சித்த(ர்)த் துளிப்பு – 05-Dec-2020


பாடல்

நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால்

தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல்

உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால்

என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே

 

அருளிய சித்தர் : பட்டினத்தார்

பதவுரை

இறைவனாகிய கச்சி ஏகம்பரனே! நல்ல கயிற்றினால் கட்டிய பொம்மை அந்த கயிற்றியில் இருந்து விடுபட்டால் அது தன்னால் ஆட இயலுமோ? அதுபோலவோ உன்னால் நான் இங்கு இயக்கப்படுகிறேன் என்பது தாண்டி உன்னைப் பிரிந்தால் என்னால் இங்கு ஏதாவது செய்யப்படுவதற்கு ஏதாவது உண்டோ?

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 28-Nov-2020


பாடல்

தாயும் பகை கொண்ட பெண்டீர் பெரும்பகை தன்னுடைய
சேயும் பகை உற வோரும் பகைஇச் செகமும் பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்இங் காதலினால்
தோயுநெஞ்சே மரு தீசர்பொற் பாதஞ் சுதந்தரமே

அருளிய சித்தர் : பட்டினத்தார்

பதவுரை

காதல் எனும் பற்றுக் கொண்டு அதில் உறைந்து நிற்கும் நெஞ்சமே முன்னோர்களால் அளிக்கப்பட்டதும், தம் வினை கொண்டு ஈட்டிய செல்வம் நீங்கில் இப்பூவுலகில் தாயும் பகை கொள்வர்; கொண்ட மனைவியும் பகை கொள்வர்; தன்னுடைய சேய்களும் பகை கொள்வர்;  உறவினர்களும் பகை கொள்வர்; இந்த உலக மக்கள் முழுவதும் பகை கொள்வர்; ஆனால் சுதந்திரத்தினை மட்டும் தருபவன மருதீசரின் பொற்பாதங்கள் மட்டுமே.

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்குற்றாலம்


தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருக்குற்றாலம்

 • பஞ்சசபைத் தலங்களில் இத்தலம் சித்திரசபைத் தலம்
 • கோயில் மலையடிவாரத்தில் சங்கு வடிவில் அமையப் பெற்ற திருத்தலம்
 • திருமால் வடிவில் இருந்த மூல மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கத் திருமேனியராக மாற்றி வழிபட்டத் தலம் (கந்தபுராணம் திருக்குற்றாலப் படலம்)
 • அகத்தியரின் ஐந்து கைவிரல்கள் பதிந்த அடையாளங்களுடன் மிகச்சிறிய மூலவர்  திருமேனி; கிழக்கு நோக்கி திருக்காட்சி
 • அகத்தியரால் திருமால் திருமேனியை சிவலிங்கத் திருமேனியாகவும் , ஸ்ரீதேவி திருவடிவை குழல்வாய் மொழியம்மையாகவும் , பூதேவியை பராசக்தியாகவும் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்
 • அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், அம்பாளுக்கான சக்திபீடங்களில் ஒன்றானதும் ஆன இத்தலம் பராசக்தி பீடம். (அம்பாள் திருவடிவம் ஏதும் இல்லாமல் மகாமேரு வடிவம் மட்டும்)
 • ஒன்பது சக்திகளின் அம்சமாக உள்ளதும், பூமாதேவியை அம்பிகையாக மாற்றியதால் தரணிபீடம் என்றும் போற்றப்படும் பராசக்தி பீடம்; இந்த அம்மை உக்கிரமாக இருப்பதால் இவருக்கு எதிரே காமகோடீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்ட அமைப்பு
 • அகத்தியர் சிவபார்வதி திருமணக் காட்சி கண்ட திருத்தலம்
 • மலை உச்சியில் செண்பக அருவி , செண்பகதேவி கோயில் ஆகியன அமையப் பெற்றது
 • அருகில் தேனருவி, புலியருவி, பழைய அருவி, ஐந்தருவி முதலான பல அருவிகள் அமையப் பெற்றத் திருத்தலம்
 • நுழைவுவாயிலின் ஒரு புறத்தில் அம்பல விநாயகர்
 • உட்பிரகாரத்தில் அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, அருட்சத்தியர்கள், விநாயகர் முதலான தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள்
 • முருகர் கையில் வில்லேந்திய கோலத்தில் திருக்காட்சி; அருகிலுள்ள வள்ளி தெய்வயானை இருவரும் ஒருவரை பார்த்தபடியான காட்சி அமைப்பு
 • பழைய ஆதி குறும்பலா மரத்தின் கட்டைகள்(தலமரம்) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருத்தலம்
 • பிற சன்னதிகள் – அறுபத்து மூவர், நன்னகரப்பெருமாள், உலகாம்பாள் சமேத பாபவிநாசர், காந்திமதியம்மை சமேத நெல்லையப்பர், நாறும்புநாதர், சங்கரலிங்கநாதர், ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாதர், சொக்கலிங்கர், அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதேஸ்வரர், ஐயனார், சோழலிங்கம், அகத்தியர், வாசுகி, மகாலிங்கம், சகஸ்ரலிங்கம்
 • தொலைந்த பொருள்கள் கிடைக்க தனிச்சன்னதியில் அர்ஜுனன் பூஜித்த சிவலிங்கத்திருமேனி. இந்த சந்நிதிக்கு அருகிலிருந்து இந்த சிவலிங்கத்திருமேனி , விநாயகர் , குற்றாலநாதர் விமானம், திரிகூடமலை, குற்றால அருவி ஆகிய ஐந்தையும் ஒருங்கே தரிசிக்கும் படியான அமைப்பு
 • பிரகாரத்தில் சிவனார் அம்மையை மணந்து கொண்ட கோலத்தில் திருக்காட்சி. (மணக்கோலநாதர் சந்நிதி )
 • குற்றால அருவி விழும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள பல சிவலிங்க வடிவங்கள் கொண்ட அமைப்பு
 • அகத்தியர் சந்நிதி எதிரில் அவரது சீடரான சிவாலய முனிவருக்கு தனி சந்நிதி
 • சித்திரசபா மண்டபத்தில் குறவஞ்சி சிலைகள் கொண்ட அமைப்பு
 • சபாமண்டபம் கீழே கல்பீடமாகவும், மேலே முன்மண்டபம் மரத்தாலும் அமைக்கப்பட்டு, விமானம் செப்புத்தகடுகளால் வேயப்பட்டும் ஆன அமைப்பு
 • சித்திரசபையின் வெளிச்சுவற்றில் வண்ணத்தில் வரையப்பட்டுள்ள ஊர்த்துவதாண்டவம், பத்திரகாளி, முருகர், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன், மன்மதன், ரதி முதலானோரின் உருவங்கள்
 • முன்மண்டபத்தின் உட்புற கூரையில் தனிச்சிறப்பானதும், அழகானதும் ஆன கொடுங்கைகள்
 • சித்திரசபையின் உள்ளே சிவகாமியம்மையுடனான நடராஜர் திருஉருவம் சுற்றிலும் தேவர்கள் தொழுதவாறு இருக்கும் வண்ணம் அற்புத ஓவியம்; உட்சுவற்றில் துர்கையம்மனின் பல்வேறு வடிவங்கள், வீரபத்ரர், கஜேந்திர மோட்சம், திருவிளையாடல் புராண வரலாறுகள், குற்றாலநாதர் அகத்தியருக்கு திருக்காட்சி, அறுபத்து மூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்த கோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு வடிவங்கள், சனைச்சரன் முதலானோரின் வண்ண ஓவியங்கள்
 • பங்குனியில் பிரம்மோற்சவத்தின் போது முதல்நாள் பிரம்மாவாகவும், இரண்டாம்நாள் திருமாலாகவும், மூன்றாம் நாள் ருத்ரமூர்த்தியாகவும், நான்காம்நாள் ஈஸ்வரராகவும், ஐந்தாம்நாள் சதாசிவமூர்த்தியாகவும், ஆறாம்நாள் வெள்ளிமயில் வாகனாரூடராகவும் திருக்கோலம் கொண்டு பவனி வருவது சிறப்பான நிகழ்வு
 • தாண்டவ வடிவத்தில் காட்டப்படும் தீபாராதனை(மார்கழி திருவாதிரை)
 • லிங்க வடிவில் இருக்கும் பலாச்சுளைகள் (தலமரம்)
 • நான்கு வேதங்கள் நான்கு வாயிலாகவும் மற்றும் சிவனாரின் நடனம் காண பிலவேந்தன் வந்த வழி ஒரு வாயிலாகவும் என ஐந்து வாயில்கள் கொண்டு விளங்கும் தலம்
 • தினமும் அர்த்தஜாம பூஜையின்போது சிவனாருக்கு சுக்கு, மிளகு, கடுக்காய் முதலானவை சேர்த்து தயாரித்து படைக்கப்படும் குடுனி நைவேத்தியம் எனப்படும் கஷாய நைவத்தியம்
 • ஆகமம் –  மகுடாகம முறைப்படிப் பூஜைகள்
 • குறு ஆல் எனப்படும் ஒருவகை ஆலமரமரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் (பலாமரத்தில் ஒருவகையான மரம் குறும்பலா மரம்)

 

தலம்

திருக்குற்றாலம்

பிற பெயர்கள்

திரிகூடாசலம் , திரிகூடமலை, பிதுர் கண்டம் தீர்த்த புரம், சிவத்துரோகம் தீர்த்த புரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், பவர்க்க மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்த புரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், திருநகரம், நன்னகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், யானை பூசித்த புரம், வேத சக்தி பீட புரம், சிவ முகுந்த பிரம புரம், முனிக்கு உருகும் பேரூர், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம், வம்பார்குன்றம்

இறைவன்

குற்றாலநாதர் குறும்பலாநாதர், திரிகூடாசலபதி, திரிகூடாசலேஸ்வரர்

இறைவி

குழல்வாய்மொழி, வேணுவாக்குவாகினி

தல விருட்சம்

குறும்பலாமரம் , குத்தால மரம் 

தீர்த்தம்

வட அருவி, சிவமது கங்கை , சித்ராநதி

விழாக்கள்

தைமகம் – தெப்போற்சவம், மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு உற்சவங்கள், பங்குனியில் பிரம்மோற்சவம் (எட்டாம் நாள் நடராஜர் கோயிலில் இருந்து இச்சபைக்கு பச்சை சார்த்தி எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பான நிகழ்வு), ஆடி அமாவாசையில் லட்சதீப உற்சவம் (பத்ரதீப திருவிழா), நவராத்திரி, ஐப்பசி பூரம் – திருக்கல்யாண உற்சவம்

மாவட்டம்

திருநெல்வேலி

திறந்திருக்கும் நேரம் / முகவரி

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்
குற்றாலம் – அஞ்சல் – 627 802
04633-283138, 04633-210138
வழிபட்டவர்கள் பட்டினத்தார்

பாடியவர்கள்

திருஞானசம்பந்தர் 1 பதிகம் (1ம் திருமுறை – 99 வது பதிகம்),  அருணகிரிநாதர், திருக்குற்றாலத் தலபுராணம் மற்றும் குறவஞ்சி – மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர்

நிர்வாகம்

இந்து அறநிலையத்துறை

இருப்பிடம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 6௦ கிமீ தொலைவு, தென்காசியில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவு

இதர குறிப்புகள்

தேவாரத் தலங்களில் 227  வது தலம்

பாண்டியநாட்டுத் தலங்களில் இத்தலம் 13 வது தலம்

குழல்வாய்மொழி உடனாகிய குற்றாலநாதர்

புகைப்படங்கள் : இணையம்

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை           1
பதிக எண்           99
திருமுறை எண் 3

பாடல்

செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக
நல்கும்நம்பா னன்னகர்போலுந் நமரங்காள்

பொருள்

நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை  ஈனுவதுமாகியதும், வில்லின் நாண் அசைய அதில் இருந்து தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினையால் தோன்றிய  குற்றங்கள் தீர அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ளதும் ஆன திருத்தலம் நன்னகர் எனும் குற்றாலம் ஆகும்.

 

பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 4
பதிக எண் 009
திருமுறை எண் 3

பாடல்

உற்றா ராருளரோ – உயிர்
கொண்டு போம் போழுது
குற்றாலத்துறை கூத்தனல் லானமக்
குற்றா ராருளரோ

பொருள்

கூற்றுவன் எனும் எமன் நம் உயிரைக் பற்றிக்கொண்டு போகும் பொழுது, குற்றாலத்தில் விரும்பித் தங்கியிருக்கும் கூத்தப் பிரானைத் தவிர நமக்கு வேண்டியவர் என்று யாவர் உளர்?

 

 (இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஐப்பசி – 21 (2019)


பாடல்

பூதமும் கரணம் பொறிகள்ஐம் புலனும்
     பொருந்திய குணங்கள்ஒர் மூன்றும்
நாதமும் கடந்த வெளியிலே நீயும்
     நானுமாய் நிற்கும்நாள் உளதோ
வாதமும் சமய பேதமும் கடந்த
     மனோலய இன்பசா கரமே
ஏதும்ஒன்று அறியேன் யாதுநின் செயலோ
     இறைவனே ஏகநா யகனே

பட்டினத்தார்

கருத்துபுறக்கருவிகள் செயல் அற்று ஈசனுடம் தனித்திருக்கும் நிலை வேண்டும் எனும் பாடல்.

பதவுரை

இறைவனாகவும், எல்லாம் கடந்த ஒன்றாகவும் இருக்கும் நாயகனே, காற்றினை குறிக்கும் நாடிகளில் ஒன்றான வாதமும், நிலையை காட்ட வழி செய்யும் சமயத்தில் பாகுபாடு கொள்ளாமல் மன ஒடுக்கம் கொண்டு  இருக்கும் இன்பக் கடலே! மண், நீர், அனல், வளி, வான். புலன் ஆன பூதமும்,   மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள் ஐந்தும் இவற்றுடன் பொருந்திய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் அந்தக்கரணங்கள் நான்கும், சாத்விகம், இராஜசம், தாமசம்  எனும் முக்குணங்களும், ஈசனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றான நாதமும் கடந்த வெளியிலே நீயும் நானும் மட்டும் தனித்திருக்கும் நாள் உளதோ? எதுவும் யான் அறியவில்லை.  இவை அனைத்தும் உனது செயல்களே.

விளக்க உரை

 • நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேத மூர்த்தங்களுள் ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை. வீடு நாதமற்றுக் கிடக்கிறது.

 

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விகாரி – ஆடி – 29 (2019)


பாடல்

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும்
விட்டேறிப் போன வெளிதனிலே வியப் பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந் திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே

பட்டினத்தார்

கருத்து – பட்டினத்தார் தான் பெற்ற அனுபவங்களை கூறும் பாடல்.

பதவுரை

சித்தத் தன்மை அடைந்தவர்களால் அடையப் பெறுவதும், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய படிநிலைகள் கொண்ட எட்டினை தருவதும் ஆன அட்டாங்க யோகம் அடைந்து, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுத்தி , ஆக்ஞை  ஆகிய ஆறு ஆதாரங்கள் கடந்து, உயிர் செயல்படும் நிலையைக் கூறுவதாகிய காரிய அவத்தையானது, புருவ மத்தியில் இருந்து செயல்படுவதாகிய நனவு, கண்டத்திலிருந்து செயல்படுவதாகிய கனவு, இருதயத்திலிருந்து செயல்படுவதாகிய உறக்கம், உந்தியிலிருந்து செயல்படுவதாகிய  பேருறக்கம், மூலாதாரத்திலிருந்து செயல்படுவதாகிய உயிர்ப்படக்கம் ஆகிய அவத்தைகள் ஐந்தும் கடந்து நிற்பதும் வெட்ட வெளி, சிற்றம்பலம், நடன சபை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் அண்ட உச்சிதனில் பெரிய வியத்தலுக்கு உரிய நிகழ்வினைக் கண்டேன்; வட்டமானதும் சந்திரனில் இருந்து விழும் துளியினை ஒத்ததாகிய பாலூறல் எனும் அமுதம் உண்டு மகிழ்ந்திருக்கும் போது உலகால் அறியப்படாது தன்னால் மட்டுமே அறியப்பட தக்கதான பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றது.

விளக்க உரை

 • யோக மரபில் கண்டத்தில் இருந்து மேலே சென்று புருவ மத்தியாகிய ஆக்கினையில் பூசித்தல் மனித நிலையில் இருந்து விலக்கி தேவர்கள், முனிவர்கள் போன்ற மேல் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதுவும் கருத்து. மேல் விபரங்களை குரு மூலமாக அறிக.
இன்று பட்டினத்தார் குருபூசை

சமூக ஊடகங்கள்

பட்டினத்தார்

பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 – 18 ம் நூற்றாண்டு.

பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில்  “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”  என்று எழுதப்பட்டிருக்கிறது.

இடரது பாடல்கள் மிக எளிமையானவை.

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே 

இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.

முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.

வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.

Image – Internet

சமூக ஊடகங்கள்