அமுதமொழி – பிலவ – ஆனி – 8 (2021)


பாடல்

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் !!!! மற்றத் தெய்வங்கள்
வேதனைப்படும் பிறக்கும் இறக்கம் மேல் வினையும் செய்யும்
ஆதாலல் அவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே

சிவஞானசித்தியார் – அருணந்திசிவம்

கருத்து – எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வ வடிவில் வந்து அருளுபவன் சிவனே என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

மனத்தின் கண் நிறுத்தி எந்தத் தெய்வத்தை வணங்கி வழிபாடு செய்தாலும் அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க அந்த தெய்வங்களால் இயலாது என்பதால் மாதொரு பாகனாகிய சிவனே வந்து அந்த தெய்வமாகி அருள்செய்வான். பிறதெய்வங்கள் யாவும் சிவனுக்கு உட்பட்டு தொழில் செய்வதால் அவைகள் வினைகள் கொண்டு வேதனைப்படும்; இன்ப துன்பம் அனுபவிக்கும்; இறக்கும்; பிறக்கும்; ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இத்தகைய குறைவுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்க வல்லவன் அவனே ஆவான்.

விளக்க உரை

  • மாதொரு பாகனார் – சிவச்சக்தி ரூபம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி- 7 (2020)


பாடல்

காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன் றில்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பிரமாணவியல் – இரண்டாம் சூத்திரம்

கருத்து – சிவனே அறங்களை வகுத்தல் ஆதலால், அவனே வணங்கத் தக்கவன் எனும்பாடல்.

பதவுரை

இறைவன் ஆகிய சிவன் சொன்னவிதிகளே அறமாகும் என்பதாலும், வினை பற்றி உயிர்களால் செய்யப்படும் செயல்களை சாட்சி பாவத்தில் நின்று காண்பவன் அவன் என்பதாலும் அவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது மாண்புடைய அறமாகும். (ஏனைய கடவுளர்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியபடி அருளுபவன் என்பது பெறப்படும்). அவனன்றி செய்யப்படும் அறங்கள் எல்லாம் பிறவியினைத் தரும் என்பதால் அவை வீணாகும் என்பதாலும் உயிர்களிடத்தில் கருணை உள்ளவனாகவும், விருப்பம் ஏதும்  இல்லாதவனாகவும் ஆகிய அவன் பூசையே விருப்பத்தோடு செய்யத்தக்க பூசையாகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – சித்திரை – 22 (2020)


பாடல்

நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பில்
தேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்

திருநெறி – சிவஞானசித்தியார்

கருத்துஉமையம்மை சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் ஏற்பட்டவைகளே போக, வேக, யோக வடிவங்கள் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

புவனங்களுக்கு நாயகனின் திருக்கண்களை நாயகி மூடியபோது சகலம், கேவலம், சுத்தம் ஆகிய தத்துவங்கள் ஒன்றான தன்மையான சங்காரம் ஒத்து எங்கும் இருள் சூழ்ந்த போது,  தனது நெற்றிக் கண்ணை திறந்தார். அந்த முதல்வன் கொண்ட திருமேனிகள் போகம் கொள்வதன் பொருட்டு  சில திருமேனி போகவடிவமும், வினையினை விடுதலை முன்வைத்து சில திருமேனி கோரவடிவமும், யோகமுத்தி தருவதன் பொருட்டு யோக வடிவமும் வெளிப்பட்டன; இவைகள் ஆன்மாக்கள் உய்வுறுவதன் பொருட்டு அருள்புரிக்கூடிவை என்பதால் இந்த அருளுதல் தொழில் செய்வதற்காக  திருக்கண் புதைத்த திருவிளையாட்டின் வழி நிகழ்ந்த நிகழ்ச்சியே என்பதற்கு இது சான்று.

விளக்க உரை

  • நயப்பு – அன்பு. விருப்பம், இன்பம், தலைவி எழிலைப் புகழ்கை, மலிவு, இலாபம், மேம்பாடு, நன்மை, மகிழ்ச்சி
  • பாய்தல் – பரத்தல்
  • தேயம் – உலகம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – பங்குனி – 23 (2020)


பாடல்

நீடு பாவ புண்ணி யங்க ளால்நிரய வானகம்
கூடு வோர்கள் இன்றுநின்று கூட்டு வோர்கள் இன்மையின்
ஓடு மாக ணைத்தி றத்தின் உற்றவா றுரைத்தியேல்
வீடு மாகணைக்கு நாடும் வில்லி போல வேண்டுமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார் – பரபக்கம் – நிகண்டவாதி மதம்

கருத்து – வினைகளை அனுபவிக்கசெய்ய ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்பதை அறுதியிட்டு கூறும் பாடல்.

பதவுரை

ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களை அறிந்து நின்று அவற்றின் பலாபலன்களை செலுத்துவிக்க ஒரு கர்த்தா இல்லையென்று நீ சொன்னால், மிக்க பாவங்களால் ஆன நரகங்களையும் மிக்க புண்ணியங்களால் ஆன சுவர்க்கங்களில்  பொருந்திநின்று அதனைஅநுபவிப்பாரில்லை; விரைந்த செலுதப்பட்ட பெரிய அம்பு இலக்கில் படுதல் போல செய்யப்பட்ட புண்ணியபாவங்கள் செய்தவனிடத்தே விரையத் தாமே சென்று பற்றுமென்று நீ சொன்னால், அவ்வாறு விடப்பட்ட பெரியகணைக்கு இலக்கை சென்று அடையும்படி செய்வதற்கு ஒரு வில்லாளன் வேண்டும் எனக் கொண்டால் அந்த ஆன்மாக்கள் செய்த கன்மங்களை அநுபவிக்கும்படி கூட்டுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்.

விளக்க உரை

  • வில்லி – வில்லாளன், மன்மதன், வீரபத்திரன், அருச்சுனன், வேடன், வில்லிபுத்தூராழ்வார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – மார்கழி – 19 (2020)


பாடல்

உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின்
உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான்
உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக் கென்னின்
உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

கருத்துஉறக்கத்தில் உயிர் தன்னை அறியாமையினால் உடலில் இருந்து வேறுபட்டு மற்றொரு உயிர் என்பதை மறுதலிக்கும் பாடல்.

பதவுரை

அவயவங்கள்  குறைபாடுகள் இல்லாமல் வாயுக்கள் ஒன்று கூடி உண்டான இந்த உடலில்  அவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கும் மற்றொரு உயிர் என்று அறியத் தக்க உணர்வு தோன்றுமானால் உணர்ச்சி அற்ற நிலைக்கு செல்லக்கூடியதான இந்த உடலானது, பூதக்கூட்டத்தால் ஒன்றாக கூடி, குறைவின்றி கிடைக்கும் நிலை ஆகியதும்  உறக்கத்திலும் அறிவு வெளிப்பட்டு உடலுக்கு உணர்வு உண்டாக வேண்டும் அல்லவா?

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 13 (2019)


பாடல்

இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே

திருநெறி 2 – பரபக்கம் – உலகாயதன் மதம் – சிவஞான சித்தியார்

கருத்துஉலகாயர்கள் கொள்கையினை உவகை காட்டி விளக்கி அதை மறுதலித்து ஆன்மா உண்டு எனவும், அதை இயக்க கர்த்தா உண்டு எனவும் கூறும் பாடல்.

பதவுரை

இவ்வாறாக பூதக்கூட்டத்தினால் உயிர் உறையும் உருக்கள்  வாயுக்களுடன் சேர்ந்து முன் ஜென்மங்களில் செய்த கர்மத்தால் பின் தொடரும் என்றும் இதை அனுபவிக்க ஆன்மா உண்டு எனவும் இதனை கூட்டுவிப்பவன் ஆகிய ஒரு கர்த்தா உண்டு எனவும் சமயவாதிகள் கூறுவார்கள். இதனை மறுத்து சமயவாதிகளை மயக்கச் உலகாயர்கள் கூறுவது என்னவெனில் ஒப்புமை செய்ய இயலாத  மலடி பெற்ற மகன் ஒரு முயலின் கொம்பிலே ஏறி ஆகாயத்தில் பூத்த பூவைத் தவறின்றிப் பறித்தான் எனும் தன்மையை ஒத்தது.

விளக்க உரை

  • உலகாயர்கள் – பூதமே தெய்வம், பூதக்கூட்டத்தின் குறைவே கன்மம், பூதக் கூட்டத்தின் நிகழும் உணர்வே ஆன்மா; இவ்வாறு அன்றி வேறு தெய்வமும் கன்மமும் ஆன்மாவுமில்லை

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆவணி – 28 (2019)


பாடல்

பண்டைநற் றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன் மார்க்கர்
கண்டநூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்
புண்ட ரிகத்தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்

திருநெறி 2 – சிவஞானசித்தியார் சுபக்கம் – அருணந்தி சிவாச்சாரியார்

கருத்து –  வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை கூறும் பாடல்

பதவுரை

முன்பு செய்த நன்வினைகளால் தவம் பொருந்தி பரமனை பக்தி செய்யும் தொண்டராகவும் அவனை அன்பு கொண்டு வழிபடுபவராகவும் இருப்பவர்களான் சாமுசித்தர்களை தானே தூய நெறியில் இருந்து காத்து சிவகதி அளிப்பான்; ஞானிகளை பிரமாணம் என்று அறிந்து அவர்கள் காட்டிய முறையில் அவர்கள் உரைத்த நூல்களைக் கற்று முக்தி பெறவேண்டும் என்பவர்களான வைநயிகரருக்கு சிவபெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளை அடியும் முறையினை இங்கே வகுத்துக் கூறுகின்றோம்.

விளக்க உரை

  • தானே தூய கதியினில் தொகுப்பன் – விஞ்ஞானகலருக்கு அறிவு வடிவமாகவும், பிரளயகலருக்கு மான் மழு சதுர்புஜம் காலகண்டம் திருநேந்திரம் தாங்கி உருவ வடிவம் கொண்டும் வெளிப்பட்டு அருள் செய்வது போல் சாமுசித்தருக்கு அருள்புரிவன்.
  • ஸம்+சித்தம் – நன்றாக முடிவுபெற்றது
  • வைநயிகர் – விநயம் உடையவர்
  • மார்க்கர் – சன்மார்கர், ஞானிகள்

சமூக ஊடகங்கள்