
பாடல்
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
சிவவழி யுடனுற் றேக …… பரமீதே
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
திரிபுர மெரியத் தீயி …… னகைமேவி
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
யிருள்கதி ரிலிபொற் பூமி …… தவசூடே
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
ரிளையவ னெனவித் தார …… மருள்வாயே
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
பழமறை பணியச் சூல …… மழுமானும்
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
பரியினை மலர்விட் டாடி …… அடியார்கள்
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
மருள்செயு முமையிற் பாக …… ரருள்பாலா
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
டடியவர் கயிலைக் கான …… பெருமாளே
திருப்புகழ் – அருணகிரிநாதர்
கருத்து – வினை நீக்கம் செய்து முருகப் பெருமானும் ஒன்று சேர்தலை விரும்பி தெரிவிக்கும் பாடல்.
பதவுரை
சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடு ஆகுமாறு ஒலிக்கும்படியாக, பிரமன், ருத்திரன், திருமால் ஆகிய முத்தேவர்களும் மற்றும் பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, கைகளில் ஏந்தி உள்ள சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருக்காமல் நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றியும் ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகத்தினை உடையவராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், திருமகள் போன்றவளுமான வள்ளியுடன் கூடுதலை விரும்பியும் அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் உரித்தான பெருமாளே! பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை ஆகிய மார்க்கங்கள் அடைபடும்படி மூச்சை செலுத்தி, சிவ நெறியில் நின்று, தனித்து மேலிடத்தே நிற்கும் சிவ ஜோதியை திருமணம் செய்து ஒன்று கூடுதல் போலக் கூடி, பிறவி தோறும் தொடர்ந்து விளங்கி நிற்கும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மும்மலங்களும் உனது புன்னகையால் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் தீய்ந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபாடு கொண்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, அத்தகையக் கலப்பால் இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் புதுமையானவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக.
விளக்க உரை
- இலி – இல்லாதவன், இல்லாதவள், இல்லாதது, இல்லாததைக் குறிக்கும் பின்னொட்டு
- திரு ஒளி – ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்
- காலின் இருவழி அடைபட்டு ஓடி – (கால்-பிராணவாயு) இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே செல்லும் பிராணவாயுவினை அடைத்து சுழுமுனை வழி மேலேற்றுதல்
- சிவ வழியுடன் உற்று – சிவயோக நெறியை அடைந்து மூச்சைப் பிடித்து கும்பித்து நிறுத்திச் செய்வதாகிய ஹடயோகம்
- ஏகபர மீதே – கருவி கரணங்கள் யாவும் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அதற்கு அப்பாலாக இருக்கக் கூடியதான ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.
தன்னம் தனி நின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே (கந்தர்அநுபூதி)
எனும் பாடலும் ஒப்பு நோக்கி அறிக.
- பாவை மணம் என மருவி – சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வது போல் இறைவனை அடைகின்ற முழுப் பக்குவம் இல்லை எனினும், சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன்.