
பாடல்
வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் – மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட்(கு) இது
பதினொன்றாம் திருமுறை – சிவபெருமான் திருமும்மணிக்கோவை – இளம்பெருமான் அடிகள்
கருத்து – சிவனின் வடிவ அழகை குறிப்பிட்டு ஊழிக்காலத்தில் தண்நீர் அனைத்தையும் எங்கு வைத்திருந்தாய் எனும் வியப்புடன் கேள்வி எழுப்பும் பாடல்.
பதவுரை
சாயுங்காலத்தில் தோன்றும் சந்திரனின் பிறைக்கீற்றையும், நெற்றிக் கண்ணையும், இடப்பாகத்தில் உமா தேவியையும் கொண்டுள்ளவரே! கடலின் உச்சியையும் ஆகாயத்தின் நடு இடத்தையும் இரண்டும் ஒன்றி நிற்கும் படியான ஊழிக்காலத்தில் நீரை எங்கே உள்ளடக்கி வைத்தாய்? இதனை அறியாது திகைக்கின்றோம். ஆகவே இதன் பொருட்டு எங்களுக்குப் பதில் சொல்வீராக.
விளக்க உரை
- வேலை – பணி, தொழில், உத்தியோகம், காரியம், கடல்
- கீற்றன் – இடைக் குறைந்து கீறன்
- வேலை முகடு – கடலின் உச்சி
- விசும்பு அகடு – வானத்தின் நடுவிடம்