
பாடல்
ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம்
யாவுமற் றகம்புறம் நிறைந்த
சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான்
தொண்டனேன் சுகத்திலே இருக்கப்
போதியா வண்ணங் கைவிடல் முறையோ
புன்மையேன் என்செய்கேன் மனமோ
வாதியா நின்ற தன்றியும் புலன்சேர்
வாயிலோ தீயினுங் கொடிதே
தாயுமானவர்
கருத்து – பெருமானின் போற்றத்தக்க இயல்புகளைச் சொல்லி தன்னைக் கைவிடாமல் காத்து அருள வேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
தொடக்கம், நடு, முடிவு ஆகிய வகையில் இருந்தும் எந்த வகையிலும் பிணைப்பு இல்லாமல் உள்ளும் புறம்புமாய் நிறைந்து பேரின்ப சுகவடிவாகியும் பேரொளி சுடராகியும் நிற்கும் பெருமானே! உன்னுடைய அடிமையாகிய யான் பேரின்பப் பெருவாழ்வில் நிலைத்து நிற்கும்படி உணர்த்தி அருளாமல் அடியேனைக் கைவிட்டு ஒதுக்குவது முறை ஆகுமோ? இந்த எண்ணங்களால் எளியேன் உள்ளம் மிகவும் துன்புறுகின்றது. பொறிகள் மனத்தினும் மிகவும் கொடுமையாக தீயினைப் போன்று உள்ளன. தாழ்ச்சி உடையனாகிய யான் நீ கைவிட்டு விட்டால் என்ன செய்வேன்? அதனால் எளியேனைக் கைவிடாதே.
விளக்க உரை
- புன்மை – சிறுமை, இழிவு, இழிசெயல்