சித்த(ர்)த் துளிப்பு – 19-Nov-2020

பாடல்

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம்
சகலவுயிர் சீவனுக்கு மதுதா னாச்சு;
புத்தியினா லறிந்தவர்கள் புண்ணி யோர்கள்
பூதலத்தில் கோடியிலே யொருவ ருண்டு;
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்
பாழிலே மனத்தை விடார் பரம ஞானி;
சுத்தியே யலைவதில்லைச் சூட்சஞ் சூட்சம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சந் தானே

சித்தர் திருநாமம் : அகத்தியர்

பதவுரை

சக்தியும், பராபரம் வேறு வேறு தெய்வம் அல்ல; இரண்டும் ஒன்றே. அது அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் சீவனாக இருக்கிறது; இதை தன் முயற்சி செய்து சுய புத்தியாலோ அல்லது குருவருளால் கிடைக்கப் பெற்றவர்களோ புண்ணியர்கள்; கோடி பேர்களில் ஒருவர் மட்டுமே இந்த உலகில் அது குறித்த அனுபவங்களைப் பெறுகிறார்கள்; அவர்கள் பக்தி செலுத்துவதால் மனமானது பஞ்ச இந்திரியங்கள் வழி செல்லாமல் மனம் அலையாமல் அடங்கி இருப்பார்கள்; ஆணவம், மாயை, கண்மம் எனும் பாழ்படுத்துகின்றதில் மனத்தினை விடாமல் பரம் ஞானியாக இருபார்கள்; அவர்கள் மனம் சுற்றி அலைவதில்லை. இன்னொரு முக்கியமானதும் அதி சூட்சத்தில் சூட்சமான விஷயத்தினை சொல்கிறேன். அண்ட உச்சி எனப்படும், பொன்னம்பலத்தான் ஆடும் இடமாகிய சுழியத்தின் நிலை அறிந்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *