
பாடல்
மூலம்
யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம்
மானேயுன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே
பதப்பிரிப்பு
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்தும் இரேன்
தேனேயும் மலர் கொன்றை சிவனே எம் பெருமானே எம்
மானே உன் அருள் பெறு நாள் என்று என்றே வருந்துவனே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து – திருவருளுக்கு உரித்தான நாள் எது என்று வருந்துவதைக் குறிக்கும் பாடல்.
பதவுரை
தேன் உடைய மலர்களை உடைய கொன்றைப் பூக்களை அணிந்த சிவபெருமானே! ஆகாமியம் சஞ்சிதம் பிராரப்தம் என மூன்று வகைப்பட்டு வரும் கர்மங்களை முன்வைத்து பற்றித் தொடரும் பிறவித் துன்பத்துக்கு யான் அஞ்ச மாட்டேன்; இறப்புக்கு என்ன கட்டுப்பாடு உடையவன்; வானில் ஆளும் தேவர் உலகத்தினையும் அங்கு நிலை பெறுவதினையும் வேண்டமாட்டேன்; மண்ணுலகத்தினை ஆளும் ஆள விரும்பமாட்டேன்; எம் தந்தையைப் போன்றவனும் என் இறையும் ஆனவனே! உன்னுடைய திருவருள் பெற்று உனக்கு உரியவன் ஆகும் காலம் எக்காலம் என்று மட்டுமே வருந்துவேன்; ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.
விளக்க உரை
- எம்மான் – என் மகன், எம் ஆண்டவன், எம் தந்தை
- என் கடவேன் – கடப்பாடு உடையேன் அல்லேன்; எனவே, இறப்பைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை
- வானேயும் – ஏகாரம் தேற்றமும், உம்மை உயர்வு சிறப்புமாய் இரண்டு இடைச் சொற்கள் ஒன்றாய் வந்தன
- அருள்பெறுநாள் – இந்த உடம்பினை நீக்கித் தன்னோடு உடனாகச் செய்தல்