அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 22 (2021)


பாடல்

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே

இரண்டாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துஅன்னையினை பாகம் கொண்டு எழுந்து அருளும் திருமணஞ்சேரி திருத்தலம் பற்றி உரைக்கும்  பாடல்.

பதவுரை

கூர்மையாக முப்புரங்களையும் அழித்தும், குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமை அம்மையை தன்னுடைய ஒரு பாகத்தில் உடையவனாகியும், மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆன திருமணஞ்சேரியில் எழுந்து அருளும் இறைவனைப் பற்றி நின்றவர்களுக்கு பாவம் இல்லை.

விளக்க உரை

  • அயில் – கூர்மை
  • குயில் வாய்மொழியம்மை – அம்பிகை திருநாமம்
  • பயில்வான் – கோயில்கொண்டு இருப்பவன்
  • பற்றி நிற்றல் – பற்று விடுமாறு பற்றி வழிபடல்

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 07-Oct-2021


பாடல்

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே

கொங்கணச் சித்தர்

பதவுரை

சிவபெருமானின் அடியார்களையும், வேதங்களைப் பின்பற்றி நடப்பவர்களையும், சிறப்புக்குரிய ஞானம் கொண்டு புலமை பெற்ற பெரியோர்களையும் மனதளவிலும் கூட (அகத்தளவில்) வையாதே; அவர்களின் மனம் புண்படும்படியாக எதையும் செய்யாதே(புறத்தளவில்).

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 20 (2021)


பாடல்

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

மூதுரை – ஔவையார்

கருத்து – முன் ஜென்ம வினைவழியே அனைத்தும் நிகழும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

தான் எண்ணியவாறு  நடக்கவில்லையே என்று வருந்தும்  மட நெஞ்சமே! விரும்பியதை எல்லாவற்றையும் தரும்  கற்பக மரத்திடம் சென்று வேண்டி நின்றாலும் அது   எட்டிக் காயைக் கொடுக்கிறது எனில் அது அவர்கள் முன் பிறவியில் செய்த வினையின் பயன்.

விளக்க உரை

காஞ்சிரங்காய் – எட்டிக் காய்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 19 (2021)


பாடல்

ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
   யாவுமற் றகம்புறம் நிறைந்த
சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
   தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
போதியா வண்ணங் கைவிடல் முறையோ
   புன்மையேன் என்செய்கேன் மனமோ
வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
   வாயிலோ தீயினுங் கொடிதே

தாயுமானவர்

கருத்து – பெருமானின் போற்றத்தக்க இயல்புகளைச் சொல்லி தன்னைக் கைவிடாமல் காத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

தொடக்கம், நடு, முடிவு ஆகிய வகையில் இருந்தும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லாமல் உள்ளும் புறம்புமாய் நிறைந்து பேரின்ப சுகவடிவாகியும் பேரொளி சுடராகியும் நிற்கும் பெருமானே! உன்னுடைய அடிமையாகிய யான் பேரின்பப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும்படி உணர்த்தி அருளாமல் அடியேனைக் கைவிட்டு ஒதுக்குவது முறை ஆகுமோ?  இந்த எண்ணங்களால் எளியேன் உள்ளம் மிகவும் துன்புறுகின்றது. பொறிகள் மனத்தினும் மிகவும் கொடுமையாக தீயினைப் போன்று உள்ளன. தாழ்ச்சி உடையனாகிய யான் நீ கைவிட்டு விட்டால் என்ன செய்வேன்?  அதனால் எளியேனைக் கைவிடாதே.

விளக்க உரை

  • புன்மை – சிறுமை, இழிவு, இழிசெயல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 18 (2021)


பாடல்

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் – என்பார்
எழுத்து லவரயஅப் பாராதிக் கென்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது

திருநெறி 4 -உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்து – பாராதியின் நிறங்களையும், அவை குறிக்கும் எழுத்துக்களையும் உரைக்கும் பாடல்.

பதவுரை

பிருதிவி எனும் புவியானது பொன்னிறமாக இருக்கும்; அப்பு எனும் நீரானது வெண்மை  நிறமாக இருக்கும்; தேயு எனும் பொங்கிவரும் தீயானது சிவப்பு மிகுதியான சிவந்த நிறத்தில் இருக்கும்; வாயுவானது கருமை நிறமாயிருக்கும்; புகை மிகுந்த ஆகாயமானது புகைநிறமாயிருக்கும் என்று பெரியோர்கள் உரைப்பார்கள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனும் பாராதியில் பிருதிவிக்கு ல எழுத்தும் (லகாரம்),  அப்புவுக்கு வ எழுத்தும் (வகாரம்), தேயுவுக்கு ர எழுத்தும் (ரகாரம்),  வாயுக்கு ய எழுத்தும் (யகாரம்), ஆகாயத்திற்கு அ எழுத்தும் (அகாரம்)  அழுத்தமாகவும் பலம் பொருந்தியும் நிற்கும்.

விளக்க உரை

  • தூமம் – புகை, நறும்புகை , தூபகலசம், மண்கலச்சூளை

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 03-Oct-2021


பாடல்

மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு
தேங்காப் பால்ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காப் பால் ஏதுக்கடி?

அருளிய சித்தர் : குதம்பைச் சித்தர்

பதவுரை

இந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து எழும் குண்டலினி சக்தியை மேலெழுப்பி, சஹஸ்ராரத்தை அடையுமாறு செய்யும் போது அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது. அவ்வாறு இணைவதன் காரணமாக நிலைத்ததும்  என்றும் பொலிவானதுமான அமிர்தத் தேன் உடல் எங்கும் பரவுகிறது. இதுவே மாங்காதப் பால். இதனை உணர்ந்தவர்கள் தேங்காப்பால் போன்றதாகிய சிற்றின்பத்தை விரும்ப மாட்டார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 16 (2021)


பாடல்

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – சிவபெருமான் திருவடி அடைப்பெறுவதால் மனிதர்கள் பெறும் இயல்புகளைக் கூறும் பாடல்.

பதவுரை

இறந்த பிரமனுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய சிறந்த புண்ணியனை உள்ளத்தில் கொண்டு இருப்பதால் எவரிடத்தில் இருந்தும் யாம் என்றும் பின்வாங்க மாட்டோம்;  சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றதால் (அனைத்து உயிர்களும் சமமானதால்) இந்த பரந்துபட்ட  பூமியிலும் விண்ணுலகத்திலும் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழ மாட்டோம்; யாம் எந்த ஒன்றினாலும் குறை உடையவர்களாக ஆகமாட்டோம். பிறவியின் காரணமாக வருவதாகிய உறுபிணிகள் எம்மைத் துன்புறுத்தாமல் விட்டு ஓடிப் போயின.

விளக்க உரை

  • இடைதல் – பின்வாங்குதல்
  • எதிராவார் – இணையாவார்
  • உம்மை , ` உயர்வாவாரும் இல்லை
  • அன்றே – அமணரை விட்டு நீங்கிய அன்றே
  • உறுபிணி – மிக்கநோய்
  • செறல் – வருத்துதல்
  • பொன்றினார் – இறந்தவர்
  • நண்ணிய புண்ணியம் – அடைந்த புண்ணியப் பயன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 11 (2021)


பாடல்

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை யீந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திருவடியினை அடையாது  உயிர்கள் ஏனைய பயன்களை  அடையாது என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவருளால் ஆருயிரானது சிவமாகிச் சிவனின் உண்மை பேரறிவின் நிலையினில் நிற்கும். அந்தநிலையில்  மலம்  மாயை கன்மம் மாயேயம் என்னும் ஆகிய இயல்புகளும் நீங்கி நிலைத் தன்னமையினை அடையப் பெறும். சிவன் திருவடிக்கு அடிமையாம் அடையாளப் பொறியினை நல்கி, தானே குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்ட உள்ளத்திலே நிலைபெறச் செய்து, நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் எனும் சொரூப நிலையில்  சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்டான் என்பது உண்மையே.

விளக்க உரை

  • ஏனைய முத்திரை – முதன்மையான சின்முத்திரை
  • ஐம்மலங்கள் – திரோதாயி ஒழிந்தவை
  • சொரூபம் – இயற்கை.
  • முத்திரை – பொறி.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 10 (2021)


பாடல்

மூலம்

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

பதப்பிரிப்பு

தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே
நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து  அருளினான்;  தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து  அவனது பொன்போன்ற  திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்;  படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம்  உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!

விளக்க உரை

  • அறிந்து – தோற்றுவித்தது என்பது  பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
  • நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 22 (2021)


பாடல்

உரமன் உயர்கோட்டு உலறுகூகை அலறும் மயானத்தில்
இரவில் பூதம் பாடஆடி, எழிலார் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான், எமை ஆளும்
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருப்பழனம் திருத்தலத்தில் உறையும் இறைவனின் பெருமைகளையும் தோற்றத்தையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

எம்மை ஆளும் பரமர் ஆனவரும், பகவன் ஆனவரும், பரமேச்சுவரன் எனும் பெயரினை உடையவரும், திருப்பழன நகரின் உறைபவரான இறைவன் நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் இருப்பதும், வலிமை பொருந்திய உயரமான வற்றிய மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகை எனப்படும் ஆந்தைகள் அலறும் மயானத்தில் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திருவிளையாடல் புரியும் பெருமான் ஆவார்.

விளக்க உரை

  • உரம் – வலிமை.
  • உலறு கோட்டு – வற்றிய கிளை
  • கூகை – கோட்டான்
  • அலர் மேலைப் பிரமன் – தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் – கள். தேன்; 
  • பரமன் – உயர்ந்தவற்றிற்கு எல்லாம் உயர்ந்தவன்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 21 (2021)


பாடல்

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே

மூன்றாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்துதிருவீழிமிழலை இறைவனின் தோற்ற சிறப்புகளை உரைத்து, அவரின் குணங்களையும் உரைக்கும்  பாடல்.

பதவுரை

மான், ஒளிரும் தன்மை உடைய மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியவற்றைக் கொண்டு  விலைமதிப்பு கூற இயலாத மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில்  வீற்றிருந்து அருளும் இறைவனானவர் தலையிலே பிறைச் சந்திரனைச் சூடி, கழுத்திலே எலும்புமாலை விளங்குமாறு, கையில் சூலம், உடுக்கை ஆகியவற்றைக் கொண்டு அலையினை உடைய கங்கையை ஏற்று, இடபக்கொடி கொண்டு இருப்பவர்; யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்றே  சாரூப பதவி பெறச் செய்பவர்.

விளக்க உரை

  • கலை – மான்
  • இலங்கும் மழு – ஒளிரும் மழு ஆயுதம்
  • கட்டங்கம் – யோகதண்டம்
  • கண்டிகை – உருத்திராட்சக் கண்டிகை
  • தலை தாழ்வடம்
  • தமருகம் – உடுக்கை
  • அலை இலங்குபுனல் – அலையினால் விளங்குகின்ற கங்கை
  • ஏற்றவர் – இடபக்கொடி யுடையவர் .
  • நகுவெண்டலை – கையிலேந்திய கபாலம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 9 (2021)


பாடல்

அக்கா ரணிவட மாகத்தர் நாகத்தர்
நக்கா ரிளமதிக் கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித் துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே

நான்காம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைக்கும் பாடல்.

பதவுரை

திருப்புகலூர் திருத்தலத்தில் உறையும் ஈசனானவர் உருத்திராக்கம் நிறைந்த மாலையைப் பூண்ட மார்பினை உரையவர்; கழுத்தில் பாம்பினை உடையவர்; ஒளி வீசும் பிறையை முடிமாலையாகச் சூடியவர்; நாள்தோறும் இறந்தவர் மண்டையோட்டினை ஏந்திப் பிச்சை உணவு வாங்க ஊர் தோறும் செல்பவர் ஆவர்.

விளக்க உரை

  • அக்கு – உருத்தி ராக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 8 (2021)


பாடல்

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் !!!! மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் பிறக்கும் இறக்கம் மேல் வினையும் செய்யும்
ஆதாலல் அவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே

சிவஞானசித்தியார் – அருணந்திசிவம்

கருத்து – எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வ வடிவில் வந்து அருளுபவன் சிவனே என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

மனத்தின் கண் நிறுத்தி எந்தத் தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும் அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க அந்த தெய்வங்களால் இயலாது என்பதால் மாதொரு பாகனாகிய சிவனே வந்து அந்த தெய்வமாகி அருள்செய்வான். பிறதெய்வங்கள் யாவும் சிவனுக்கு உட்பட்டு தொழில் செய்வதால் அவைகள் வினைகள் கொண்டு வேதனைப்படும்; இன்ப துன்பம் அனுபவிக்கும்; இறக்கும்; பிறக்கும்; ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்க வல்லவன் அவனே ஆவான்.

விளக்க உரை

  • மாதொரு பாகனார் – சிவச்சக்தி ரூபம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 7 (2021)


பாடல்

ஒன்றன் றிரண்டன் றுளதன் நிலதன்று
நன்றன்று தீதன்று நானன்று-கின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன் றடியன்று தான்

திருநெறி 6 – திருவுந்தியார் – திருக்களிற்றுப்படியார்

கருத்து – சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குரு உணர்த்த ஆன்மா சிவத்தோடு ஒன்றியநிலை  எவ்வாறு எனில் இது இரண்டானது எனவும்,  ஒன்றுமல்ல எனவும், பிரிந்து இருப்பதால் இரண்டும் அல்ல எனவும், எக்காலத்திலும் உள்ளதும் அல்ல எனவும், ஆன்மா சிவப் பற்றினை நுகரும் நுகர்ச்சி உண்மையால் இல்லதும் அன்று எனவும், பகுத்தறியும் உயிரறிவுக்கு அப்பாற்பட்டதால் நன்றும் அன்று தீதும் அன்று எனவும்,  தன்மை முன்னிலே படர்க்கை எனச் சுட்டி உணரப்படும் இடத்திற்கும் சுட்டுணர்விற்கும் அப்பாற் பட்டு இருப்பதால்  நானன்று நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று எனவும், இதுவே ஆன்மாவென்று சொல்லிநின்ற நிலையும் அல்ல எனவும், இது சிவனும் அல்ல எனவும், இது  சிவஞானமும் அல்ல எனவும், உலகின் தோற்றத்திற்கு முதன்மையாக இருப்பதால் ஆதியுமல்ல எனவும், எல்லாவற்றுக்கும் முடிவாக இருப்பதால்  அந்தமுமல்ல எனவும் எந்த வகையினிலும் உரைக்கப்பட முடியாது. சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும்.

விளக்க உரை

  • நன்றன்று தீதன்று – வினைகள் அறுபட்ட நிலை
  • தலையன் றடியன்று – தோற்ற ஒடுக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 6 (2021)


பாடல்

எல்லா உலகமும் ஆனாய் நீயே
     ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
     ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
     புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
     திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்

கருத்து – திருவையாறு தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைத்து வீடுபேற்றினை அருள வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

திருவையாறு எனும் திருத்தலத்தில் அகலாத செம்பொன் போன்ற சோதீ வடிவாக இருப்பவனே! நீ எல்லா உலகங்களுக்கும் ஆனவனாகவும்,  பேரருள் காரணமாக எளிமையாக வந்து அருளுபவனாகவும், நல்லவர்களுக்கு அவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாகவும், ஞான ஒளி வீசும் மெய் விளக்காக இருப்பவனாகவும், கொடிய வினைகளைப் போக்குபவனாகவும், புகழ்ச்சி மிக்க சேவடி என் மேல் வைத்தவனாகவும் செல்வங்களுள் மேம்பட்டதான வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.

விளக்க உரை

  • எல்லா உலகமும் ஆனாய் – இறைவனது பெருநிலை – சர்வ வியாபக நிலை
  • ஏகம்பம் மேவி இருந்தாய் – அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் நிலையினை விளக்கும் நிலை. திருவேகம்பத்தில் அருளுதல்
  • சுடர் – ஒளி –  ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு
  • செல்வமாய – செல்வாய- உண்மைச் செல்வம், அழியாச் செல்வம், வீடுபேறு  ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே எனும் பொருள் பற்றியது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 3 (2021)


பாடல்

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
   வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
   எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
பல்லை உக்க படுத லையிற்
   பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
   ஓண காந்தன் தளியு ளீரே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.

பதவுரை

நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து  திருவோணகாந்தன்தளி  என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும்  ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை  நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?

விளக்க உரை

  • உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
  • திரிந்தும்- இழிவு குறிப்பு
  • பகல் – நாள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – ஆனி – 2 (2021)


பாடல்

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம்

மூதுரை – ஔவையார்

கருத்து – தீங்குகளை மனதில் கொள்ளாமல்  அவர்களைக் காக்கும் சான்றோர்கள் குணம் பற்றி உரைக்கும் பாடல்.

பதவுரை

மாந்தர்களால் வெட்டுப்பட்டு தன்னுடைய அவயங்கள் ஆகிய கிளைகள் குறையும் போதும் தன்னை வெட்டுபவனுக்கு நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடைய சான்றோர்கள் தங்கள் உயிருக்கே தீங்கு நேரினும் அந்த தீங்குகளை மனதில் கொள்லாமல் அவ்வாறு தீங்கு செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 24 (2021)


பாடல்

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – உயிர் நிலையாமை – திருமூலர்

கருத்து – ஈசனை அறியாமையால் உணர்வினை தரும் உயிர் நிலையாமையையும் அறியார்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

உடல் வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுளானவரும், வேதத்தின் முடிவாகிய வேதாந்த வடிவமாக இருந்து கூத்து நிகழ்த்துபவனாகவும் இருப்பவனை, வெந்து ஒழிவது இந்த உடல் என்று அறியாமலும்,  வெந்து ஒழிவதாகிய நம் உடம்பினுள்ளே உறைந்து விளையாடும் நந்தியாகவும் இருப்பதை உபாயத்தால் அறியாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே ஆவர்.

விளக்க உரை

  • வேம் கட நாதன் – வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள்.
  • வேம் கடத்துள்ளே – வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்
  • வேம் கடம் என்று – வெந்தொழியும் உடம்பு
  • விரகு – உபாயம்
  • தாங்க வல்லதாகிய ஆருயிர் – உயிரை அதற்கு உயிராய் நின்று எப்பொழுதும் காக்கும் இறைவன்; சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 22 (2021)


பாடல்

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
   பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
   காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
   தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.

பதவுரை

படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.

விளக்க உரை

  • படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
  • பாவிக்கொள்ளுதல் – மூடிக்கொள்ளுதல், சுற்றிக் கொள்ளுதல்
  • தாழ்தல் – தங்குதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – பிலவ – வைகாசி – 10 (2021)


பாடல்

தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
     தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
     பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
     ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
     நல்லதிரு உளம் அறியேன் ஞானநடத் திறையே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்து – நலம் புரியும் உலகில் உண்மையை அறியாது ஏன் பிறந்தேன் என்று எண்ணுதலைக் குறிக்கும் பாடல்.

பதவுரை

உண்மையில் தவம் செய்யாத யான், தவம் செய்யும் அறிஞர் போல நடித்துக் கொண்டிருக்கின்றேன்; உணர்வில்லாத சடப் பொருள் போல இதுநாள் வரையில்  இருந்து ஒழிந்தேன்; பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்து நல்ல பாத்திரத்தில் ஊற்றுவதற்கு உரிய பாலை நிலத்தில் ஊற்றும்  கடையவனாக ஆயினேன்;  பயன்படாததும்,  வஞ்சம் உரையதும், கற்பாறை போன்றதுமான   மனமாகிய சுமந்து திரிகின்றேன்; இவ்வாறு செய்தல் அவமானத்தைத் தரும் என்றுகூட  யான் அறியத் தகுவதறிதல் இல்லேன்;  ஞானத்தினை தரும் அன்பு செலுத்துதலையும் அறியேன்; மெய்யான அன்பு கொண்டு, திருநடம் புரியும் இறைவனாகிய உன்னுடைய திருவடித் தொண்டர்களுக்கு அணுவளவும் உதவாதவன்; இத்தகைய யான் நாளும் புதுமையான இந்த உலகில் பிறந்த காரணம் அறிகிலேன்; பிறப்பித்த உன்னுடைய  திருவுள்ளக் குறிப்பு யாதோ என்று  தெரியேன்.

விளக்க உரை

  • தவம் – உற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், தீங்கு செய்வன செய்யாதன என்ற வேற்றுமையின்றி ஏனைய உயிர்கட்குத் தீமை செய்யாமை
  • தருக்குதல் – பெருமிதம் கொள்ளுதல்
  • சடம் – அறிவில்லாத பொருள்
  • பவம் – பிறப்பு
  • பவம் புரிவேன் – பல்வகைப் பிறப்புக்களுக்கு ஏதுவாகிய வினைகளைச் செய்வேன் என்பது பற்றியது
  • மனத்தைப் பாறை என்பதால் அதனைத் தாங்கும் தம்மை, “சுமந்து உழல்வேன்” என்று கூறுயது.
  • மனப்பாறை – வஞ்ச நினைவால் உறைவு கொண்டு இரக்கமின்றி இருப்பது பற்றியது
  • அவம் – வீண், பயனில்லாத செயல்களைச் செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்