
பாடல்
என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே
ஆறாம் திருமுறை – தேவாரம் – திருநாவுக்கரசர்
கருத்து – சிவபெருமான் திருவடி அடைப்பெறுவதால் மனிதர்கள் பெறும் இயல்புகளைக் கூறும் பாடல்.
பதவுரை
இறந்த பிரமனுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய சிறந்த புண்ணியனை உள்ளத்தில் கொண்டு இருப்பதால் எவரிடத்தில் இருந்தும் யாம் என்றும் பின்வாங்க மாட்டோம்; சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றதால் (அனைத்து உயிர்களும் சமமானதால்) இந்த பரந்துபட்ட பூமியிலும் விண்ணுலகத்திலும் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழ மாட்டோம்; யாம் எந்த ஒன்றினாலும் குறை உடையவர்களாக ஆகமாட்டோம். பிறவியின் காரணமாக வருவதாகிய உறுபிணிகள் எம்மைத் துன்புறுத்தாமல் விட்டு ஓடிப் போயின.
விளக்க உரை
- இடைதல் – பின்வாங்குதல்
- எதிராவார் – இணையாவார்
- உம்மை , ` உயர்வாவாரும் இல்லை
- அன்றே – அமணரை விட்டு நீங்கிய அன்றே
- உறுபிணி – மிக்கநோய்
- செறல் – வருத்துதல்
- பொன்றினார் – இறந்தவர்
- நண்ணிய புண்ணியம் – அடைந்த புண்ணியப் பயன்