வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக் கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே விண்ணுறுவார்க் கில்லை விதி
நல்வழி – ஔவையார்
கருத்து – வினைகள் அனுபவிக்கப்படாமல் தீர்க்கப்படுவதில்லை என்பதையும் அவற்றை தீர்க்க வழியும் இல்லை என்பதையும் அறுதியிட்டுக் கூறும் பாடல்.
பதவுரை
நெஞ்சே! நீ வினை வலிமையை கண்ணால் கண்டு அவற்றை வெல்வதற்காக நினைத்துப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் நல்ல செயல்கள் புரிந்து விண்ணுலகம் செல்பவர்களின் தலைவிதியினை தடுத்து நிறுத்த முடியாது. வேதம் முதலான அனைத்து நூல்களை ஆராய்ந்து பார்த்தாலும் உயிர்களுக்கு மூலகன்மம் எனப்படும் நுண்வினை, அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும் ஏனைய சஞ்சீதம் எனப்படும் பழைய வினை, பிராப்தம் ஆகிய நிகழ்கால வினை, ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினை ஆகிய எல்லா வினைகளின் பயன்களை அனுபவிக்காமல் இருப்பதற்கு வழி இல்லை.
ஆசானை அடுக்கிற விதம் காரப்பா இந்நூலைத் திருந்தோர் பாதம் காரடா வருடமது பனிரெண்டாண்டு சீரப்பா பணிவிடைகள் எல்லாம் செய்து சிவசிவா கேட்டதன்ம மெல்லாம் ஈய்ந்து சாரப்பா நூல் எனக்குத் தாரு மென்று சற்றும் நீ கேளாதே சும்மா நில்லு பேரப்பா அவர் மனது கனிந்து தென்றால் பேசாமல் நூல் கொடுத்து அருள் ஈவாரே
சித்தர் பாடல்கள் – அகஸ்தியர் மெய்ஞானம்
கருத்து – சீடனின் ஆன்மீக நிலை குரு அறிவார் என்பதால் சீடன் தெரிவிக்காமலே குரு கற்றுத் தருவார் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஆசானை அடுத்து இருக்கின்ற விதத்தினை உரைக்கின்றேன்; சீடனானவன், மெய் ஞானத்தையும் மற்றும் அனைத்து விஷயங்களையும் போதிக்கின்ற உண்மையான ஆசானைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும். ஆசான் கேட்கின்ற அனைத்தையும் அவருக்கு அளித்து அவர் மனம் குளிரச் செய்யவேண்டும்; அவர் விரும்புகின்ற தனம் எல்லாம் ஈந்தாலும், அவரிடம் கற்றுத் தருவதைப்பற்றி குறிப்பிட்டு இதனை எனக்கு கற்றுத் தரவேண்டும் என்று கேட்கக் கூடாது; சீடனின் செயல்களில் மனம் குளிரும் ஆசானானவர் தேவையான அறிவையும் தந்து தனது அருளையும் ஈவார் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
விளக்கஉரை
குரு இறைவுணர்வின் வடிகாலாக இருப்பதாலும், உடல் அளவில் கர்ம யோகத்தின்படி பக்குவப்படுத்தியும், மனதளவில் விருப்பு வெறுப்புகளை விலக்கச் செய்தும் வழிகாட்டுவதால் சீடனின் வாழ்வுக்கான வரங்களில் முக்கியமானது அவருடன் தங்கி இருந்து பெறும் அனுபவமே முதன்மையானது
நூல் – மெய்ஞான அனுபவங்கள்
குரு – வழிகாட்டுபவர்; ஆசான் – வழி வகுத்து அந்த நெறிபடி நின்று உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்.
கருத்து – ஈசனின் குணங்களை சொல்லி அவரை வணங்குதலைப் பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
திருமுடியில் முல்லை மாலையை சூடியவனே, திருமேனி முழுவதும் திருநீறு பூசியவனே, எல்லை அற்றதான எண்குணங்களை உடையவனே, செங்கோட்டு யாழ் மற்றும் சீறி யாழ்போன்ற ஏழு நரம்புகள் உடைய யாழ் வகையில் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே, மயிர் நீக்கப்பட்ட உருண்டை வடிவினதாகிய கபாலம் எனும் மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே, உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை முழுவதும் நீக்குபவனே, ஓதுதலை உடைய தில்லைச் சிற்றம்பலத்தை விரும்பி அடைந்து இருப்பவனே, அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன்.
விளக்கஉரை
படைத்தல் – உடையனாதல்
சில்லை – வட்டம்
சிரை – மழிப்பு
செல்வன் – இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி – சிவனுக்கு உரித்தானதும், சைவ ஆகமத்தில் கூறப்பட்ட முறைப்படியும் எண்வகைப்பட்ட குணங்கள் தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர்-அருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என்பதால் எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ள கருத்து விலக்கப்படுகிறது. ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – முல்லை
புகைப்படம் மற்றும் செய்தி – விக்கிப்பீடியா
முல்லை என்னும் சொல் காட்டில் மலரும் வனமுல்லையை குறிக்கும்
பாரி வள்ளல் தன் தேரை வழங்கியது இந்த முல்லைக்குத்தான்
மருத்துவ குணங்கள் – மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு பெறுதல், தலைவலி நீக்குதல், கண் பார்வை கோளாறு நீக்குதல் போன்றவற்றை செய்யும்
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப் பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே
பதப்பிரிப்பு
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும் மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப் பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
எல்லா காலங்களிலும் வெற்றியை தரும் வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம்முடைய திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு எப்பொழுதும் நன்மையைத் தருகின்ற பெருமாளும், அசுரர் கூட்டம் அழியும்படி அக்கூட்டத்தை தூளாகச் செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்கள், தாண்டமுடியாத பிறவிப் பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்; எல்லா நலன்களையும் கெடுக்க கூடியதான வறுமைப் பிணியால் வேதனைப்பட மாட்டார்கள்.
விளக்கஉரை
சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகப் பெருமான். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை ஆனதால் மாயைக்கு குக மாயை என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான காரணம் மாயையே என்பதாலும் படைப்புத் தொழிலை செய்தவன் என்பதாலும் முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள்.
பிட்டு நேர்பட மண்சு மந்த பெருந்து றைப்பெரும் பித்தனே சட்ட நேர்பட வந்தி லாத சழக்க னேன்உனைச் சார்ந்திலேன் சிட்ட னேசிவ லோக னேசிறு நாயி னுங்கடை யாயவெங் கட்ட னேனையும் ஆட்கொள் வான்வந்து காட்டி னாய்கழுக் குன்றிலே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – சிவன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடையன் ஆயினும் தனக்கு அருளிய பெருங்கருணையை வியந்து உரைத்தது.
பதவுரை
முழுவதும் கற்று அறிந்தவனே, சிவலோகத்தினை தன் உலகமாக உடையவனே, பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறையில் உறையும் பெருமானே! உன் உரைக்கப்படுகின்ற கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை சார்ந்து அடைந்திலேன்; அத்தகைய குற்றம் உடையவன் ஆகியவனும் சிறுமை உடைய நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளுதல் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணையை எவ்வாறு வியந்து உரைப்பது?
விளக்கஉரை
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63வது படலம் மண் சுமந்த படலம்
பிட்டு நேர்பட – உண்ட பிட்டுக்கு அளவுக்கு ஒப்ப
சழக்கன் – பொய்யன்
சிட்டன் – உயர்ந்தோன், பெரியோர், கல்வி நிரம்பிய சான்றோர்
முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள் மூடனான் செய்த னம்மா மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு மோசங்கள் பண்ணி னேனோ என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே இக்கட்டு வந்த தம்மா ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து என்கவலை தீரு மம்மா சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே சிறுநாணமாகு தம்மா, சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள் சிவசக்தி காமாட்சி நீ அன்னவாகனமேறி யானந்தமாக உன் அடியன் முன் வந்து நிற்பாய் அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – பல ஜென்மாக்களில் தான் செய்த தவறுகளை உரைத்து தனக்கு கதி அளிக்கும்படி வேண்டி நிற்கும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! மூடனாக இருந்து முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக இதற்கு முன் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து வந்தேன்; பொய்யான ஒன்றை உண்மை என்று உரைத்து கைகளில் பொருள்களை தட்டிப்பறித்து மோசங்கள் செய்தேன்; என்னவென்று தெரியாமல் இக்கணத்தில் இத்துன்பம் வந்தது தாயே; செய்வது அறியாமல் இருக்கும் ஏழை ஆகிய நான் செய்த பிழைகளை பொறுத்து அருள் தந்து என் கவலைகளை நீக்க வேண்டும்; இத்துன்பங்கள் எல்லாம் சேர்ந்து வெற்றி எனும் ஜெயம் இல்லாமல் செய்து வெட்கப்பட வைக்கும் அளவில் தனக்கான அடையாளத்தினை பதிக்கிறது; சிவசக்தி எனும் காமாட்சி ஆகிய நீ பல உயிர்களை காப்பதன் பொருட்டு சிந்தனை கொண்டவளான நீ என்மீதும் சிந்தனை வைத்து எனக்கு நற்பாக்கியத்தினை அருள்வாயாக; உன்னை விரும்பும் உன் அடியவன் ஆகிய என்முன் அன்ன வாகனத்தின் மீது ஏறி ஆனந்தமாக வந்து நிற்பாயாக.
கருத்து – இறவாமல் இருத்தலில் பொருட்டு அமுததாரிணை எனும் பால் கறத்தல் வேண்டும் என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
இறப்பு கொள்ளுதல் எனும் மரணம் நிகழாமல் இருத்தலில் பொருட்டு சிரத்தில் இருந்து வெட்டவெளி என்றும் ஆகாயம் என்றும் நடனசபை என்றும் அழைக்கப்படும் அழைக்கப்படும் இடமாகிய அண்ணாக்கில் இருந்து பால் கறத்தல் எனும் அமுததாரிணையைப் பெற வேண்டும்.
விளக்கஉரை
அமுததாரணை – உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு
பால்கறத்தல் – அமுததாரணை. உயிர்கள் பசு என்பதாலும் ஞானம் அவர்களிடத்தில் மறைந்திருக்கும் என்பதாலும், பசுக்கள் தன் இயல்பாய் பால் கறத்தல் செய்ய இயல்பு அற்றவை என்பதாலும் பதி அருள்கொண்டு முயற்சியினால் அது சித்திக்கும் என்பதாலும் இவ்வாறு உரைக்கப்படுகிறது.
கருத்து – சிவன் சூடியுள்ள மலர்களை குறிப்பிட்டு அவர் அனைத்து உயிர்களுக்கு துணையாக இருப்பதை குறிப்பிடும் பாடல்.
பதவுரை
விரும்பத்தக்கதான காட்டுப்பள்ளி எனும் தலத்தில் உறைபவரும், அடும்பு மலர்கள், கொன்றை மலர்கள், வன்னி மலர்கள், ஊமத்த மலர்கள் ஆகியவற்றால் புனையப்பட்ட மாலையை சடையில் சூடி இருப்பவரும், ஒளிவீசும் முத்து போன்ற சோதி வடிவாக இருப்பவனும், கடம்ப மலர் மாலையினை அணிந்த முருகனின் தந்தையும் ஆகிய பெருமானே இந்த உடலோடு கூடி வாழும் உயிர்களுக்கு உற்ற துணைவர் ஆவார்.
விளக்கஉரை
அடும்பு – அடம்பமலர்
துடும்பல் – நிறைந்திருத்தல்
தூமணிச்சோதி – தூயமணியினது ஒளியை உடையவன்
கடம்பன் – கடம்பமலர்மாலை சூடிய முருகன்
தாதை – தந்தை
திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்கள் – அடும்பு
புகைப்படம் மற்றும் செய்தி - விக்கிப்பீடியா
• வேறு பெயர் அடம்பு • படரும் கொடி வகை சார்ந்தது • கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும் தன்மை உடையது • குணங்கள் – மருத்துவ மூலிகை, வயிற்றுப்போக்கை நிறுத்தக்கூடியது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.
கருத்து – வினை நீக்கம் செய்து முருகப் பெருமானும் ஒன்று சேர்தலை விரும்பி தெரிவிக்கும் பாடல்.
பதவுரை
சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடு ஆகுமாறு ஒலிக்கும்படியாக, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும் மற்றும் பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்தி உள்ள சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருக்காமல் நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றியும் ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகத்தினை உடையவராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், திருமகள் போன்றவளுமான வள்ளியுடன் கூடுதலை விரும்பியும் அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் உரித்தான பெருமாளே! பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை ஆகிய மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை செலுத்தி, சிவ நெறியில் நின்று, தனித்து மேலிடத்தே நிற்கும் சிவ ஜோதியை திருமணம் செய்து ஒன்று கூடுதல் போலக் கூடி, பிறவி தோறும் தொடர்ந்து விளங்கி நிற்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மலங்களும் உனது புன்னகையால் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபாடு கொண்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அத்தகையக் கலப்பால் இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் புதுமையானவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்கஉரை
இலி – இல்லாதவன், இல்லாதவள், இல்லாதது, இல்லாததைக் குறிக்கும் பின்னொட்டு
திரு ஒளி – ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்
காலின் இருவழி அடைபட்டு ஓடி – (கால்-பிராணவாயு) இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே செல்லும் பிராணவாயுவினை அடைத்து சுழுமுனை வழி மேலேற்றுதல்
சிவ வழியுடன் உற்று – சிவயோக நெறியை அடைந்து மூச்சைப் பிடித்து கும்பித்து நிறுத்திச் செய்வதாகிய ஹடயோகம்
ஏகபர மீதே – கருவி கரணங்கள் யாவும் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அதற்கு அப்பாலாக இருக்கக் கூடியதான ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.
தன்னம் தனி நின்றது தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ? மின்னும் கதிர்வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே (கந்தர்அநுபூதி)
எனும் பாடலும் ஒப்பு நோக்கி அறிக.
பாவை மணம் என மருவி – சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வது போல் இறைவனை அடைகின்ற முழுப் பக்குவம் இல்லை எனினும், சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த காலைநீர் எங்கே கரந்தனையால் – மாலைப் பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ இறைக்கூறாய் எங்கட்(கு) இது
பதினொன்றாம் திருமுறை – சிவபெருமான் திருமும்மணிக்கோவை – இளம்பெருமான் அடிகள்
கருத்து – சிவனின் வடிவ அழகை குறிப்பிட்டு ஊழிக்காலத்தில் தண்நீர் அனைத்தையும் எங்கு வைத்திருந்தாய் எனும் வியப்புடன் கேள்வி எழுப்பும் பாடல்.
பதவுரை
சாயுங்காலத்தில் தோன்றும் சந்திரனின் பிறைக்கீற்றையும், நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா தேவியையும் கொண்டுள்ளவரே! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் நடு இடத்தையும் இரண்டும் ஒன்றி நிற்கும் படியான ஊழிக்காலத்தில் நீரை எங்கே உள்ளடக்கி வைத்தாய்? இதனை அறியாது திகைக்கின்றோம். ஆகவே இதன் பொருட்டு எங்களுக்குப் பதில் சொல்வீராக.
கருத்து – உறக்கத்தில் உயிர் தன்னை அறியாமையினால் உடலில் இருந்து வேறுபட்டு மற்றொரு உயிர் என்பதை மறுதலிக்கும் பாடல்.
பதவுரை
அவயவங்கள் குறைபாடுகள் இல்லாமல் வாயுக்கள் ஒன்று கூடி உண்டான இந்த உடலில் அவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கும் மற்றொரு உயிர் என்று அறியத் தக்க உணர்வு தோன்றுமானால் உணர்ச்சி அற்ற நிலைக்கு செல்லக்கூடியதான இந்த உடலானது, பூதக்கூட்டத்தால் ஒன்றாக கூடி, குறைவின்றி கிடைக்கும் நிலை ஆகியதும் உறக்கத்திலும் அறிவு வெளிப்பட்டு உடலுக்கு உணர்வு உண்டாக வேண்டும் அல்லவா?
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்தும் இரேன் தேனேயும் மலர் கொன்றை சிவனே எம் பெருமானே எம் மானே உன் அருள் பெறு நாள் என்று என்றே வருந்துவனே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – திருவருளுக்கு உரித்தான நாள் எது என்று வருந்துவதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
தேன் உடைய மலர்களை உடைய கொன்றைப் பூக்களை அணிந்த சிவபெருமானே! ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகைப்பட்டு வரும் கர்மங்களை முன்வைத்து பற்றித் தொடரும் பிறவித் துன்பத்துக்கு யான் அஞ்ச மாட்டேன்; இறப்புக்கு என்ன கட்டுப்பாடு உடையவன்; வானில் ஆளும் தேவர் உலகத்தினையும் அங்கு நிலை பெறுவதினையும் வேண்டமாட்டேன்; மண்ணுலகத்தினை ஆளும் ஆள விரும்பமாட்டேன்; எம் தந்தையைப் போன்றவனும் என் இறையும் ஆனவனே! உன்னுடைய திருவருள் பெற்று உனக்கு உரியவன் ஆகும் காலம் எக்காலம் என்று மட்டுமே வருந்துவேன்; ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.
விளக்கஉரை
எம்மான் – என் மகன், எம் ஆண்டவன், எம் தந்தை
என் கடவேன் – கடப்பாடு உடையேன் அல்லேன்; எனவே, இறப்பைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை
வானேயும் – ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய் இரண்டு இடைச் சொற்கள் ஒன்றாய் வந்தன
அருள்பெறுநாள் – இந்த உடம்பினை நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தல்
கருத்து – ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் முப்பத்தி ஆறு தத்துவங்களை விலக்குதலே அதனை தெரியப்படுத்தும் எனும் கடுஞ் சுத்த சைவ நிலையை விளக்கும் பாடல்.
பதவுரை
ஆன்மவானது ஸ்தூல சூட்சம பர உடம்புகளாய் நிற்கும் முப்பத்தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிந்த நிலை உடைய பெரிய மாயை ஆகியவற்றால் சூழப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான ஆன்மாவினை சூழ்ந்து இருக்கும் ஆணவ மலத்தினை நீக்கும் பொழுது ஆன்மா தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும் என்பதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.
பொழுது விடிந்த தினிச்சிறிதும் பொறுத்து முடியேன் எனநின்றே அழுது விழிகள் நீர்தளும்பக் கூவிக் கூவி அயர்கின்றேன் பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் பட்ட திலையோ பலகாலும் உழுது களைத்த மாடனையேன் துணைவே றறியேன் உடையானே.
வள்ளலார் பாடல்கள் (வாதனைக் கழிவு)
கருத்து – துன்பம் கொண்ட பொழுதில் திருவருள் விரைந்து எய்தாமைக்குத் துணிவுற்று வேறு துணை அறியேன் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
எல்லாமும் உடைய பெருமானே, இரவு முழுவதும் துன்பம் கொண்டுக் கிடந்த எனக்குப் பொழுது விடிந்தும் அத்துன்பம் நீங்காமையால் இனிச் சிறிது பொழுதும் பொறுக்க மாட்டேன் என்று கண்களில் கண்நீர் நிறைந்து தொழுதும் அழுதும் நின்னை ஓலமிட்டு கூவி அரற்றியும் சோர்கின்றேன்; நிலத்தை உழுது மெலிவுற்ற மாடு போன்ற யான், உன்னைத் தவிர துணையாக வேறு ஒருவரையும் காணேன்; அடியார்களின் துன்பத்தினை துடைக்கும் உன்னுடைய திருச்செவியில் என்னுடைய அழுகுரல் கேட்கவில்லையோ; நின் திருவருளை அளித்து அருள்க என்பது மறை பொருள்.
விளக்க உரை
கூவுதல் – பறவை கூவுதல், சத்தமிடுதல், யானை முதலியன பிளிறுதல், ஓலமிடுதல், அழைத்தல்
பொழுது விடிந்தது – இரவெல்லாம் உறக்கமின்றி வருந்தினமை
இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் – இரவு முழுதும் துன்பத்தால் வருந்தினமை
பழுது தவிர்க்கும் திருச் செவிக்குள் பட்டதிலையோ – துன்புற்று வருந்துவோர் துயர்களை சொல்லி முடிப்பதற்குள் அத்துயரங்களுக்கு ஏதுவாகிய குற்றத்தைப் போக்கும் அருளாளன் இன்னும் தன் துயரங்களை கேட்கவில்லை எனும் பொருள் பற்றியது
உழை – இடம், பக்கம், அண்மை, மான், கலைமான் (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ், உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
(தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
தும்பை – ஒரு வகை மூலிகைச்செடி, தும்பை வெண்மையின் அடையாளம்
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய் புத்திகளைச் சொல்லவில்லையோ, பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை பிரியமாய் வளர்க்க வில்லையோ, கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக் கதறி நானழுத குரலில், கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன் காதினுள் நுழைந்த தில்லையோ இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா இனி விடுவதில்லை சும்மா, இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும் இதுதரும மல்ல வம்மா, எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார் ஏதும் நீதியல்ல வம்மா, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – என் மீது வன்மங்களைக் கொண்டு அருள் புரியாமல் இருந்தாலும் உன்னைவிட்டு விலகமாட்டேன் என்று உரைக்கும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே! தீய செயல்களில் இருந்து மாறாமல் இருக்கும் கடுமை உடைய பிள்ளை எனினும் பெற்ற தாய் புத்திகளை சொல்லி திருத்தவில்லையா? கடுமையும் வெறித்தனம் கொண்டு உடைய பிள்ளை எனினும் தான் பெற்ற பிள்ளையை தாய் பிரியமாக வளர்க்க மாட்டாளா? உன்னைப் பற்றி அறியக்கூடியதான அறிவினை பெறாமலும் இடைவிடாமல் மூச்சு விடாமல் வாய்விட்டு கதறி நான் அழும் குரலில் கடுகினில் ஒரு நூறு பகுதி கூட உன் காதில் விழவில்லையா? எதன் பொருட்டு என் மீதினில் இல்லாத வன்மங்களைக் கொண்டு இருக்கிறாய்? நாம் இருவரும் இறந்து போகும்படி சண்டை இட்டுக் கொண்டு தெரிவினில் விழ்வதற்கான தருணம் அல்ல, இது தருமமும் அல்ல; இவ்வாறு நிகழ்வதால் எல்லோரும் உன்னையே சொல்லியே இகழ்ந்து பேசுவார்கள், இது நீதியல்ல. இனி உன்னை விட்டு விலக மாட்டேன்.
கருத்து – ஈசனால் படைக்கப்பட்டதே பிரபஞ்சமும் இயக்கமும் என்று கூறி அதை அளிப்பது பஞ்சாட்சரமே என்பதை உரைக்கும் பாடல்.
பதவுரை
அண்ணல் என்று போற்றப்படும் கடவுளாகிய சிவனால் தோற்றுவிக்கப்பட்டதே இரகசியங்களை உள்ளடக்கியதும், மறை பொருள் ஆனதும் ஆன அருமறைகளும். காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும். இவைகள் அஞ்செழுத்தில் அடங்கும்; வேதாகமங்களும், ஆதி புராணங்கள் அனைத்தும் பரமேசுவரன் அருளிய அரிய பஞ்சாக்கரதில் அடங்கும்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமானதும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகின்றதுமான ஆனந்தத் தாண்டவமாகவும், முப்பத்து ஆறு தத்துவங்களைக் கடந்து மோனாந்தமாகவும், பரமுக்தியினை அளிப்பதும் பஞ்சாட்சரமே.
கருத்து – காளை, கங்கை, உமையம்மை சூழ இருந்தும் யாசிப்பது குறித்து பழிப்பது போல் புகழும் பாடல்.
பதவுரை
பெரும் கோவிலில் உறையும் இறையவனே! உன்னையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அண்ணாந்து பார்த்துகொண்டிருக்கும் எருது ஆகிய காளை உன்னிடம் இருக்கிறது; (இக்காரணம் பற்றி உழுது உண்ணலாம்). நீர்ப்பாய்ச்சலை உடையதும், நல்ல நிலத்தினை தோற்றுவிப்பதும் ஆனதும் பெருகிப் பாய்வதும் ஆன கங்கை உன்னிடம் இருக்கிறது. பாக்கியவதி ஆகிய உன் மனைவி உன்னோடு பங்கு போட்டுக்கொண்டு உன்னை விட்டு நீங்காமல் கிடக்கிறாள்; இவையெல்லாம் இருந்தும் யாசித்து உண்கிறாய். உன்னிடம் இரப்பவர்களுக்கும் நீ எதுவும் தருவதில்லை. ஏனோ?
கருத்து – தன் வினைகளை நீக்கி அருள் புரியவேண்டும் என விண்ணப்பிக்கும் பாடல்.
பதவுரை
உடையவனே! உன் அடியார்களில் சிலர் வினைநீக்கம் பெற்று உன்னிடத்தில் மிக்க அன்பு கொண்டு உன்னுடைய அருளைப் பெற்றார்கள்; உன்னுடைய அடியவனாகிய நானோ வீணாக வினை நீக்கம் கொள்ளாமல் துர்நாற்றமுடைய பிணத்தைப் போன்று தொய்வடைந்து வயதுமுதிர்கின்றேன்; உன்னுடைய அருளை பெற்ற பின்னும் இளகாத மனமுடை அடியேனுடைய கொடுமையான வினைகளை நீக்கி, அடியேனது உள்ளத்தில் உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம் இடைவிடாது உருகும்படி அருள் புரிவாயாக.
கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.
பதவுரை
எளிதாக விளங்கக் கூடியதான முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.
விளக்க உரை
ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும். உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.