அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 14 (2020)


பாடல்

ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
   ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
   நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
   கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
   எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்துமயக்கம் அறுத்து மெய்யான இன்பம் தந்ததால் தன்னைக் காக்கவேண்டும் என முறையிடும்  பாடல்.

பதவுரை

அருட்பெருஞ்சோதியாக விளங்கக்கூடிய ஆண்டவரே, திருஅம்பலத்தில் இருந்து அருளக்கூடியவரே! உறக்கம் போன்ற மயக்க நிலையில் இருந்து எனை எழுப்பி மெய்யான இன்பம் தந்ததால் எனக்கு நாயகராகிய உம்மை நான் ஒருபோதும் விடமாட்டேன்; அதோடு மட்டுமல்லாமல் நெறி பிறழும் என் உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்; இது உம் மேல் ஆணை; இனிமேல் என்மீது குறைசொல்ல வேண்டாம்; நான் ஏணை எனப்படும் தூளியிருந்து எடுத்த கைப்பிள்ளை போல் இருக்கின்றேன் காண்; இது நாணத்தைத் துறந்து வாய்விட்டு உரைக்கின்ற முறையீடு இதுவாகும்.

விளக்கஉரை

  • நாண் – நாணம். அடக்கமாகச் சொல்ல வேண்டியதை வாய்விட்டு வெளிப்படையாக உரைப்பது பற்றியது
  • கோணை உடல் பொருள் ஆவி – உடலும் பொருளும் உயிரும் எப்போதும் நேர்வழியில் செல்லாமல் பிறழ்ந்து செல்லும் இயல்புடையது என்பது பற்றியது.
  • ஏணை – குழந்தைகளை ஆட்டி உறங்குவித்தற்குத் துணியால் கட்டப்படும் தொட்டில்
  • கைப்பிள்ளை – சிறுகுழந்தை

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 29-Nov-2020


பாடல்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே

அருளிய சித்தர் : சிவவாக்கியர்

பதவுரை

மாலை, சந்தியா காலம் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தி, மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியான மாலை, உச்சிக்காலம் ஆகிய காலங்களில் காலம் தவறாமல் தீர்த்தங்களில் நீராடியும், மாலையில் செய்யப்படுவதான தர்பணங்களும், புறத்தால் செய்யப்படுவதாகிய ஜெபம், ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளாகிய தவமும், சிறந்த சிந்தனை உடையவர்களும், ஞானமும் கொண்டவர்களால் நித்தமு ஜெபிக்கப்படும் மந்திரம் எம் தலைவன் ஆகிய ராமனின் நாமமாகிய ராம ராம ராம எனும் நாமமே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 24-Nov-2020


பாடல்

மாலுந் திருவும் வசித்திருக்கும் இடம்
வணங்கி இப்பால் செல்லும்போது
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை
மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே

அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர் எனும் மதங்க நாதர்

பதவுரை

ஆனந்தத்தைத் தரும் மனமாகிய பெண்ணே! தனது தேவியாகிய அன்னையுடன் திருமால் வசிக்கக் கூடிய ஆதாரத்தானமாகிய மணிபூரகம் கடந்து அதை வணங்கி, மேலும் செல்லும் போது மற்றொரு ஆதாரமாகிய அனாகதத்தில் தனது தேவியாகிய ருத்ரியுடன் ருத்ரன் வீற்றிருந்து அவர் அருளும் சேவையினை மேன்மையாகக் காண்பாய்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 13 (2020)


பாடல்

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவனைச் சார்ந்தவர்களுக்கு எளியன் ஆவான் என்பதை உணர்த்தி ‘அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது பற்றி கூறப்பட்டப்  பாடல்.

பதவுரை

தேவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை, அன்னையுடம் தன்னுடலில் பாகத்தில் கொண்ட சிவசக்தி ரூபமாக அகக்கண் கொண்டு கருத்தில் நிறுத்தி உள்ளத்தால் பற்றினால் அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் நிலையில் கால இடைவெளியின்றி வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எக்காலத்திலும்  நீங்கள் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டாலும், உங்களது தன்மை சிவத் தன்மையாய் ஆகிவிடும்.

விளக்கஉரை

  • விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற – விண்ணவராலும் அறிவரியான் அன்னைக் கண்ணற – எனப் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது – (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனை என்று சில இடங்களில் விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன. சிவசக்தி ரூபம் முன்வைத்து உம்மையால் அறிய இயலாதவன் என்பது பொருந்தாமையால், இவ்விளக்கம் தவிர்க்கப்படுகிறது.
  • கண் – காலம் பற்றிய இடைவெளி.
  • காலை – காலம்
  • இயற்றுதல், பண்ணுதல்  – அகம், புறம் நோக்கி உரைக்கப்பட்டது
  • பராபரன் – ஈசனின் தன்மை

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Nov-2020


பாடல்

தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகை உற வோரும் பகைஇச் செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்இங் காதலினால்
தோயுநெஞ்சே மரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே

அருளிய சித்தர் : பட்டினத்தார்

பதவுரை

காதல் எனும் பற்றுக் கொண்டு அதில் உறைந்து நிற்கும் நெஞ்சமே முன்னோர்களால் அளிக்கப்பட்டதும், தம் வினை கொண்டு ஈட்டிய செல்வம் நீங்கில் இப்பூவுலகில் தாயும் பகை கொள்வர்; கொண்ட மனைவியும் பகை கொள்வர்; தன்னுடைய சேய்களும் பகை கொள்வர்;  உறவினர்களும் பகை கொள்வர்; இந்த உலக மக்கள் முழுவதும் பகை கொள்வர்; ஆனால் சுதந்திரத்தினை மட்டும் தருபவன மருதீசரின் பொற்பாதங்கள் மட்டுமே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 27-Nov-2020


பாடல்

அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
மந்திரத்தே ரேறியல்லோ மான்வேட்டை யாடுதற்குச்
சந்திரரும் சூரியரும் தாம்போந்த காவனத்தே
வந்துவிளை யாடியல்லோ என் கண்ணம்மா!
மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

என் கண்ணம்மா! ஆக்கினையை வில்லாக்கி(அமுத தாரணையினை அந்தரம் என்று குறிப்பிடுவதும் உண்டு, குரு முகமாக அறிக), பஞ்சாட்சர மந்திரத்தினை அம்பாகவும் ஆக்கி, அதில் மந்திரங்களை ஏற்றி, (சூட்சம  பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மஹா காரண பஞ்சாட்சரம், மஹா மனு ஆகிய முறைகளில்), இரவி எனும் சூரியக் கலை நாடியும், மதி எனும் சந்திரக்கலை நாடியும் வந்து உறையும் காட்டில் விளையாடி, மனமெனும் மனதினை வேட்டை ஆடி அதனால் மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 25-Nov-2020


பாடல்

சும்மா இருந்துவிடாய் அகப்பேய்
சூத்திரஞ் சொன்னேனே
சும்மா இருந்தவிடம் அகப்பேய்
சுட்டது கண்டாயே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! மனம், மொழி, காயம் ஆகியவை விட்டு மௌனம் பற்றி நிற்கும் இடம் சுட்டி உணர்த்தப்பட்டதைக் கண்டாயே, இதுவே உனக்கான சூத்திரம் என்று சொன்னேன். அதை கேட்டு மறந்துவிடாமல் இருப்பாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 21-Nov-2020


பாடல்

வாதங்கள் செய்வது வேரொன்றும்
இல்லை வாசி அறிந்தோர்க்கு
நாதம் பிறந்திடக் கண்டறிந்
தோர்கள் நான் என்று சொல்லுவரோ?

அருளிய சித்தர் : ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர்

பதவுரை

வாசிக் கலையினை அறிந்தவர்கள் ஒருவரின் கூற்றுக்கு மறுமொழி கூறி வாதங்கள் செய்வது இல்லை; அது போலவே தன்னுள் நாதத்தினை பிறந்திடக் கண்டவர்களும் (சங்கை ஒலிக்கச் செய்தல், தச தீட்சை ஒலி கேட்டல் என பலவும் அடங்கும்) தான் எனும் அகங்காரம் கொண்டு நான் எனும் அந்த வார்த்தையினைச் சொல்வார்களா?

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 20-Nov-2020


பாடல்

அத்தி வரைவாடி அகப்பேய்
ஐம்பத்தோ ரட்சரமும்
மித்தையாங் கண்டாயே அகப்பேய்
மெய்யென்று நம்பாதே

அருளிய சித்தர் : அகப்பேய்ச் சித்தர்

பதவுரை

மனமாகிய பேயே! உலகில் பிறப்பெடுத்து சித்தர் பெருமக்களால் விவரிக்கபடுவதான ஐம்பத்து ஓர் அட்சரம் கண்ட பின் மரணித்தாலும் அதனை மெய் என்று நம்பிவிடாதே.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 19-Nov-2020

பாடல்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே

சித்தர் திருநாமம் : அகத்தியர்

பதவுரை

சக்தியும், பராபரம் வேறு வேறு தெய்வம் அல்ல; இரண்டும் ஒன்றே. அது அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் சீவனாக இருக்கிறது; இதை தன் முயற்சி செய்து சுய புத்தியாலோ அல்லது குருவருளால் கிடைக்கப் பெற்றவர்களோ புண்ணியர்கள்; கோடி பேர்களில் ஒருவர் மட்டுமே இந்த உலகில் அது குறித்த அனுபவங்களைப் பெறுகிறார்கள்; அவர்கள் பக்தி செலுத்துவதால் மனமானது பஞ்ச இந்திரியங்கள் வழி செல்லாமல் மனம் அலையாமல் அடங்கி இருப்பார்கள்; ஆணவம், மாயை, கன்மம் எனும் பாழ்படுத்துகின்றதில் மனத்தினை விடாமல் பரம் ஞானியாக இருபார்கள்; அவர்கள் மனம் சுற்றி அலைவதில்லை. இன்னொரு முக்கியமானதும் அதி சூட்சத்தில் சூட்சமான விஷயத்தினை சொல்கிறேன். அண்ட உச்சி எனப்படும், பொன்னம்பலத்தான் ஆடும் இடமாகிய சுழியத்தின் நிலை அறிந்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 18-Nov-2020


பாடல்

குப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி
கோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள்
தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள்
தனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால்
அனைத்தையுமே யெரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே
கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர்

சித்தர் திருநாமம் : காரைச் சித்தர்

பதவுரை

மின்னல் போல் தோன்றக் கூடியவள் ஆன அன்னையானவள், எண்ணற்ற எண்ணங்களைக் கொண்டு தம் மனதை குப்பையாக வைத்திருக்கும் மனிதர்களிடத்தில் அவைகளை நீக்குதல் பொருட்டு இவள் பூத்திருப்பாள்; பொன் போன்ற மேனியினைக் கொண்டு நிற்பாள்; தர்பை கொண்டு செய்யக் கூடியதான் அக்கியில் எழும் தழல் போல் சிவப்பு நிறம் கொண்டவளாக இருப்பாள்; காட்டில் சரணடைந்த பாம்பானது எவரும் அறியாமல் இருப்பது போல் இருக்கும் இவளை நேசமுடன் கொண்டு அவளிடத்தில் நட்பு கொண்டால் நம்முடைய அனைத்து வினைகளையும் எரித்துவிடுவாள்; பிறப்பு உடையவள் என்றும் பிறப்பு அற்றவள் என்றும் அவள் தோற்றம் பற்றி அறிய இயலாமல் சித்தர்கள் பலரும் வாதம் செய்தார்கள்.

வழிபாட்டு முறை : சாக்தம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 2 (2020)


பாடல்

ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே

கந்தர் அலங்காரம் – அருணகிரி நாதர்

கருத்து – முருகப் பெருமானிடத்தில் ஐம்பொறிகள் வழி செல்லும் அவாவினை அறுத்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.

பதவுரை

அமரர்கள் ஆகிய தேவர்களின் துன்பம் நீங்குதல் பொருட்டு, வஞ்சனையும் கொடூரமும் பொருந்திய சூரனை,அவனுடைய  கார் மேகம் போன்ற கரிய நிறமுடைய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு கூர்மையான கூலாயுததை செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே அவனை அழித்தவரே! ஐம்புலன்களாகிய ஐவரும், தேவரீரின் திருவடிப் பெருமைகளை ஆராய விடமாட்டாதவர்களாகவும், உலகின் ஒரே பரம் பொருளாகிய தேவரீரை நினைக்க விடமாட்டாமலும், பூசிக்க தக்க மலர்களால் தங்களை அர்ச்சித்து, தேவரீரின் மலர் போன்ற திருவடிகளைச் சென்று அடைய விடமாட்டாமலும் செய்கின்றனர்; அடியேன் என்ன செய்வது?

விளக்கஉரை

  • உய்தல் – உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல், தப்புதல்
  • கட்டாரி – குத்துவாள், வாள், சூலம், எழுத்தாணிப்பூண்டு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 1 (2020)


பாடல்

அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து

திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

கருத்துசிவனே குருவாகி வந்து உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட் கொள்ளுதலைச் சொல்லும் பாடல்.

பதவுரை

நான் கூறுவதை விரும்பி கேட்கும் மாணவனே! அரூபியாய், பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், அண்டங்களுக்கும் அப்பால் எவ்விதத் தொடக்கமும் அற்றவனாகவும், தில்லை அம்பலத்தே அம்மையோடு ஆனந்தக் கூத்தாடியவாறும் இருக்கின்றான்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு, தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஒரு உருவமுடையவன் போல் குருவாக எழுந்தருளி என்னே அநாதியாக பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு செய்து, சுத்தமாக்கி என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து தனக்கு அடிமையாகக் கொண்டான்.

விளக்கஉரை

  • அகளமயம் – களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு
  • சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம்
  • நிகளம்-விலங்கு
  • சகளமயம் போல் உலகில் தங்கி – உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பது பாடம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 30 (2020)


பாடல்

பிலந்தரு வாயினொடு
   பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
   பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன்
   நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்
   கோயில் நயந்தவனே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – சக்கராயுதத்தை திருமாலுக்கு வழங்கியவன் திருநன்னிலத்துப் பெருங்கோயிலில் உறைக்கின்றான் என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

அறத்தினை முன்வைத்து நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் என்று வழங்கப்படுவதும், பாதாளம் போன்று இருக்கப் பெற்றதுமான  வாயைக் கொண்டவனும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்னொரு காலத்தில் , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.

விளக்கஉரை

  • பிலம் – பாதாளம்; கீழறை; குகை; வளை
  • நலம் – நன்மை, அறம், சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
  • நிலந்தரு –  மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகளுக்கு உரித்தானவன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 22 (2020)


பாடல்

மேவும் உன்றன் அடியாருள்
விரும்பி யானும் மெய்ம்மையே
காவி சேருங் கயற்கண்ணாள்
பங்கா உன்றன் கருணையினால்
பாவி யேற்கும் உண்டாமோ
பரமா னந்தப் பழங்கடல்சேர்ந்து
ஆவி யாக்கை யானெனதென்
றியாது மின்றி அறுதலே 

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்துபாவியாகிய தன்னை விடுவிக்கும் எண்ணம் உண்டோ என வினவும்  பாடல்.

பதவுரை

கருங்குவளை மலரினை ஒத்த மீன் போன்ற கண்ணையுடைய உமையம்மையின் பாகனே! உன்னுடனே பொருந்தி இருக்கும் அடியார்களில் ஒருவனாக நானும் உண்மையிலே விரும்பி உன்னை அடைந்து உயிரும், அதற்கு ஆதாரமான உடம்பும், நான் எனது என்னும் பற்றுக்களும் சிறிதுமில்லாது அற்றுப்போகும்படி செய்து, உன்னுடைய பெரிய திருவருளால் எப்பொழுதும் நிலைபெற்று இருக்கும் பேரின்பமாகிய பழையகடலை கடக்க பாவியாகிய எனக்கும் உலகியலில் இருந்து அறுதல் உண்டாகுமோ?

விளக்க உரை

  • காவி – கருங்குவளை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 21 (2020)


பாடல்

தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார்
பொன்னி வளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம்
ஒன்று ஆகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ
சொல்வது ஒன்று! செய்வது ஒன்று!
மனத்திலே பகை ஆகி உதட்டிலே
உறவாகி மடிவர் தாமே

தண்டலையார் சதகம்

கருத்துபெரியேர்களுக்கும் சிறியோர்களுக்குமான வித்தியாசங்களை உணர்த்தும்  பாடல்.

பதவுரை

பொன்னி எனும் காவிரி நதி பாய்ந்து வளம் தழைத்ததுமான நாட்டில், செல்வத்திலே மிகுந்து இருக்கக்கூடியவரான தண்டலையார் இருக்கும் இடத்தில், சொல் எனப்படுவதான வாக்கும், மனம் ஆகியவை எல்லாம் ஒன்றாகி தம் காரியங்களைச் செய்வர்; சினக்கொண்டு சிறுமை படைத்தவர்களாக இருக்கக்கூடிய சிறியோர்களால் செய்யப்படும் காரியங்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கும்; அதுமட்டுமல்லாமல் மனதில் பகை கொண்டு அது வெளியே தெரியாமல் உதட்டளவில் உறவாடி தாமே மடிவார்கள்.

விளக்க உரை

  • ‘மனத்திலே பகை ஆகி’ எனும் பழமொழியை விளக்கும் பாடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 20 (2020)


பாடல்

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும் (கழுத்துக்குக் கீழ்). புறக்குளத்தில் பல மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பது போல் இந்த உடலில் புலன்கள் எனும் மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. மீனவன் (பரவன்) வந்து ஒரு வலையை வீசுவது போல் சிவபெருமான் அம் மீன்களைச் செம்மைப்படுத்தச் செம்பரவனாகத் தோன்றி வலையை வீசி அருளினன்; குளத்தில் இருக்கும் மீன்கள் அந்த வலையில் சிக்கிக் கொண்டு அவற்றின் துள்ளல் அடங்கியது போல் சிவன் தன்னுடிய ஒப்பற்றதாகிய கருணையினால் தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்; ஆதலால் நாமும் நம்முடைய ஐம்புலப்புலன் இன்பம் எனும் நுகர்ச்சி துன்பத்தினின்று நீங்கிச் சிவஇன்ப நினைவில் ஆழ்ந்தோம்.

விளக்க உரை

  • தூங்குதல் – ஆழ்தல்
  • அழுந்தல் – ஐம்புலன் அடக்குமுறைமை
  • பரவன்: பரதவன்
  • ஏதம் – துன்பம்
  • ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் – ஆகவே மனித உயிர்க்கு இடம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 19 (2020)


பாடல்

சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழில்அதிகம் ஆக்கியிடும் – ஒத்தல்இவை
சாதாக் கியம்என்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானஉரு வாம்

திருநெறி 4 – உண்மை விளக்கம் – மனவாசகங்கடந்தார்

கருத்துசிவதத்துவம் ஆகிய சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், விந்து, நாதம் ஆகியவற்றில் சிவசக்தி தத்துவங்கள் செயல்படும் முறையை விளக்கும் பாடல்.

பதவுரை

சிவதத்துவங்கள் ஐந்தினில் ஒன்றானதும், இறைவனுடைய ஐந்து தொழில்கள் செய்வதற்குரிய இடங்களில் ஒன்றாகி சிவதத்துவத்தின் பகுதியானதுமான சுத்தவித்தையில் கிரியையின் செயல்பாடுகள் குறைந்து ஞானம் மிகுந்து இருக்கும்; காலத்தால் பகுக்க இயலாத பழமையானதான ஈச்வரத்தில் ஞானம் குறைந்து செயலால் செய்யப்படுவதும், சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபாடு செய்வதும் ஆன கிரியை உயர்ந்தது நிற்கும்; சிவ சக்தி இணைவால் செயலும், அறிவும் சமநிலையில் காணப்படுவதாகிய சாதாக்கியத்தில் ஞானமும் கிரியையும் சம அளவில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும்; சக்தி தத்துவத்தில் கிரியையை முன்வைத்தும் சிவதத்துவத்தில் அவற்றுக்குக்கு ஆதாரமான ஞானம் முன்வைத்தும் இருக்கும்.

விளக்க உரை

  • சைவ நாற்பதங்களின் வரிசையில் கிரியை, ஞான மார்கங்களின் செயல்படு முறை விளக்கங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – ஐப்பசி – 14 (2020)


பாடல்

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

ஸ்ரீ வாராஹி மாலை

கருத்து – வாராஹி அன்னையின் உக்ர ஸ்ரூப தியானம் என்ன விஷயங்களைச் செய்யும் என்பதை விளக்கும்  பாடல்.

பதவுரை

அன்னை வாராஹியானவள் கலப்பையை தன்னுடைய கரங்களில் ஆயுதமாக் கொண்டு இருப்பாள்;  என்னுடைய எதிரிகள் என்பவர்களை நெருப்பின் பொறி எழுமாறு தீயில் இட்டு தீய்த்து அவர்களை இல்லாமல் செய்து, அதன்பின் தலைகளை நெரிப்பாள்; தலை,  பின்பகுதி ஆகிய மண்டை மற்றும் மூளையினைத் தின்று பகைவர்களின் நீண்டதான உடலை உரிப்பாள்; படுக்கை போன்று கீழே வீழ்த்தி அந்த உடலை உலர்த்துவாள்.

விளக்க உரை

  • தன் அடியவர்கள் என்பதற்காக எதிரிகளை துவசம் செய்யும் அன்னையின் முறைகளைக் கூறுவது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – சார்வரி – புரட்டாசி – 24 (2020)


பாடல்

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே

ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்

கருத்து – ஈசன் தனித்து இருந்து கோடிக்கரையில் உறைதல் குறித்து வினா எழுப்பியப்  பாடல்.

பதவுரை

மைபொருந்திய பெரிய கண்களை உடைய உமையம்மை ஆகிய இறைவியின் பாகத்தை உடையவனே! கங்கையும் வேறிடம் இல்லை என்பதை உணர்ந்து உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாள்;  இவ்வாறு இரு மகளிர் உடம்பிலே நீங்கா திருக்க பூக்கள் பொருந்திய சோலைகளைகளில் இருந்து பூக்களைப் பறித்து சூடி கையில் நிறைந்த வளைகளையுடையவளும் காட்டை உரிமையாக உடையவளும் ஆன காளியோடு  கூடிதான கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டாயே, இஃது எவ்வாறு?

விளக்க உரை

  • காடுகாள் – காடுகிழாள், பழையோள்,  காளி; ‘காடுகள்’ –  பிழைபட்ட பாடம்
  • இருவர் இருக்க, மூன்றாமவளைக் கூடியது எவ்வாறு என , நகை தோன்ற வினவியது; இத்துணை மகளிரோடும் இங்குத் தனியாய் இருத்தல் தகுமோ என்பதும் பெறப்படும்.

Loading

சமூக ஊடகங்கள்