பாடல்
கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்
கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ?
காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்
கோலங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ?
அருளியச் சித்தர் : குதம்பைச் சித்தர்
கருத்து – அகக்கண் கொண்டு கண்டவர்களுக்கு புறத்தில் கொண்டாட்டங்களும், புறத் தோற்ற அழகு செய்தலும் எதற்காக என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
குதம்பை எனும் ஆபரணத்தை காதில் அணிந்தவளே! ஞானத்தினால் மெய் உணர்வு கொண்டு நாம் காணும் போது நம்மைக் கண்டு அருளுபவரை அகக் கண் கொண்டு அதில் ஒன்றி கருத்தோடு இருப்பவர்களுக்கு புறக் கொண்டாட்டங்கள் எதற்காக? காலன் எனும் எமனை வெல்லக்கூடிய கருத்தினை கொண்டு அவனை வெல்லக்கூடியவர்களுக்கு புறத்தினால் அமையப்பெறும் கோலங்கள் எதற்காக?
கண்டாரை நோக்குதல், கருத்தோடு இருத்தல், காலனை வெல்லுதல் போன்றவை மிகவும் சூட்சமமானவை. இவைகள் குரு மூலமாக உபதேசம் செய்யப்பட்ட முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.