
பாடல்
பிலந்தரு வாயினொடு
பெரி தும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகம்இரு
பிள வாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள்கோன்
நெடு மாற்கருள் செய்தபிரான்
நலந்தரு நன்னிலத்துப் பெருங்
கோயில் நயந்தவனே
ஏழாம் திருமுறை – தேவாரம் – சுந்தரர்
கருத்து – சக்கராயுதத்தை திருமாலுக்கு வழங்கியவன் திருநன்னிலத்துப் பெருங்கோயிலில் உறைக்கின்றான் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
அறத்தினை முன்வைத்து நன்மையைத் தருகின்ற திருநன்னிலத்தில் உள்ள பெருங்கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமான், பிலம் என்று வழங்கப்படுவதும், பாதாளம் போன்று இருக்கப் பெற்றதுமான வாயைக் கொண்டவனும், பெரிதும் மிகுந்த வலிமையையும் உடைய சலந்தராசுரனது உடலை இரண்டு பிளவாகச் செய்த சக்கராயுதத்தை, முன்னொரு காலத்தில் , மண்ணை உண்டு உமிழ்ந்த திருமகள் கணவனாகிய திருமாலுக்கு அளித்த தலைவன்.
விளக்கஉரை
- பிலம் – பாதாளம்; கீழறை; குகை; வளை
- நலம் – நன்மை, அறம், சோபனம் என்ற யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- நிலந்தரு – மக்களுக்கு நிலம் முதலிய செல்வத்தைத் தருகின்ற மாமகளுக்கு உரித்தானவன்.