
பாடல்
அகளமய மாய்நின்ற அம்பலத்தெங் கூத்தன்
சகளமயம் போல்உலகில் தங்கி – நிகளமாம்
ஆணவ மூல மலம்அகல ஆண்டான்காண்
மாணவக என்னுடனாய் வந்து
திருநெறி 6 – திருக்களிற்றுப்படியார் – திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்
கருத்து – சிவனே குருவாகி வந்து உயிரைப் பிணித்துள்ள ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தை அடையுமாறு மெய்யுணர்வு அளித்து ஆட் கொள்ளுதலைச் சொல்லும் பாடல்.
பதவுரை
நான் கூறுவதை விரும்பி கேட்கும் மாணவனே! அரூபியாய், பேரறிவுப் பொருளாய் நிலைபெற்றுத் திருவம்பலத்திலே அருட்கூத்து இயற்றியருளுகின்ற எம்முடைய கூத்தப்பெருமான், அண்டங்களுக்கும் அப்பால் எவ்விதத் தொடக்கமும் அற்றவனாகவும், தில்லை அம்பலத்தே அம்மையோடு ஆனந்தக் கூத்தாடியவாறும் இருக்கின்றான்; சகளமயம்போல் உலகில் தங்கி சரீரமெடுக்கிறவர்களைப்போல இந்தப் பூமியிலே திருவுருக் கொண்டு, தம்முடைய திருவருளாலே இவ்வுலகில் ஒரு உருவமுடையவன் போல் குருவாக எழுந்தருளி என்னே அநாதியாக பற்றியுள்ள ஆணவமாகிய மூலமலம் என்னைவிட்டு அகலுமாறு செய்து, சுத்தமாக்கி என்னுடனாய் வந்து என்னுடனே கூடியிருந்து தனக்கு அடிமையாகக் கொண்டான்.
விளக்கஉரை
- அகளமயம் – களங்கமற்ற தூய்மையுடையதாகிய பேரறிவு
- சகளமயம்-உலகியல் பாசத் தொடர்புடைய உருவம்
- நிகளம்-விலங்கு
- சகளமயம் போல் உலகில் தங்கி – உலகில் பாசத்தொடர்புடைய உருவமாய்த் தோன்றினும் பாசத் தொடர்பு அவனுக்கில்லை என்பது பாடம்.