
பாடல்
சுடர்மணிக் குழையும் மலர்க்கரத்(து) உழையும்
தும்பிகள் இடைஇடை நுழையும்
தும்பைமா லிகையும் வம்புவார் சடையும்
துண்டவெண் பிறையு(ம்)முந் நூலும்
நடநபங் கயமும் கிரணகங் கணமும்
நங்கைபங்(கு) அமர்ந்தசுந் தரமும்
நயன(ம்)மூன்(று) உடைய கோலமும் கண்டோர்
நமனையும் காணவல் லவரோ?
கொடிபல தொடுத்த நெடியமா மணிப்பொற்
கோபுரம் பாரிடம் தொடுத்துக்
கொழுந்துவிட்(டு) எழுந்து வான்நில(வு) எறிப்பக்
கொண்டல்வந்(து) உலவியே நிலவும்
கடிமலர்த் தடமும் சுருதிஓ திடமும்
கன்னிமா மாடமும் சூழ்ந்து
கநவளம் சிறந்த கடவைஅம் பதியாய்!
காலனைக் காய்ந்ததற் பரனே!
திருக்கடவூர் காலசம்ஹார மூர்த்தி பதிகம் – அபிராமி பட்டர்
கருத்து – திருக்கடையூரின் பெருமைகளையும், சிவபிரான் உருவ வர்ணனையும் கூறும் பாடல்.
பதவுரை
நெடியதும் கொடிகள் உடையதும் ஆன மணி ஒத்த பொன் போன்ற கோபுரங்களை உடையதும், பூத கணங்களால் கொழுந்து விட்டு எரிவதைப் செய்யப்பட்டதான வான் நிலவும், அந்த வான் நிலவை தைப்பதான மேகங்கள் வந்து உலவக் கூடியதும், சிறப்புகள் உடைய தடமானதும், வேத சுருதிகள் ஒலிக்கக் கூடியதானதும், கன்னிமாடங்கள் நிறைந்ததும் சிறந்த வளங்கள் நிரம்பப்பெற்றதும் ஆன திருக்கடையூர் எனும் தலத்தை பதியாக உடையவனே, காலனை துன்பம் கொள்ளச் செய்தவனே! சுடரைப் போன்று ஒளிர்தலை உடைய குழையை அணிந்தவனும், மலர் போன்ற கரத்தினில் மானை உடையவனும், வண்டினங்கள் இடை இடையில் நுழைந்து செல்லக்கூடிய வெண்மை நிறம் கொண்ட தும்பை மாலையை உடையவனும், வளைந்து சரியான முறையில் அமையப்பெற்ற சடையை உடையவனும், துண்டம் எனப்படுவதான சிறிய அளவு உடைய வெண்மையான பிறையை அணிந்தவனும், முப்புரி நூலை அணிந்தவனும், அசைந்து ஆடக்கூடிய தாமரை மலரைக் கொண்டவனும், கிரணங்களை உடைய கைவளையைக் கொண்டவனும், உமா தேவியை தன்னின் இடப்பாகத்தில் கொண்டு அழகிய தோற்றம் உடையவனும், மூன்று கண்கள் உடைய கோலமும் கண்டவர்கள் நமனைக் காண வலிமை உடையவர்கள் ஆவாரோ?
விளக்க உரை
- உழை – இடம், பக்கம், அண்மை, மான், கலைமான் (ஆண்மான்), உப்புமண், உவர்மண், யாழின் ஒரு நரம்பு, ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் உழை, பூவிதழ், உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றில் அல்லது ஒரு செயலில் ஈடுபடுத்துவது, முயற்சி செய்வது, உதவு, பணம், பொருள் முதலியன ஈட்டு, சம்பாதி
- (தன் உடலால்) வருத்தி ஒன்றைச் செய்
- தும்பை – ஒரு வகை மூலிகைச்செடி, தும்பை வெண்மையின் அடையாளம்
- மாலிகை – மாலை, வரிசை, சீமைச் சணல்
- காய்தல் – உணங்குதல், உலர்தல், சுடுதல், மெலிதல், வருந்தல், விடாய்த்தல், வெயில்நிலாக்கள் எறித்தல், எரித்தல், அழித்தல், விலக்குதல், வெறுத்தல், வெகுளுதல், கடிந்துகூறுதல், வெட்டுதல்
- பாரிடம் – பூதகணம்
- கடவை = திருக்கடவூர்