
பாடல்
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி
கோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள்
தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள்
தனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால்
அனைத்தையுமே யெரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே
கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர்
சித்தர் திருநாமம் : காரைச் சித்தர்
பதவுரை
மின்னல் போல் தோன்றக் கூடியவள் ஆன அன்னையானவள், எண்ணற்ற எண்ணங்களைக் கொண்டு தம் மனதை குப்பையாக வைத்திருக்கும் மனிதர்களிடத்தில் அவைகளை நீக்குதல் பொருட்டு இவள் பூத்திருப்பாள்; பொன் போன்ற மேனியினைக் கொண்டு நிற்பாள்; தர்பை கொண்டு செய்யக் கூடியதான் அக்கியில் எழும் தழல் போல் சிவப்பு நிறம் கொண்டவளாக இருப்பாள்; காட்டில் சரணடைந்த பாம்பானது எவரும் அறியாமல் இருப்பது போல் இருக்கும் இவளை நேசமுடன் கொண்டு அவளிடத்தில் நட்பு கொண்டால் நம்முடைய அனைத்து வினைகளையும் எரித்துவிடுவாள்; பிறப்பு உடையவள் என்றும் பிறப்பு அற்றவள் என்றும் அவள் தோற்றம் பற்றி அறிய இயலாமல் சித்தர்கள் பலரும் வாதம் செய்தார்கள்.
வழிபாட்டு முறை : சாக்தம்