
பாடல்
ஆசானை அடுக்கிற விதம்
காரப்பா இந்நூலைத் திருந்தோர் பாதம்
காரடா வருடமது பனிரெண்டாண்டு
சீரப்பா பணிவிடைகள் எல்லாம் செய்து
சிவசிவா கேட்டதன்ம மெல்லாம் ஈய்ந்து
சாரப்பா நூல் எனக்குத் தாரு மென்று
சற்றும் நீ கேளாதே சும்மா நில்லு
பேரப்பா அவர் மனது கனிந்து தென்றால்
பேசாமல் நூல் கொடுத்து அருள் ஈவாரே
சித்தர் பாடல்கள் – அகஸ்தியர் மெய்ஞானம்
கருத்து – சீடனின் ஆன்மீக நிலை குரு அறிவார் என்பதால் சீடன் தெரிவிக்காமலே குரு கற்றுத் தருவார் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
ஆசானை அடுத்து இருக்கின்ற விதத்தினை உரைக்கின்றேன்; சீடனானவன், மெய் ஞானத்தையும் மற்றும் அனைத்து விஷயங்களையும் போதிக்கின்ற உண்மையான ஆசானைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும். ஆசான் கேட்கின்ற அனைத்தையும் அவருக்கு அளித்து அவர் மனம் குளிரச் செய்யவேண்டும்; அவர் விரும்புகின்ற தனம் எல்லாம் ஈந்தாலும், அவரிடம் கற்றுத் தருவதைப்பற்றி குறிப்பிட்டு இதனை எனக்கு கற்றுத் தரவேண்டும் என்று கேட்கக் கூடாது; சீடனின் செயல்களில் மனம் குளிரும் ஆசானானவர் தேவையான அறிவையும் தந்து தனது அருளையும் ஈவார் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
விளக்க உரை
- குரு இறைவுணர்வின் வடிகாலாக இருப்பதாலும், உடல் அளவில் கர்ம யோகத்தின்படி பக்குவப்படுத்தியும், மனதளவில் விருப்பு வெறுப்புகளை விலக்கச் செய்தும் வழிகாட்டுவதால் சீடனின் வாழ்வுக்கான வரங்களில் முக்கியமானது அவருடன் தங்கி இருந்து பெறும் அனுபவமே முதன்மையானது
- நூல் – மெய்ஞான அனுபவங்கள்
- குரு – வழிகாட்டுபவர்; ஆசான் – வழி வகுத்து அந்த நெறிபடி நின்று உதாரணமாக வாழ்ந்து காட்டுபவர்.