அமுதமொழி – பிலவ – வைகாசி – 22 (2021)


பாடல்

படைக்கட் சூலம் பயிலவல் லானைப்
   பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்
கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்
   காமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்
சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்
   தண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே

ஏழாம் திருமுறை -தேவாரம் – சுந்தரர்

கருத்து – திருவாழ்கொளி புத்தூரில் உறையும் ஈசனின் பெருமைகளை உறைத்து அவனை விடுத்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் எனக் கூறும் பாடல்.

பதவுரை

படைகளில் முதன்மையான சூலத்தை தனது படையாகக் கொண்டவனும், தன்னை நினைப்பவர்களது உள்ளத்தில் பரவி அந்த சிந்தனைகளை அதிகப்படுத்துவனும், ஊர்தோறும் சென்று பிச்சையை விரும்பிச் செய்பவனும், அழகிய வடிவம் கொண்ட காமனது உடலை அழியச் செய்தவனும், பெருக்கெடுத்து செல்லும் கங்கையைச் சடையில் தங்கும்படி செய்தவனும், நீர்வளம் உடைய மண்ணி ஆற்றின் கரையில் இருப்பவனும், எண்குணங்கள் அமையப் பெற்றவனும், நீர் மடைகளில் நீலோற்பல மலர் மலர்ந்து இருக்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போன்றவனுமாகிய பெருமானை மறந்து யான் வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினைக்கமாட்டேன்.

விளக்க உரை

  • படைக்கண் – உள் என்னும் பொருளதாய் வந்தது. ஏனைய படைகளிலும் சிறந்தது சூலம் எனும் பொருள் பற்றியது.
  • பாவிக்கொள்ளுதல் – மூடிக்கொள்ளுதல், சுற்றிக் கொள்ளுதல்
  • தாழ்தல் – தங்குதல்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.