அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 11 (2021)


பாடல்

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை யீந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து – திருவடியினை அடையாது  உயிர்கள் ஏனைய பயன்களை  அடையாது என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

திருவருளால் ஆருயிரானது சிவமாகிச் சிவனின் உண்மை பேரறிவின் நிலையினில் நிற்கும். அந்தநிலையில்  மலம்  மாயை கன்மம் மாயேயம் என்னும் ஆகிய இயல்புகளும் நீங்கி நிலைத் தன்னமையினை அடையப் பெறும். சிவன் திருவடிக்கு அடிமையாம் அடையாளப் பொறியினை நல்கி, தானே குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்ட உள்ளத்திலே நிலைபெறச் செய்து, நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் எனும் சொரூப நிலையில்  சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்டான் என்பது உண்மையே.

விளக்க உரை

  • ஏனைய முத்திரை – முதன்மையான சின்முத்திரை
  • ஐம்மலங்கள் – திரோதாயி ஒழிந்தவை
  • சொரூபம் – இயற்கை.
  • முத்திரை – பொறி.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.