிசுகளே ஆட்சி செய்ய தகுந்தவர்கள்  என்றும் இருப்பதால் சத்தவதியை சந்தனுவுக்கு மண முடிக்க விருப்பமில்லை என்று தந்தை உரைக்கிறார்.
இந்த நாள் முதல் பிரமச்சாரிய ஒழுக்கத்திலிருந்து தவறாதவனாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவனாகவும் இருப்பேன், இது சத்தியம் என்று சத்தியம் செய்கிறான் தேவவிரதன்.
‘பீஷ்ம பீஷ்ம’ என்று தேவர்கள் ஒலி எழுப்புகிறார்கள். பீஷ்ம என்ற சொல்லுக்கு ‘ யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்பவன்’ என்று பொருள்.
இந்த தியாகத்திற்காக சந்தனு பீஷ்மருக்கு தந்த வரம் – விரும்பிய பொழுது மரணம் .
சிகண்டியை முன்னிருத்தி அர்ஜுனன் அம்பு எய்தி பீஷ்மரை வீழ்த்தினான். அவர் தரையில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அம்பினால் படுக்கை செய்து(சரதல்லபம்), அவர் மரணம் வரும் வரை அதில் இருத்தினான்.
இது நடை பெற்றது, தஷ்ணாயன புண்ணிய காரம், உத்ராயண புண்ணியகாலம் வரை அவர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அக்காலம் வரை அவரை அணுகி உலகின் மிக நுட்பமாண மற்றும் சூட்சமான சாத்திரங்களையும் கற்று அறிந்தார்கள்.
விஷ்ணு சகஸ்ரநாமம் இவரால் எழுதப்பட்டது.
ரதசப்தமி – பீஷ்மாஷ்டமி – 06-02-2014/07-02-014
Image : Internet 

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 2

கந்தர் அலங்காரம்

தன் நிலை குறித்து புலம்பல்

1.
விளக்கம்

தோலால் சுவர் வைத்து – சுவர்கள் தோலால் எழுப்பப்பட்டிருக்கின்றன.
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இருகாலால் எழுப்பி – அவைகள் இருகாலால் எழுப்பபட்டிருக்கின்றன.
வளை முதுகோட்டி – அவற்றின் முதுகு வளைந்திருக்கிறது.
கைநாற்றி – கைகள் நாற்றப்பட்டிருக்கின்றன
நரம்பால் ஆக்கை இட்டு – அவைகள் நரம்பால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் – அவற்றின் மேற்கூரை தசையால் ஆக்கப்பட்டிருக்கிறது.
வேலால் கிரி துளைத்தோன் – முருகன்
அடித் தாளின்றி – பாதங்கள்

பாடல்
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44



பொருள்
உடலின் இயல்புகளும் அவற்றின் அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உடலில் உயிர் நீங்கும் போது முருகனின் அடித்தாள் அன்றி வேறு துணையில்லை.

கருத்து
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1.
4+6 = 10 (தச வாயுக்கள் என்றஒரு கருத்து உண்டு.உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று,நிரவுக்காற்று,விழிக்காற்று,இமைக்காற்று,தும்மல்காற்று,கொட்டாவிக்காற்று,வீங்கல்காற்று)

2.
சந்திரநாடி ,சூரியநாடி,நடுமூச்சு நாடி,உள்நாக்கு நரம்புநாடி,வலக்கண் நரம்புநாடி,இடக்கண் நரம்புநாடி,வலச்செவி நரம்புநாடி,இடதுசெவி நரம்புநாடி,கருவாய் நரம்புநாடி,மலவாய் நரம்புநாடி  என்று பத்து வித நாடிக்களை குறிப்பது உண்டு.
அதுவும் தவிர கீழ்கண்ட கருத்தும் உள்ளது.

3. ஆறு  ஆதாரங்களும் (மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம் ,மணிப்பூரகம் ,அனாகதம்,விசுத்தி , ஆக்ஞை ) அவற்றுடன் சேர்த்து அந்தக்கரணங்கள் 4ம் சேர்த்து(மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்) 10 என்பாரும் உளர்.

உயிர் பிரியும் நேரத்தில் உற்ற துணையாக இருப்பது அவனது திருப்பாதங்களே என்கிறார் அருணகிரியார்.

நாற்றுதல் – நடுதல் என்ற பொருளில் வந்துள்ளது

2.
விளக்கம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்  – வினைகளின் வழியாக வரும் உடலை நீக்கி உயர் பதம் பெற ஒரு வழியையும் காண்கிலேன்.
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய் – வாழ்வு நதியினை ஒத்து இருக்கிறது.
நரம் பாற்பொதிந்த பொதிதனை  – உடல் நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது.
திண்டாடு மாறெனைப் போதவிட்ட – என்னை திண்டாடுமாறு விட்ட
விதிதனை நொந்துநொந்து – இது விதியினால் நிகழ்த்தப்பட்டது அதனால் மனம் நொந்துவிடுகிறது.

என்மனம் வேகின்றதே – இதனால் என் மனம் வேகின்றது.

பாடல்


கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98

பொருள்


(கதி – நற்கதி) முக்தி பெறுவதற்கு உரிய ஒரு மார்கத்தையும் நான் அறியவில்லை. இவ்வாழ்வு நதியினை ஒத்து  பொய் வாழ்வாய் இருக்கிறது. நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடல் கட்டப்பட்டிருக்கிறது. விதி வசப்பட்டு  நிலையற்றவாழ்வால் மனம் நொந்து என் மனம் வேகின்றது.
கருத்து
தத்துவார்தமாக சொல்லும் போது நதியினை ஒரு குறியீடாக பயன்படுத்துவார்கள். காரணம் நதி பருவ காலங்களுக்கு உட்பட்டு தனது போக்கில் சென்று கொண்டிருக்கும். அது போல வினையின் காரணமாக உயிர்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்.

அனைத்தும் வினையின் காரணமாக விதியாக உருவாகிறது. ‘என் செயல் யாதொன்றும் இல்லை’ என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவு கூறத் தக்கது.

வேகின்றது என்ற பதம் இன்னும் முழுமை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இது அருணகிரியாருக்காக எழுதப்பட்டதல்ல. இது சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது.

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 1

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 1

கந்தர் அலங்காரம்

நிலைலையாமைத் தத்துவம்

1.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18

விளக்கம்
வடிவேலோனை வாழ்த்தி – வடிவேலனை வாழ்த்தி
வறியவர்கென்றும் – வறியவர்களுக்கு
நொய்யிற் பிளவேனும் – மிகக் குறைந்த அளவு
பகர்மின்கள் – பகிராதவர்கள்
வெய்யிற்கு ஒதுங்க உதவா – உதவாது என்பது துணிபு.
இவ் வுடம்பின் வெறு நிழல் போல் – இந்த உடம்பின் நிழல்
கையிற் பொருளும் உதவாது – கையில் இருக்கும் பொருள் உதவாது
காணும் கடை வழிக்கே – இவைகள் கடை நாள் வரையினில் உதவாது.

பொருள்
வடிவேலனை வாழ்த்தி, வறியவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பகிராதவர்கள் பொருள்கள்,கடைசி நாள் வரையினில் இந்த உடம்பின் நிழல் வெய்யிற்கு ஒதுங்க உதவாது போல உதவாது.

கருத்து
நொய்யிற் பிளவேனும் – அரிசி உடைபடும் போது அதில் கிடைக்கும் மிக சிறிய அளவு உணவு நொய்.  அதில் மிக சிறிய அளவு கூட கொடுக்காதவர்கள். (யாவருக்கும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமந்திரம் இங்கு நினைவு கூறத் தக்கது.
காணும் கடை வழிக்கே – காதற்ற ஊசியும்….. வாரது காணும் கடை வழிக்கே  என்ற பட்டினத்தாரின் பாடல் நினைவு கூறத் தக்கது.

2.

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20

விளக்கம்
கோழிக் கொடியன் – அடி பணியாமல்
குவலயத்தே வாழ நினைக்கும் மதியிலி காள் – இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே
வல்வினை நோய் – வினையாகிய நோய்
ஊழிப் பெருவலி – ஊழ் வினையில் காரணமான பெரும் வலி
அத்தம் – செல்வம் எல்லாம்
ஆழப் புதைத்து – ஆழப் புதைத்து வைத்தால்

பொருள்
கோழிக் கொடியை கொடியாக கொண்டிருக்கும் அவனது தாளினைப் பணியாமல்  இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே, வினையாகிய நோய்யும், ஊழ் வினையில் காரணமான பெரும் வலியும் சேர்ந்து வருகையில் ஆழப் புதைத்து வைத்த செல்வம் அடுத்த பிறவியிலும் வருமோ(வராது என்பது துணிபு).

கருத்து
இறைவனை தலைவனாகவும், உயிர்களை தலைவியாகவும் வைத்துப் பாடுதல் மரபு. எனவே கோழிக் கொடியன் (சேவல் ஆண் – கோழி பெண்).
வல்வினை நோய் –  நோய் வலி தரக்கூடியது. அஃது ஒத்தே வினைகளும். மிக அதிக வினைகளின் காரணமாக வல்வினை
ஊழிப் பெருவலி – ஊழிப் பெருவலி  யாவுள என்ற குறள் இங்கு நினைவு கூறத் தக்கது.
அத்தம் – அத்தம் எல்லாம் குழைக்கும் என்ற அபிராமி அந்தாதி நினைவு கூறத் தக்கது.

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும்

கந்தர் அலங்காரம்

கந்தனை, முருகனை, வடிவேலனை, சண்முகனை, கார்த்திகேயனை எப்படி பெயரிட்டு அழைத்தாலும் அழகு என்று பொருள் வரும் கடவுளை பாடல் வரிகளால் அழகு செய்து அலங்காரம் செய்யும் வரிகள்.

காப்புச் செய்யுளையும் சேர்த்து 108 பாடல்கள்.

கீழ் கண்ட தலைப்புகளில், தலைப்புக்கு 2 பாடல் என்று எழுத உள்ளேன்.

நிலைலையாமைத் தத்துவம்
தன் நிலை குறித்து புலம்பல்
சிவன்/பெருமாளின் மருமகன்
கம்பீரம்
தத்துவம்
காட்சி

நிலைலையாமைத் தத்துவம் தொடக்க நிலை
நிலைலையாமைத் தத்துவம் என்பது தன் நிலை குறித்து புலம்பல் ஏற்படுத்தும்.
அது சிவன்/பெருமாளின் சிந்தனைகளை ஏற்படுத்தும்.
சிந்தனைகள் கம்பீரம் ஏற்படுத்தும்
அதன் மூலம் தத்துவம் பிறக்கும்
காட்சி நல்கும்.

திருவருள் முன்னின்று நிற்கட்டும்.

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.

புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள்.  (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள்.  உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)

1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.

இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?

1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.

நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான்  இருந்திருக்கிறது.

காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது.  இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.

ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான்,  இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.

காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.

Photo – Shivam

சமூக ஊடகங்கள்

கருடனின் பிறப்பு – 1

கருடனின் பிறப்பு (சிறிய வடிவில் – மூலம் – மகாபாரதம் – M. V. ராமானுஜாச்சாரியார்)
கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு – நாகங்களின் தாய்
வினதை – அருணன் மற்றும் கருடனின் தாய்.

ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.

அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.

அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் ‘வால் கருப்பாக தெரியும் ‘என்றும், ‘நான் ஜெயித்து விடுவேன்’ என்றும் உரைக்கிறாள். நாகங்கள் ‘நீ தவறு செய்கிறாய்’ என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.

வினதை  அடிமையாகி விடுகிறாள்.

அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். ‘அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்’ என்று கூறி மறைந்துவிடுகிறார்.
பின்பு..
(தொடரும்)

சமூக ஊடகங்கள்

காதல் = பக்தி இலக்கியம்

காதலில் பல வகைகள் உண்டு.  பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன.
தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.

திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் 
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் 
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் 
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் 
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் 
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் 
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன.
தோழியினடத்தில் கேட்கிறாள்.

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் –  முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள்.
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்  – அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் – அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.

இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் ‘கேட்கிறாள்’.’கேட்கிறாள்’  என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு  வேலையைச் செய்கின்றன்.
காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். ‘நீத்தாள்’ – மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் – மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)

எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள்.
தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.

அவனது தாளை சரணடைந்தாள்.
வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.

சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.

த்வைதம் – இருமைப்பற்றி பேசும்
அத்வைதம் –  -ஒருமைப்பற்றி பேசும்
விசிஷ்டாத்வதம் –  இருமை ஒன்றாதல் பற்றி பேசும்
சைவம் – மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்

பதி – இறைவன்
பசு – உயிர்கள்
பாசம் – இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.

ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும்
(காணாபத்தியம் – கணபதி முதன்மை,
கௌமாரம் – முருகன் முதன்மை,
சௌரம் – சூரியன்
சைவம் – சிவன் முதன்மை,
வைஷ்ணவம் – விஷ்ணு முதன்மை,
சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.

இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் – என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி – பதி.

சமூக ஊடகங்கள்