அமுதமொழி – விகாரி – கார்த்திகை- 23 (2019)


பாடல்

இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே

முதலாம் திருமுறை – தேவாரம் – திருஞானசம்பந்தர்

கருத்து – இராவணனுக்கு அருளியவனும், பஞ்ச பூதங்களைப் படைத்தவனும் ஆகிய ஈசன் உறையும் இடம் பனையூர் எனும் திருத்தலம் என்பதை கூறும் பாடல்.

பதவுரை

எளிதாக விளங்கக் கூடியதான  முடியினை கொண்ட பத்து தலைகளை உடைய இராவணனுக்கு துன்பம் வருமாறு செய்து, பின் அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின் உள்ள உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்து அளித்தவனும் ஆகிய சிவபெருமானனின் ஊர் திருப்பனையூர் எனும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனின் ஊர் பனையூர் என்கின்ற பொருள் கொண்டும் ‘மற்றும் பல’ என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையும் படைத்துக் கண்டவன் எனும் பொருளாகவும் விரியும்.  உலகினையும், உலக பொருள்களையும் படைத்தவன் சிவன் எனும் சைவ சித்தாந்த பொருளுடன் ஒப்பு நோக்கி உணர்க.
  • அலல் – துன்பம்; அல்லல் என்பதன் திரிபு.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply