பாடல்
எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – திருவையாறு தலத்தில் உறையும் ஈசனின் பெருமைகளை உரைத்து வீடுபேற்றினை அருள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
திருவையாறு எனும் திருத்தலத்தில் அகலாத செம்பொன் போன்ற சோதீ வடிவாக இருப்பவனே! நீ எல்லா உலகங்களுக்கும் ஆனவனாகவும், பேரருள் காரணமாக எளிமையாக வந்து அருளுபவனாகவும், நல்லவர்களுக்கு அவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாகவும், ஞான ஒளி வீசும் மெய் விளக்காக இருப்பவனாகவும், கொடிய வினைகளைப் போக்குபவனாகவும், புகழ்ச்சி மிக்க சேவடி என் மேல் வைத்தவனாகவும் செல்வங்களுள் மேம்பட்டதான வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.
விளக்க உரை
- எல்லா உலகமும் ஆனாய் – இறைவனது பெருநிலை – சர்வ வியாபக நிலை
- ஏகம்பம் மேவி இருந்தாய் – அவன் தனது பேரருள் காரணமாக எளிவந்து நிற்கும் நிலையினை விளக்கும் நிலை. திருவேகம்பத்தில் அருளுதல்
- சுடர் – ஒளி – ஞானமாகிய ஒளியையுடைய விளக்கு
- செல்வமாய – செல்வாய- உண்மைச் செல்வம், அழியாச் செல்வம், வீடுபேறு ஆகிய செல்வத்தைத் தருபவன் நீ ஒருவனே எனும் பொருள் பற்றியது