அமுதமொழி – சார்வரி – கார்த்திகை- 13 (2020)


பாடல்

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்துசிவனைச் சார்ந்தவர்களுக்கு எளியன் ஆவான் என்பதை உணர்த்தி ‘அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது பற்றி கூறப்பட்டப்  பாடல்.

பதவுரை

தேவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை, அன்னையுடம் தன்னுடலில் பாகத்தில் கொண்ட சிவசக்தி ரூபமாக அகக்கண் கொண்டு கருத்தில் நிறுத்தி உள்ளத்தால் பற்றினால் அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் நிலையில் கால இடைவெளியின்றி வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எக்காலத்திலும்  நீங்கள் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டாலும், உங்களது தன்மை சிவத் தன்மையாய் ஆகிவிடும்.

விளக்கஉரை

  • விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக் கண்ணற – விண்ணவராலும் அறிவரியான் அன்னைக் கண்ணற – எனப் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது – (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனை என்று சில இடங்களில் விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன. சிவசக்தி ரூபம் முன்வைத்து உம்மையால் அறிய இயலாதவன் என்பது பொருந்தாமையால், இவ்விளக்கம் தவிர்க்கப்படுகிறது.
  • கண் – காலம் பற்றிய இடைவெளி.
  • காலை – காலம்
  • இயற்றுதல், பண்ணுதல்  – அகம், புறம் நோக்கி உரைக்கப்பட்டது
  • பராபரன் – ஈசனின் தன்மை

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *