
பாடல்
வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
பல்லை உக்க படுத லையிற்
பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் தளியு ளீரே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – திருவோணகாந்தன்தளி தலத்தில் இருக்கும் ஈசனின் பெருமைகளை உரைத்து தம்மை ஆட்கொள்ள வேண்டும் என உரைக்கும் பாடல்.
பதவுரை
நித்தமும் பல் நீங்கியதும், இறந்தவர்களின் தலை ஆனதுமான மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கத் திரிந்து திருவோணகாந்தன்தளி என்னும் திருத்தலத்தில் வாழும் பெருமானே! யாம் வல்லமை மிக்கதாகிய பல கருத்துக்கள் சொல்லி உம்மை வாழ்த்திய போதும், நீர் திருவாய் திறந்து, எமக்கு தரத்தக்கதான யாதேனும் ஒருபொருளை, ‘இல்லை’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; அன்றியும் ‘உண்டு’ என்றும் சொல்லாதவராக இருக்கின்றிர்; உயிர்ப்பில்லா வாழ்வினை விட்டொழிய மாட்டாதவராக இருப்பவராகிய எம்மை நீர் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு?
விளக்க உரை
- உமக்கு அடியவர்களாகிய நாங்கள் எங்ஙனம் வாழ்வோம் என்பது குறிப்பு
- திரிந்தும்- இழிவு குறிப்பு
- பகல் – நாள்