அமுதமொழி – பிலவ – ஆனி – 7 (2021)


பாடல்

ஒன்றன் றிரண்டன் றுளதன் நிலதன்று
நன்றன்று தீதன்று நானன்று-கின்ற
நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று
தலையன் றடியன்று தான்

திருநெறி 6 – திருவுந்தியார் – திருக்களிற்றுப்படியார்

கருத்து – சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குரு உணர்த்த ஆன்மா சிவத்தோடு ஒன்றியநிலை  எவ்வாறு எனில் இது இரண்டானது எனவும்,  ஒன்றுமல்ல எனவும், பிரிந்து இருப்பதால் இரண்டும் அல்ல எனவும், எக்காலத்திலும் உள்ளதும் அல்ல எனவும், ஆன்மா சிவப் பற்றினை நுகரும் நுகர்ச்சி உண்மையால் இல்லதும் அன்று எனவும், பகுத்தறியும் உயிரறிவுக்கு அப்பாற்பட்டதால் நன்றும் அன்று தீதும் அன்று எனவும்,  தன்மை முன்னிலே படர்க்கை எனச் சுட்டி உணரப்படும் இடத்திற்கும் சுட்டுணர்விற்கும் அப்பாற் பட்டு இருப்பதால்  நானன்று நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவும் அன்று எனவும், இதுவே ஆன்மாவென்று சொல்லிநின்ற நிலையும் அல்ல எனவும், இது சிவனும் அல்ல எனவும், இது  சிவஞானமும் அல்ல எனவும், உலகின் தோற்றத்திற்கு முதன்மையாக இருப்பதால் ஆதியுமல்ல எனவும், எல்லாவற்றுக்கும் முடிவாக இருப்பதால்  அந்தமுமல்ல எனவும் எந்த வகையினிலும் உரைக்கப்பட முடியாது. சிவபோகம் இன்னதன்மை உடையது என  உரையால் உணர்த்த இயலா தன்மை உடையது  என்பதை விளக்கும்.

விளக்க உரை

  • நன்றன்று தீதன்று – வினைகள் அறுபட்ட நிலை
  • தலையன் றடியன்று – தோற்ற ஒடுக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலை

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.