சித்த(ர்)த் துளிப்பு – 07-Oct-2021


பாடல்

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே

கொங்கணச் சித்தர்

பதவுரை

சிவபெருமானின் அடியார்களையும், வேதங்களைப் பின்பற்றி நடப்பவர்களையும், சிறப்புக்குரிய ஞானம் கொண்டு புலமை பெற்ற பெரியோர்களையும் மனதளவிலும் கூட (அகத்தளவில்) வையாதே; அவர்களின் மனம் புண்படும்படியாக எதையும் செய்யாதே(புறத்தளவில்).

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Jan-2021


பாடல்

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்

அருளிய சித்தர் : கொங்கணர்

பதவுரை

சிவசக்தி ரூபத்தில் காலசம்ஹார மூர்த்தி ஆகி இடது காலை உயர்த்தி காலன் எனும் எமனை உதைத்தவளும், நீல கண்ட வடிவத்தில் இருந்து ஈசன் அருந்திய விஷத்தினை தாங்கியவளும், எண்ணில்லாத இந்த புவனங்களை எல்லாம் படைத்தவளும், மானிட வாழ்வு நீக்கம் பெறுவதன் பொருட்டு அவர்களுக்கு முக்தி அளிப்பவளுமாய் இருப்பவள் வாலை.

வாலைப் பூசை கொண்டோர் பிறவி அறுப்பர் என்பதால், காலனை உதைத்தவள் என்றும், யோக முறையில் கண்டத்திற்கு மேல் பூசை செய்து அன்னையை அடைபவர்களுக்கு விஷம் தீண்டாது என்றும் பொருள் உரைப்பாரும் உண்டு. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 15-Dec-2020


பாடல்

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
   சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்
   உற்பன மானது மஞ்செழுத்தாம்

அருளிய சித்தர் : கொங்கணர்

பதவுரை

ஐந்தெழுத்தால் இந்த உலகம் படைக்கப்படது; அந்த ஐந்தெழுத்தில் இருந்தே சீவன்கள் படைக்கப்பட்டது; ஐந்தெழுத்து கொண்டே இந்த நாள் எனப்படுவதும் உகம் முடிவுக்கு வரும்; ஐந்தெழுத்து கொண்டே நாளின் தோற்றம் உறுதி செய்யப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – மார்கழி – 19 (2019)

பாடல்

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!

கொங்கணர்

பதவுரை

வாலைப்பெண்ணே! உச்சி ஆகிய துரியத்திற்கு நேராக உகாரம் ஆனதும், மனோன்மணித் தாயார்  வாசம் செய்யும் அண்ணாக்குக்கு மேலே இருப்பதுமான உண்ணாக்கு மேலே சதாசிவமும்,   சதாசிவனும் மனோன்மணியும் இருக்கப்பட்ட இடமானதும், சப்தம் பிறந்த இடமானதுமான இடத்தில் தினமும் வைத்த விளக்கானது சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும். அந்த வலிமை வாய்ந்த விளக்கானது அணைந்து விடாமல் எப்பொழுதும் சுடர் விட்டு பிரகாசிக் கொண்டிருக்கும்.

விளக்க உரை

  • இவரின் பெரும்பாலான பாடல்கள் சாக்தம் சார்ந்த வாலைப் பெண்ணை முன்வைத்து எழுதப்பட்டவை என்பதால் பாடல்களில் வாலைப்பெண்ணே என்பது இடம்பெறும்.
  • அச்சு – அடையாளம்; உயிரெழுத்து; வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு; வலிமை; அச்சம்; துன்பம்; நெசவாளர் நூல்களை அழுத்தப் பயன்படுத்தும் கருவி.

 

( மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குருவருள்)

Loading

சமூக ஊடகங்கள்