பாடல்
ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்
சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே
கந்தர் அலங்காரம் – அருணகிரி நாதர்
கருத்து – முருகப் பெருமானிடத்தில் ஐம்பொறிகள் வழி செல்லும் அவாவினை அறுத்க வேண்டி விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
அமரர்கள் ஆகிய தேவர்களின் துன்பம் நீங்குதல் பொருட்டு, வஞ்சனையும் கொடூரமும் பொருந்திய சூரனை,அவனுடைய கார் மேகம் போன்ற கரிய நிறமுடைய உடலிலிருந்து இரத்தம் வெளிவருமாறு கூர்மையான கூலாயுததை செலுத்தி ஓர் இமைப் பொழுதிலேயே அவனை அழித்தவரே! ஐம்புலன்களாகிய ஐவரும், தேவரீரின் திருவடிப் பெருமைகளை ஆராய விடமாட்டாதவர்களாகவும், உலகின் ஒரே பரம் பொருளாகிய தேவரீரை நினைக்க விடமாட்டாமலும், பூசிக்க தக்க மலர்களால் தங்களை அர்ச்சித்து, தேவரீரின் மலர் போன்ற திருவடிகளைச் சென்று அடைய விடமாட்டாமலும் செய்கின்றனர்; அடியேன் என்ன செய்வது?
விளக்கஉரை
- உய்தல் – உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல், தப்புதல்
- கட்டாரி – குத்துவாள், வாள், சூலம், எழுத்தாணிப்பூண்டு