பாடல்
மூலம்
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே
பதப்பிரிப்பு
முடியாப் பிறவிக் கடலில் புகார், முழுதும் கெடுக்கும்
மிடியால் படியில் விதனப்படார், வெற்றிவேல் பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலம் அடங்கப்
பொடியாக்கிய பெருமாள் திருநாமம் புகல்பவரே
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்து – முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள் என்பதை விளக்கும் பாடல்.
பதவுரை
எல்லா காலங்களிலும் வெற்றியை தரும் வேலாயுதத்தைத் தாங்கியவரும், தம்முடைய திருவடிகளை வணங்குகின்ற அடியவர்களுக்கு எப்பொழுதும் நன்மையைத் தருகின்ற பெருமாளும், அசுரர் கூட்டம் அழியும்படி அக்கூட்டத்தை தூளாகச் செய்த பெருமாளுமாக விளங்கும் திருமுருகப்பெருமானின் திருநாமத்தை ஓதுபவர்கள், தாண்டமுடியாத பிறவிப் பெருங்கடலில் மூழ்கமாட்டார்கள்; எல்லா நலன்களையும் கெடுக்க கூடியதான வறுமைப் பிணியால் வேதனைப்பட மாட்டார்கள்.
விளக்க உரை
- சிவ, சக்தி அம்சமான சச்சிதானந்த ஸ்வரூபமே முருகப் பெருமான். அந்த சச்சிதானந்தப் பரப்பிரம்மத்தையே, சோமாஸ்கந்தர் என்று போற்றி வழிபடுகிறோம். ஞான வடிவான முருகப் பெருமானின் சித் எனும் சக்தியே பிரகிருதி மாயை ஆனதால் மாயைக்கு குக மாயை என்னும் பெயரும் உண்டு. பிரம்மா முதலான காரணம் மாயையே என்பதாலும் படைப்புத் தொழிலை செய்தவன் என்பதாலும் முருகப் பெருமானை வணங்குபவர்கள் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் இருப்பார்கள்.
- அவுணர் – அசுரர்