அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 10 (2021)


பாடல்

மூலம்

தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே

பதப்பிரிப்பு

தானெனை முன்படைத்தான் அதுஅறிந்து தன் பொன்அடிக்கே
நான் எனப் பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வான்எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – குற்றம் உடைய தன்னையும் பொருட்டாக மதித்து உடலையும், உயிரையும் மதித்த தன்மையை வியந்து கூறும் பாடல்.

பதவுரை

திருக்கயிலையில் வீற்றிருந்து அளும் முதல்வன் ஆகியவனும் உத்தமன் ஆகியவனும் ஆன ஈசன், தானே முன்பு என்னை இந்த பூமியில் தோன்றச் செய்து  அருளினான்;  தோற்றுவித்ததன் காரணத்தை உணர்ந்து  அவனது பொன்போன்ற  திருவடிகளுக்கு என்னளவில் (தோத்திரம்) பாடல்கள் செய்தேன்;  படைப்பின் நோக்கம் உணர்ந்தும் அதிகம் பாடல்கள் பாடாமல் நாய் போன்ற குற்றம்  உடைய என்னைப் பொருட்படுத்தாமல் என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு , பெரியதான யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலோடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!

விளக்க உரை

  • அறிந்து – தோற்றுவித்தது என்பது  பாடுதல் பொருட்டு என்று பெறப்படும்
  • நொடித்தல் – அழித்தல். நொடித்தான் மலை – (உயிர்களின் வினைகளை) அழிக்கும் கடவுளது மலை

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.