அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 14 (2020)


பாடல்

ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
   ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
   நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
   கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
   எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே

ஆறாம் திருமுறை – திருஅருட்பா – வள்ளலார்

கருத்துமயக்கம் அறுத்து மெய்யான இன்பம் தந்ததால் தன்னைக் காக்கவேண்டும் என முறையிடும்  பாடல்.

பதவுரை

அருட்பெருஞ்சோதியாக விளங்கக்கூடிய ஆண்டவரே, திருஅம்பலத்தில் இருந்து அருளக்கூடியவரே! உறக்கம் போன்ற மயக்க நிலையில் இருந்து எனை எழுப்பி மெய்யான இன்பம் தந்ததால் எனக்கு நாயகராகிய உம்மை நான் ஒருபோதும் விடமாட்டேன்; அதோடு மட்டுமல்லாமல் நெறி பிறழும் என் உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்; இது உம் மேல் ஆணை; இனிமேல் என்மீது குறைசொல்ல வேண்டாம்; நான் ஏணை எனப்படும் தூளியிருந்து எடுத்த கைப்பிள்ளை போல் இருக்கின்றேன் காண்; இது நாணத்தைத் துறந்து வாய்விட்டு உரைக்கின்ற முறையீடு இதுவாகும்.

விளக்கஉரை

  • நாண் – நாணம். அடக்கமாகச் சொல்ல வேண்டியதை வாய்விட்டு வெளிப்படையாக உரைப்பது பற்றியது
  • கோணை உடல் பொருள் ஆவி – உடலும் பொருளும் உயிரும் எப்போதும் நேர்வழியில் செல்லாமல் பிறழ்ந்து செல்லும் இயல்புடையது என்பது பற்றியது.
  • ஏணை – குழந்தைகளை ஆட்டி உறங்குவித்தற்குத் துணியால் கட்டப்படும் தொட்டில்
  • கைப்பிள்ளை – சிறுகுழந்தை

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.